எமது சேவைகள்


தொடக்க காலத்தில் நூலக நிறுவனமானது எண்ணிம நூலகம் சார்ந்த செயற்பாட்டிலே முதன்மையாக ஈடுபட்டு வந்தது. இப்பொழுது ஆவணப்படுத்தல், ஆவணகப்படுத்தல் துறைகளிலும் தனது பணியை விரிவாக்கியுள்ளது.  ஆராய்ச்சி அடிப்படையிலான ஆவணப்படுத்தல், அறிவைப் பரப்புதல் சார்ந்தும் எமது நிகழ்ச்சித் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  நூலக நிறுவனம் தமது நோக்கங்களுக்கிசைய மேற்கொள்ளும் சேவைகள்/செயத்திட்டங்கள் பின்வரும் நான்கு நிகழ்ச்சித்திட்ட பகுதிகளினூடாக முன்னெடுக்கப்படுகின்றன.

1.    ஆய்வும் ஆவணப்படுத்தலும்
2.    எண்ணிமப் பாதுகாப்பும் ஆவணகமும்
3.    அறிவு மற்றும் தகவற் சேவைகள்
4.    அறிவுப் பரவலாக்கம்

நூலக நிறுவன எண்ணிம நூலகம்

(Noolaham Digital Library)

இணையத்தில் காணப்படும் மிகப்பெரிய தமிழ் எண்ணிம நூலகமாக, நூலக நிறுவன எண்ணிம நூலகம் (www.noolaham.org) காணப்படுகிறது. இது இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களுடைய 15,000ம் மேற்பட்ட பல்வேறு வகையான வளங்களை உள்ளடக்கியுள்ளது. இந் நூலக நிறுவனம் உள்ளூர் அறிவினை ஒன்று சேர்ந்தும், தகவல் சேவைகளை வழங்கியும் இலங்கையின் அறிவு அபிவிருத்தியில் பங்களிப்புச்செய்கின்ற ஓர் சிறந்த கற்கை நிறுவனமாக தொழிற்பட்டுவருகிறது. இதனூடாக மாணவர்கள், ஆய்வாளர்கள், வரலாற்றாளர்கள், செயற்பாட்டாளர்கள், சமூகத்துக்கு நூலக நிறுவனம் முக்கிய சேவைகளை வழங்குகின்றது.

சேகர அபிவிருத்தி (Collection Development)

சேகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமானது விரிவான சேகரங்களை உருவாக்கி அவற்றை மாணவர்கள் மூலமும் ஆய்வாளர்கள் மற்றும் சமூகங்கள் மூலமும் பயன்படுத்தும் வண்ணம் வடிவமைத்து அவர்களுக்கு தேவையான தகவல்களை முழுமையாக திருப்திப்படுத்தும் விதமாக வழங்கல்.

நூலக நிறுவனம், வெளிப்படையாக மற்றும் பரிமாறக்கூடிய சேகர களஞ்சியங்களை வளர்க்கும் நோக்கத்துடன் பாடசாலைகளுக்கும், இலாப நோக்கற்ற மற்றும் கலாச்சார நிறுவனங்களுக்கும் எண்ணிமப்படுத்தல் மற்றும் ஆவணப்படுத்தல் சேவைகளை வழங்குகின்றது. மேலும் நிறுவனங்களின் அறிவுத்தொகுதிகள் மற்றும் வரலாற்று ஞாபக ஆவண்ங்களை பாதுகாத்தும், பிறருக்கு பகிர்ந்தும் அந் நிறுவனங்களுக்கு உதவிபுரிகிறது. இன்றைய திகதிவரை “பெண்கள் கல்வி மற்றும் ஆய்வு நிலையம்”, “இனத்துவக்கற்கைகளுக்கான சர்வதேச நிலையம்”, முதலியவற்றின் நிறுவன சேகரிப்புக்களை எண்ணிமப்படுத்தியிருப்பதுடன் “கொழும்பு றோயல் கல்லூரி”, “யாழ் இந்துக் கல்லூரி’’, “மற்றும் யாழ் வேம்படி மகளீர் உயர்தர பாடசாலை” முதயியவற்றின் சேகரங்களை எண்ணிமப்படுத்தி இறுவட்டினையும் வெளியிட்டுள்ளது.

