அண்ணாமலைக் கனடா’ மற்றும் ‘நூலகம் நிறுவனம்’ என்பன இணைந்து கடந்த சனிக்கிழமையன்று (16 ஜூன் 2018) நடத்திய பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை வாசிப்பதற்கான பயிற்சிப்பட்டறையானது மிகவும் பயனுள்ளதாகவும் வெற்றிகரமானதாகவும் அமைந்திருந்தது.
பயிற்றுனர்: முனைவர் பால சிவகடாட்சம் அவர்களால், பயிற்சிக்கு வந்திருந்த ஆர்வலர்களுக்கு, பல்வேறு நிலைகளில் (நல்ல நிலையில் உள்ளவை, கறையான் அரித்தவை, தெளிவானவை, தெளிவற்றவை) கிடைக்கப்பெற்ற ஓலைச்சுவடிகள் பார்வையிடுவதற்காக வழங்கப்பட்டன.
ஓலைச்சுவடிகளைத் தூய்மைப்படுத்தும் வழிவகைகள் மற்றும் அவற்றைப் பாதுகாக்கும் முறைகள் பற்றிய விளக்கங்களின் பின்னர் ஓலைச்சுவடிகளை வாசிக்கும் வழிமுறைகளும் அதற்கான நுட்பங்களும் மிகவும் விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பங்குபற்றியிருந்த ஆர்வலர்களுக்கு ஓலைச்சுவடிகளை வாசிப்பதற்கான நேரடி செயன்முறைப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இந்நேரடிப் பயிற்சியின் பின்னர் பங்கேற்றிருந்த சிலரால், பயிற்றுனரின் உதவியின்றித் தாமாகவே சில ஓலைச்சுவடிகளை வாசிக்கக்கூடியதாகவிருந்தது இப்பட்டறையின் வெற்றிக்குச் சான்றாக விளங்குகின்றது.
இப்பயிற்சிப்பட்டறையினை நூலகம் நிறுவனம் ஆவணப்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை வாசிப்பதற்குத் தெரிந்திருக்கவேண்டிய சில நுட்பங்கள்:
1) ஓலைச்சுவடிகளில் மெய்யெழுத்துகள் யாவும் புள்ளியின்றியே எழுதப்பட்டிருக்கும்
2) குறில் எழுத்துகளும் நெடில் எழுத்துகளும் பெரும்பாலும் ஒரேமாதிரியாகவே எழுதப்பட்டிருக்கும்.
3) தலையங்கத்தைத் தனியாகவோ அல்லது பந்தி பிரித்தோ எழுதப்பட்டிருக்காது.
4) பெரும்பாலும் பாடல்களாகவே எழுதப்பட்டிருப்பதால் பாடல்கள் பற்றிய இலக்கண அறிவு தெரிந்திருப்பின் வாசிப்பது இலகுவாக இருக்கும்.
5) பெரும்பாலும் ஒரு புதிரினை விடுவிப்பதற்கான மனநிலையுடனேயே இதை அணுகவேண்டும்.