அபூர்வ சிந்தாமணி | காலக்கண்ணாடி 06

Published on Author தண்பொழிலன்

இலங்கையில் இதழியல் துறையைப் பொறுத்தவரை, மிகச் சில பத்திரிகைகளே அதிகமாகக் கவனிக்கப்பட்டவையாகவும், பெருமளவு வாசகர்களைக் கொண்டவையாகவும் அமைந்திருந்தன. அத்தகைய பிரபலமான பத்திரிகைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று, சிந்தாமணி.

சிந்தாமணி, 1980கள் முதல் கொழும்பிலிருந்து தொடர்ச்சியாக வெளியான வார இதழ். அரசியல், இலக்கியம், பண்பாடு, என்று பல்தரப்பட்ட தகவல்களுடன் சுமார் 50 பக்கங்களில் இது வெளிவந்தபடி இருந்தது. இதே பத்திரிகையின் நாளிதழ், தினபதி என்ற பெயரில் வெளிவந்துகொண்டிருந்தது. இம்மாத காலக்கண்ணாடியில், அந்த சிந்தாமணி இதழ் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு காட்டுகின்ற ஒரு பெப்ரவரி மாதத்தைப் பார்க்கப் போகின்றோம்.

chintamani1

1990ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வெளியான சிந்தாமணி இதழ், அப்போதைய இலங்கையில் தானே முன்னணி இதழ் என்பதைக் கூறும் ஆங்கில மற்றும் தமிழ் வரிகளைத் தன் முகப்பில் பதிந்திருக்கிறது. ஒரு மூலையில், சிந்துவெளி முத்திரைகளில் பதிக்கப்பட்டிருந்த எருதுச்சின்னம், சிந்தாமணி இதழின் முத்திரையாகத் திகழ்கிறது. 48 பக்கங்களைக் கொண்ட இதழ்.

தலைப்புச் செய்தி “மாணவர் சீருடை குறைந்த விலையில்!”. அச்செய்தி, மீட்டர் 110 ரூபா, 35 ரூபாவில் கொடுக்கப்பட இருக்கிறது என்பது செய்தி. இலங்கை மாணவர்களுக்கான இலவச சீருடை அண்மைக்காலமாகவே வழங்கப்பட்டு வருவதும், 2015இலிருந்து இலவச சீருடை பண வவுச்சர்கள் வழங்கும் திட்டமாக அது மாற்றப்பட்டிருப்பதும் இங்கு நாம் நினைவுகூரத்தக்கது.

மூலையில் ஒரு பெண்மணியின் படமும் கவிதையும். தன் ஒவ்வொரு இதழின் அட்டைப்பக்கத்திலும் நடிகை அல்லது பெண்மணி ஒருவரின் படமொன்றையும் கீழே கவிதையொன்றையும் பிரசுரிப்பது சிந்தாமணியின் வழக்கம்.

ஜனசக்தி திட்ட நடைமுறையின் பின்னர் இடம்பெற்ற உணவு முத்திரை மோசடி, மலையக வெற்றுக்காணி பகிர்ந்தளிப்பில் அதிருப்தி, தனியாரின் ஊழியர் சேமலாப நிதியை அரசு சுவீகரிக்கத் திட்டம் என்பன ஏனைய முக்கியமான முதற்பக்கச் செய்திகள். “பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்” என்ற தலைப்பில் ஒருபக்கக் கட்டுரை, நம்மை வாய்பிளக்கச் செய்கிறது.

பூலோக சஞ்சாரம் எனும் பகுதி, அன்றைய சர்வதேச நாட்டுநடப்புகளை சுருக்கமாகக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானில் சிந்தி மற்றும் மொஜஹிர் இனங்களுக்கிடையே ஏற்பட்ட உள்நாட்டு இனக்கலவரம், இந்திய – பாகிஸ்தானின் காஸ்மீர் மோதல் தொடர்பான விவரங்கள் இப்பகுதியில் ஆராயப்படுகின்றன.

சிறு விளம்பரங்கள் வழக்கமான மணமக்கள் தேவை, சோதிடம் என்பவற்றுடன் கடந்து போகின்றது. வேலைவாய்ப்பு, சீரீசீ ஈகிள் கம்பனியின் காப்புறுதி விளம்பரம், “திருப்தியின் உச்சம், உன்னத சுவைநயம்” என்ற சொலவடைகளோடு வெளியாகியுள்ள ஒரு சிகரெட் விளம்பரத்தில் கீழே இன்றும் மாறாத அரசாங்கத்தின் எச்சரிக்கை. இன்று காண்கின்ற சிறுவிளம்பரங்களுக்கு மாற்றாக “மதமாற்றமும் பெயர் மாற்றமும்” என்ற விளம்பரம் வியப்பைத் தருகிறது.

 

விளம்
ஒரு விளம்பரம்

தோட்ட மக்களின் கடன் கஷ்டம் தீராதா என்ற தலைப்புடன் ஆரம்பிக்கும் மலையக மாருதம் பகுதி, ஆங்காங்கே அவர்களுக்காக கடன் சபைகளை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது.

பெப்ரவரி 11இல் வெளியான இந்த சிந்தாமணியில், இன்று உலகமே அல்லோலகல்லோலப்படும் பெப்ரவரி 14 பற்றி ஒரு வரி கூட இல்லை என்பது ஏமாற்றத்தைத் தருகிறது. முப்பதாண்டுகளுக்கு முன் காதலர் தினத்தின் பெறுமதி அவ்வளவு தான். எத்தனை சீக்கிரம் மாறி விடுகிறோம்?

 

தலையெழுத்தை மாற்றும் சக்தி வைரக்கற்களாக இருக்கிறதா எனும் வினாவுடன் ஒரு கட்டுரை, ஆன்மிகக் கட்டுரைகள், “காதலி தேடிக்கொடுத்த மனைவி” எனும் இராஜலிங்கத்தின் தொடர்கதை, ரூபவாகினி மற்றும் உள்ளூர் வெள்ளித்திரை பற்றிய “ஒலி ஒளி உருவம்” பகுதி, சினிமாப்பகுதி என்பன சுவாரசியமானவை.  அவற்றில் உள்ள சுவாரசியம் என்னவென்று நீங்கள் இதழிலேயே போய் பார்த்துக்கொள்ளலாம்.

 

இதழை இங்கு வாசிக்கலாம்.

சிந்தாமணியின் ஏனைய இதழ்களை இங்கு வாசிக்கலாம்.

2 Responses to அபூர்வ சிந்தாமணி | காலக்கண்ணாடி 06