நூலகத்தின் விசேட சேகரங்கள் செயற்றிட்டமானது எமது சமூகத்துடன் தொடர்புபட்டு காணப்படுகின்ற, ஆனாலும் தமது தனித்துவத்தினை பாதுகாப்பதில் சவால்களை எதிர்கொள்ளும் மற்றும் அருகிக்காணப்படும் வளங்கள்மேல் உற்று நோக்கிய மற்றும் அர்ப்பணிப்பான ஆதாயத்தினை வழங்கி ஆய்வுக்கு உதவுதல், ஆவணப்படுத்துதல், எண்ணிமப்படுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதலை நோக்கமாக கொண்டுள்ளது. அத்துடன் முஸ்லிம் ஆவணப்படுத்தல் மற்றும் மலையக ஆவணப்படுத்தல் போன்ற சேகரங்கள் முன்னேற்றம் கண்டு இருக்கின்றது. மேலும், நூலக நிறுவனமானது “அலை, Tamil times, ஞானம், சரிநிகர், தினமுரசு மற்றும் புதிய பூமி போன்றன உள்ளடங்களான பருவ வெளியீடுகளின் முழு பகுதிகளையும் ஆவணப்படுத்தும் செயற்றிட்டங்களை செயல்ப்படுத்தி இருக்கின்றது.

பள்ளிக்கூடம்

(Virtual Learning Environment)

பள்ளிக்கூடம் செயத்திட்டம், முறையான கல்வியியலை இணைத்த, கல்வி வடிவத்தின் வேறொரு பரிமாணமானதுடனும்,  இலங்கைத்தமிழ் பேசும் சமூகங்களிலுள்ள மாணவர்களின் மத்தியில் ஆரம்ப மட்டத்திலிருந்து மெய்நிகர் கற்றலை நடைமுறைப்படுத்தி கற்றலுக்கு உதவும் நோக்கத்தோடும் எழுந்தது. இது கல்வியியலை, சமூகத்தின் மக்கள் ஸ்தாபனங்களின் இரு மருங்கையும் வலுப்படுத்துவதாக ஊக்குவிக்கிறது. இந்த செயற்றிட்டத்தின் முதல் கட்டமாக (www.epallikoodam.org) வலைத்தளத்தினூடாக புத்தகங்கள் சார் வளங்களை கொண்ட மாதிரி தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை வளங்கள் (Reference Resources)

நூலகம் நிறுவனம் மக்களைப் பற்றிய தரவுகள், இடங்கள் மற்றும் நிறுவனங்களைப் பற்றிய தரவுகளைச் சேகரித்து கலைக்களஞ்சிய உசாத்துணை வளங்களை உருவாக்கியும், அவற்றை அனைவரும் பாவிக்கக் கூடியதாக செய்துள்ளது. இதுவரைக்கும் 1300 க்கும் மேற்பட்ட ஆளுமைகள் பற்றியதும், 1200 க்கும் அதிகமான நிறுவனங்களைப் பற்றியதுமான தகவல்கள் சேகரிக்கப்பட்டு இருக்கின்றன.

அவ்வகையில் இலங்கைத் தமிழ்ச் சமூகங்களைச் சேர்ந்த ஆளுமைகள் தொடர்பான மிகப் பரந்த யார் எவர் தரவுத்தளமொன்று முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் உயிர் பல்வகமை, நுண் காலம், பொருளியல் தரவுகள், வேலைகள், சமூக குறிகாட்டிகள் போன்ற குறிப்பிட்ட சமூகம் சார் அமைப்பின் தரவுத்தொகுதிகளினைப் பற்றியும் சேகரிப்புக்களை உள்ளடக்கும் எண்ணம் உண்டு.

