எமது பங்காளர்கள்

பணியாளர்கள்

நூலக நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்டங்கள், முகாமைத்துவம், ஆய்வுப் பணிகளில் சிறியதொரு தொழில்சார் பணியாளர் அணி ஈடுபடுகின்றது.

எமது பணியாளர் பட்டியல்

தன்னார்வலர்கள்

தொடக்க காலம் முதல் நூலக நிறுவனமானது தன்னார்வலர்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் நிறுவனமாக உள்ளது. வியூகத் திட்டமிடல், வள ஒதுக்கீடு போன்ற முக்கிய பணிகள் தன்னார்வலர்களாலேயே முன்னெடுக்கப்படுகிறது. ஒரு புகைப்படத்தினை வளங்குவது போன்ற சிறு பங்களிப்புக்கள் முதல் ஒரு நிகழ்ச்சித்திட்டத்தின் கட்டமைப்பினை உருவாக்குதல் போன்ற பாரிய பங்களிப்பு வரை பல்வகையான பங்களிப்புக்களைத் தன்னார்வலர்கள் நல்குகின்றனர். ஒவ்வொரு சிறு பங்களிப்பும் நிறுவனத்தினைப் பொறுத்தவரை முக்கியமானதாகும்.

எமது தன்னார்வலர் பட்டியல்

உள்ளடக்கப் பங்களிப்பாளர்கள்

எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், இதழாசிரியர்கள், ஊடக நிறுவனங்கள் போன்றோர் தாம் உருவாக்கும் தகவல் வளங்களை நூலக நிறுவனத்துக்கு வழங்கும் முக்கிய பங்களிப்பினைச் செய்கின்றனர். இவர்கள் வழங்கும் உள்ளடக்கமே எமது எண்ணிம நூலகத்தினூடாகவும் ஏனைய செயற்றிட்டங்கள் ஊடாகவும் பயனர்களுக்கு வழங்கப்படுகின்றன. நாம் இந்த உள்ளடக்கப் பங்களிப்பாளர்களின் உரிமைகள் பாதிப்புறாத விதத்தில் அவர்களது உள்ளடக்கம் பன்னெடுங்காலம் பாதுகாக்கப்படுவதனையும் திறந்த அணுக்கத்தில் கிடைப்பதனையும் உறுதி செய்யப் பாடுபடுகிறோம்.

உள்ளடக்கப் பங்களிப்பாளர் பட்டியல்

நிறுவனங்கள்

நூலக நிறுவனமானது தனது நோக்கத்தினை அடைவதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது. பல்வேறு கல்வி, பண்பாட்டு நிறுவனங்களுடான கூட்டுச் செயற்பாடுகள் முக்கியமானவையாக உள்ளன. இந்தியாவிலுள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனம், இலங்கையின் யாழ்ப்பாண நூலகம், கொழும்புத் தமிழ்ச் சங்கம், பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் போன்ற அமைப்புக்களுடன் நாம் இவ்வாறு இணைந்து செயலாற்றியுள்ளோம்.


நிதிப் பங்களிப்பாளர்கள்

ஓர் இலாப நோக்கற்ற நிறுவனம் என்ற வகையில் நூலக நிறுவனமானது அதனது நிதிப் பங்களிப்பாளர்களியே தங்கி நிற்கிறது. நிறுவனங்களும் தனியாட்களுமாக இதுவரை முன்னூறு பங்களிப்பாளர்கள் எமக்கு நிதிப்பங்களிப்புச் செய்துள்ளனர். இவர்களில் பலர் ஒவ்வோராண்டும் பங்களித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எமது புரவலர் பட்டியல்

பயனர்கள்

எமது முக்கிய பங்காளர்கள் இலங்கைத் தமிழ்ச் சமூகங்களைச் சேர்ந்த பயனர்களே. மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், சமூக சேவையாளர்கள், செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், பொது வாசகர்கள் எனப் பலதரப்பட்ட பயனர்களது கல்வி, தகவல், கலாசாரத் தேவைகளுக்கு நாம் உதவுகிறோம். இந்தப் பயனர்களுக்கு உடனடியாகவும் பயனுள்ள வகையிலும் கிடைக்கக் கூடியவையாகவே எமது செயற்றிட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன.