2025 ஆம் ஆண்டு அக்கரைப்பற்று புத்தகக் காட்சியில், நூலக நிறுவனத்திற்கு “புத்தகப் பண்பாட்டுக்குப் பங்களித்தமைக்கான சிறப்பு விருது”

Published on Author Loashini Thiruchendooran

உலகின் தமிழறிவுப் பெருங்கடலாக திகழ்ந்த யாழ் நூலகம் கிடைத்தற்கரிய 97000 ஆவணங்களுடன் எரியூட்டப்பட்டு 44 ஆண்டுகள் நிறைவடைகிறது. இவ்வகை அனர்த்கங்களினால் இனியும் அறிவுச்சேகரங்களின் மீட்கமுடியாத அழிவு நிகழக்கூடாது என்ற நோக்கத்தடன்; 2005ஆம் ஆண்டு ‘நூலக நிறுவனம்’ ஆரம்பிக்கப்பட்டது. இது ஈழத்தின் தமிழ் பேசும் சமூகத்தினரின் அறிவு, பண்பாடு, வரலாறு, மரபுகளை பாதுகாக்கும் தனித்துவமான இலாப நோக்கமற்ற தன்னார்வலர்களின் இயக்கமாக செயற்பட்டுவருகின்றது.

நூலகம் இன்றைய திகதிவரை 6 மில்லியனுக்கும் மேற்பட்ட பக்கங்களை எண்ணிமவடிவில் காப்பகப்படுத்தி அனைவரும் அணுகக்கூடியவகையில் மின்நூலகமாக செயற்பட்டு வருகின்றது. உலகலாளவியரீதியில் ஆய்வாளர்கள், ஆசிரியர்கள்;, மாணவர்கள், வரலாற்று ஆர்வலர்களுக்கும் பேருதவியாக விளங்குகிறது. மாதந்தம் 35,000க்கும் மேற்பட்டோர் நூலக வலைத்தளத்தை பயன்படுத்துகின்றனர். நூலகம் துறைசார்ந்த நிபுணர்களின் கற்றல், ஆய்வுகளின் உசாத்துணைச் வேண்டுகோள்களுக்கும் ஆதரவளித்து வருகின்றது.


நூலகத்தில் அரிய நூல்கள், பத்திரிகைகள், புகைப்படங்கள், வாய்மொழி வரலாறுகள், பாடசாலை மாணவர்களுக்கான கல்வி வளங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் சர்வதேச தரநிர்யங்களுக்கு ஏற்ப தொகுக்கப்பட்டுள்ளன.


குறிப்பாக ஈழத்தின் தமிழ்பேசும் சமூகங்களின் சேகரமாக முஸ்லிம் ஆவணகம், பெண்கள் ஆவணகம், மலையக ஆவணகம், பழங்குடியினர் ஆவணகம், மலாய்-ஜாவி, அரபுத்தமிழ் சேகரம், பனையோலைச் சுவடிகள் உள்ளிட்ட அரிய சேகரங்களை வெகுமக்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதுள்ளது.
இலாபநோக்கமற்று அறிவைப் பரலாக்கவும், வாசிப்புக் கலாசாரத்தை ஊக்குவிக்கும் பணியைச் செய்துவரும் நூலகத்திற்கு இவ்விருதை அளிப்பதில் அக்கரைப்பற்று புத்தகத்திருவிழா அமைப்பு பெருமிதம் கொள்கின்றது