வரலாறு

நூலக நிறுவனமானது இலங்கைத் தமிழ்ச்சமூகங்களின் ஆவண மரபுரிமையை ஆவணப்படுத்திப் பேணிக்காப்பதற்கானத் தொடங்கப்பட்ட அமைப்பாகும்.  2005 ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தன்று நூலகத் திட்டம் என்ற பெயரில் திறந்த, கூட்டுச் செயற்பாட்டை முன்னிறுத்தி நூலக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

2006 முதல் நூலக நிறுவனம் நிதிப் பங்களிப்புக்களை ஏற்றுக் கொள்ளத் தொடங்கியது. மேலும் “பெண்கள் கற்கைகள் மற்றும் ஆய்வு நிலையத்துடன்” (WERC) நூலக செயற்திட்டத்தின் முதலாவது ஒருங்கிணைந்த எண்ணிமப்படுத்தல் செயற்றிட்டம் 2007ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

நூலகத் திட்டத்தினுடைய முன்னோடிகளின் ஆலோசனையில், இலங்கையின் எண்ணிம ஆவணப்படுத்தல் செயற்பாடுகளை தொடர்ந்து பேணும் முகமாக செயற்திட்டத்தின் அனைத்துப் பங்குதாரர்களும் இணைந்து 2008 இல் ஆண்டில் நிறுவனமாகச் செயற்படத் தீர்மானித்தனர். அவ்வகையில் 2010 ஆம் ஆண்டில் நூலக நிறுவனமானது உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது. 2011ஆம் ஆண்டு நூலக நிறுவனம் தனது அனைத்துப் பங்குதாரர்களையும், நிறுவனத்தின் 2020ஆம் ஆண்டை நோக்கிய மூலோபாய திட்டமிடல் மற்றும் அபிவிருத்திச் செயற்பாட்டிலும், நிறுவனமயப்படுத்தப்படுதலின் முக்கியத்துவத்திலும், உலக மயமாதல் மாற்றம், ஒழுக்க மற்றும் உத்தியோக மாதிரி நியமங்கள் தொடர்பான விடயங்களிலும் பங்குபெற்ற அழைத்திருந்தது.

2011 இல் நூலகத்தின் ஆவண எண்ணிக்கை 10,000 இனை எட்டியது. 2013 இல் நூலக நிறுவனத்தினரால் முதலாவது தமிழ் ஆவண மாநாடு நடாத்தப்பட்டது. தமிழில் ஆவணப்படுத்தல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட முதல் மாநாடு இதுவாகும். 2014 இல் 15,000 ஆவணங்கள் எட்டப்பட்டன.

2016 இல் நூலக நிறுவன ஆவண எண்ணிக்கை 20000, 25000, 30000 ஐத் தாண்டி ஏறத்தாழ இரண்டு மடங்காகியது.