எண்ணிம ஆவணகம் (Digital Archive)

ஈழத்துத் தமிழர்களுடன் தொடர்புடைய வெளியீடுகளை, எழுத்தாவணங்களை எண்ணிம வடிவங்களில் ஆவணப்படுத்திப் பாதுகாக்கும் முயற்சி. இவ்வாறு எண்ணிமப் படுத்தும் ஆவணங்களில் புத்தகங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள், செய்தித்துணுக்கங்கள், கையேடுகள், அறிக்கைகள், ஞாபகச் சின்னங்கள் மற்றும் வரலாற்றுக் குறிப்புக்கள், ஆண்டு வெளியீடுகள், துண்டுப்பிரசுரங்கள், அழைப்பித்ல்கள், ஞாபகார்த்த வெளியீடுகள், விளக்கவுரைகள், நிரந்தரமல்லாத எழுத்தாவணங்கள், விளம்பரவெளியீடுகள், உசாத்துணைகள் போன்றவைகள் அடங்குகின்றன. நூலக நிறுவனம் அதன் செயற்றிட்டங்கள் ஊடாக 2015 வரை 15,000 க்கும் அதிகமான அச்சுப்பிரதிகளை ஆவணப்படுத்தியுள்ளது.

சுவடி ஆவணகம் (Manuscripts Archive)

இலங்கையில் 8ஆம் நூற்றாண்டு தொடக்கம் 16ஆம் நூற்றாண்டுகளிலும் பிந்திய நவீன காலத்திலும் உருப்பெற்ற, தனி நபர்களுடனும் நிறுவனங்களுடனும் தொடர்புபட்ட பாரிய எண்ணிக்கையான தமிழ் ஓலைச்சுவடி எழுத்தாவணங்கள் இருககின்றன. இவ் ஓலைச்சுவடி எழுத்தாவணங்கள் பாரம்பரிய வைத்திய முறைகள், சட்டங்கள், வரலாறுகள், தொழில் நுட்பங்கள் மற்றும் சமயங்கள் தொடர்பான விடயங்களை உள்ளடக்கியுள்ளன. இவற்றின் பெரும்பாலானவைகள் அச்சில் வெளிவரவில்லை. மேலும் பெருந்தொகையான சமகால கையெழுத்தாவணங்கள், குறிப்பாக கடிதங்கள், நாட்குறிப்புக்கள், குறிப்புப் புத்தகங்கள் போன்றனவும் காணப்படுகின்றன. நூலக நிறுவனத்தினுடைய சுவடி எழுத்தாவண செயற்றிட்டமானது இவற்றை இனம் கண்டு, வகைப்படுத்தி, எண்ணிமப்படுத்துவதுடன் அவற்றை பரந்த புலமைவாத சமுதாயமும், பொது சமூகமும் பயன்படுத்தக்கூடியதாக்கியுள்ளது. ஓலைச் சுவடி எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்துவதற்கு விசேட கையாளுகையும் விசேட உபகரணங்களும் தேவைப்பட்டது. இன்றைய திகதியில் நூலக நிறுவனம் சுண்ணாகம் மற்றும் யாழ்ப்பாண நூலகத்தினுடனான எழுத்தாவண எண்ணிமப்படுத்தல் செயற்றிட்டத்தினை செயற்படுத்தி முடித்துள்ளது.

