எமது விழுமியங்கள்

ஐக்கியம்: பல்வேறுபட்ட புவியியல் அமைவிடங்களிலும் சட்ட மற்றும் அரசியல் பரப்பிலும் நூலக நிறுவனத்தின் மூலங்கள் அமையும். நிறுவனத் திட்டமிடல் மூலோபாய கட்டமைப்பிலும், வடிவமைப்பிலும், செயல் திட்டங்களிலும், வரவு செலவு அறிக்கைகளிலும், தொடர்பாடலிலும் நூலக நிறுவனம் ஐக்கியத்தினை உறுதிப்படுத்தும்.

வெளிப்படைத்தன்மை: நூலகத்தின் அனைத்துச் செயற்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மை பேணப்படும்.  விபரமான கணக்கு அறிக்கையிடல், ஆட்சி முறைமை, நிகழ்ச்சித்திட்டம், அடைவுகள் பற்றிய விபரமான தகவல் பரப்புரை, கேள்விகளுக்கு வகை சொல்லுமாற்றல் என்பவற்றை இது உள்ளடக்கும்.

கட்டற்றதன்மை : நூலக நிறுவனத்தின் செயற்பாட்டின் அடிநாதமாக இருப்பவை, கட்டற்ற தரவு, கட்டற்ற அணுக்கம் மற்றும் கட்டற்ற அறிவு என்பவையே என்பதால் நூலக மன்றத்தின் பயனாளிகளிடம் அது பணம் அறவிடாது. பயனாளிகள் இச்சேவையைத் தமது தனிப்பட்ட அல்லது நிறுவனத்தின் பொருளாதார நோக்கத்துக்குப் பயன்படுத்தலாகாது.

பக்கம்சாராமை: நூலக நிறுவனமானது பக்கம் சாரா அமைப்பாகும். அது பல்வேறு அரசியல் கருத்து நிலையைச் சார்ந்த, கட்சிகளைச் சார்ந்த, பல நிலைப்பாடுகளை உடைய தொண்டர்களுடன் தொடர்ந்து பணியாற்றும் அதேவேளை தொண்டர்கள் நூலக நிறுவகத்தைத் தமது தனிப்பட்ட அரசியல் செயற்பாட்டுக்கும் தனிப்பட்ட அரசியல் நலனுக்கும் பயன்படுத்துவதை அனுமதியாது. நிறுவகமானது அரசியல் மயப்படுத்தப்படுவதை அல்லது முத்திரை குத்தப்படுவதைத் தடுக்கும் வழிமுறைகளை மேற்கொள்ளும்.

தன்னார்வச் செயற்பாடு: நூலக நிறுவகத்தின் செயற்பாட்டுக்கு உந்துசக்தியாக இருப்பது தொண்டர்களின் தன்னார்வச் செயற்பாடு. நிறுவகத்தின் செலவுகளைக் குறைத்தல், ஒவ்வொரு குழுவினதும் இலக்குகள் என்பவற்றுக்கு முக்கிய இடம் தந்தே தனது ஆண்டுத்திட்டத்தை வகுக்கும்.

இணைந்து செயலாற்றுதல்: எண்ணிமப் பேணுதல் மற்றும் ஆவணப்படுத்தல் துறையில் ஈடுபடும் நிறுவனங்கள் ஒரே வேலையை மீளச்செய்வதையும் திரும்பத்திரும்பச் செய்வதையும் தவிர்த்து, அவற்றோடு சேர்ந்தியங்குவதற்கு நூலகம் முக்கியம் தரும்.  அத்தகு நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதன்மூலம் உற்பத்தித்திறனை மேம்படுத்தக்கூடும் எனின், அச்செயற்பாடுகளை மேற்கொள்ள அந்நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும். அதேபோன்று, அந்நிறுவனங்களின் ஆதரவைப் பெற்று செயல்திட்டங்களை மேற்கொள்ளும்.

பங்கேற்பு: ஆர்வலர்களின் பங்கேற்பை பரவலாக்குவதையும் வலுப்படுத்துவதையும் மையப்படுத்தியதாக நூலக நிறுவகத்தின் பணிச்சூழல் அமையும். நூலக நிறுவகத்தின் தீர்மானங்களையும் கொள்கைகளையும் வகுக்கவும் மீளாய்வு செய்யவும் அனைத்து ஆர்வலர்களதும் ஆலோசனைகள் பெறப்படும். ஆர்வலர்களின் செயல்திறன்மிக்க பங்கேற்பை உறுதிசெய்வதற்குரிய குழுக்களின் ஊக்கநிலையை பேணுவதற்குரிய புத்தாக்கங்களுக்கு உயர்இடம் கொடுப்பதற்குரிய உன்னத பணிகளை கௌரவிப்பதற்குரிய பொறிமுறைகளையும் முறைமைகளையும் அறிமுகம் செய்யும்