பல்லூடக ஆவணகம் (Multimedia Archive)

ஒலிக் கோப்புக்கள், ஒளிக் கோப்புக்கள், புகைப்படங்கள், வரைபடங்கள் போன்ற பல்லூடக ஆவணங்களைச் சேகரித்துப் பாதுகாக்கும் நோக்கத்தினைக் கொண்டமைந்த நிகழ்ச்சித் திட்டம் இதுவாகும். இவ் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்ப நிலையிலேயே காணப்படுகிறது. புகைப்பட ஆவணமாக்கல் ஆரம்ப செயத்திட்டம் தற்போது முன்னேற்றம் கண்டுகொண்டிருக்கிறது. இது 2015ம் ஆண்டளவில் வலைத்தளத்தில் விடப்படும் என்று எதிர் பாக்கப்படுகிறது.

நூலக வெளியீடுகள் (Noolaham Publications)

நூலக நிறுவனம் கட்டுரைத் தொகுப்புக்கள், அரிய நூல்களின் மறுபதிப்புக்கள், ஆய்விதழ், இதழ் வெளியீடு போன்ற பதிப்பு முயற்சிகளை செய்துவருகிறது. இந்நிகழ்ச்சித்திட்டம் நிறுவனத்தின் மூலோபாயத் திட்டங்களை வெளியுலகினை அடையச்செய்யும் ஓர் பகுதியாகவும், ஆவணப்படுத்தல், எண்ணிமப்படுத்திப் பாதுகாத்தல் மற்றும் பத்திரப்படுத்தி பேணுதல் தொடர்பான விழிப்புணர்வு உருவாக்க நோக்கத்தில் பங்களிப்புச் செய்வதாகவும் காணப்படுகிறது. அத்துடன் நூலகம் நிறுவனம் முக்கியமான, அரிய மற்றும் பதிப்பில் வெளிவராத புத்தக ஆவணங்களை மீள்பதிப்புச் செய்கிறது. மேலும் சுவடு என்ற ஆய்விதழ் ஒன்றின் முதல் வெளியீட்டினை 2015ல் வெளியிட தீர்மானித்திருக்கிறது.

நூலக நிறுவன நிகழ்ச்சிகள் (Noolaham Events)

நூலக நிறுவனத்தினுடைய நிகழ்ச்சிகள் அனைத்தும் தன்னார்வ தொண்டு சமூகத்தினை கட்டி எழுப்புதல், மற்றும் தகவல் அறிவு, எண்ணிம நூலக பாவனைகள் மற்றும், எண்ணிமப்படுத்திப் பாதுகாத்தல் முதலியன தொடர்பில் பரந்த சமூகத்துக்கு விரிந்த கற்பிதலை வழங்குதலை நோக்கமாக கொண்டுள்ளது. இவ் நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக விரிவுரைகள், கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், மற்றும் கண்காட்சிகள் முதலியன நடாத்தப் பட்டது.

ஆய்வு அடிப்படையிலான செயற்பாடுகள் (Conferences and Symposiums)

தகவல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் முகமாகவும் மற்றும் நூலக தகவல் விஞ்ஞானம், ஆவணப்படுத்தல் விஞ்ஞானம், அருங்காட்சியவியல், வரலாறு, தொல்பொருளியல், மானிடவியல், கலாச்சார கற்கைகள் மற்றும் மொழியியல் முதலிய பிரிவுகளில் சிறந்த பரீட்சயத்தையும் ஊக்குவிக்கும் முகமாக ஆய்வு அடிப்படையிலான செயற்பாடுகளை ஒழுங்கு படுத்துகிறது.

இச்செயற்றிட்டத்தினுடைய முதலாவது செயற்றிட்டமாக தமிழ் ஆவண மாநாடு கொழும்பில் 2013 ஆம் ஆண்டு நடாத்தப்பட்டது. 'ஈழத்து தமிழ் சூழலில் ஆவணப்படுத்தலும் பேணிப் பாதுகாத்தலும்' எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இவ் ஆவண மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் (48 ஆய்வுக் கட்டுரைகள்) 600 பக்கத்துக்கும் அதிகமான ஒரு பெரும் தொகுப்பு நூலாக வெளியிடப்பட்டது.