நூலகத்தின் பாடசாலை ஆவணப்படுத்தல் திட்டம்

Published on Author தண்பொழிலன்

கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் அதிகம் சிலாகிக்கப்பட்டது 96 திரைப்படம். அதன் வெற்றிக்கும் சிறப்புக்கும் பல காரணங்கள் கூறப்பட்டாலும்,  எல்லோரது வாழ்க்கையிலுமே மறக்க முடியாத பள்ளிப்பருவத்தை அத்திரைப்படம் சித்தரித்திருந்த விதமே அப்படத்தை அதிக கவனிப்புக்குள்ளாக்கி இருந்தது. ஆனால் அத்திரைப்படம் வெளிவருவதற்கு பல ஆண்டுகள் முன்பேயே நம் நூலகம், அத்தகைய ஒரு முயற்சியை ஆரம்பித்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

96moviestill.jpg

பள்ளிக்காலம் என்பது எல்லோருக்கும் மறக்கமுடியாத நினைவுகளைத் தந்துசெல்லும் ஒன்று. வகுப்பறைகளாக, நடைபாதைகளாக, மரத்தடிகளாக, பாடசாலைகள் நம் எல்லோர் மனதிலும் பதிந்திருக்கும் சித்திரங்கள் அற்புதமானவை. ஆனால் அந்த சித்திரங்கள் என்றென்றும் நீடிக்கவேண்டும் என்ற கரிசனை நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது?

பள்ளிக்கூடங்களிலும் ஆவணங்கள் காக்கப்படுவதுண்டு. குறிப்பாக, பாடசாலை சார்பான பிரசுரங்கள், விழாமலர்கள், மாணவர் மன்ற வெளியீடுகள், வகுப்புகளின் சிறப்பிதழ்கள் இப்படிப் பலவற்றைக் குறிப்பிடலாம். அந்த ஆவணங்களை இதுவரை சேகரிப்பதில் நீங்கள் எந்தளவு ஆர்வமாக இருந்தீர்கள் என்று தெரியாது. ஆனால் இனி ஆர்வமாக வாய்ப்பு இருக்கிறது.

நீங்கள் படித்த ஆண்டில் வெளியான பாடசாலைச் சிறப்பிதழொன்றில், உங்கள் பெயர் கொண்ட ஆக்கமொன்றையும் சிறு புகைப்படத்தையும் கூட நீங்கள் கண்டிருக்கலாம். ஆனால் இன்று அந்த ஆக்கம் உங்கள் கையில் இருக்கிறதா? அந்த இதழை கடைசியாக எப்போது பார்த்தீர்கள்?அந்த இதழில் ஆக்கங்கள் எழுதிய உங்கள் அதிபர், ஆசிரியர்கள், சக நண்பர்கள், சகோதர சகோதரிகள் இப்போது எங்கெங்கே என்னென்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? அதே இதழில்  புகைப்படம் வெளியான உங்கள் மனதுக்கினிய ஒரு ஆசிரியர் அல்லது நண்பர் அல்லது நண்பி இப்போதும் உங்களுடன் தொடர்பில் இருக்கிறாரா?

இந்தக் கேள்விகள் எல்லாம் சுவாரசியமானவை. ஆனால், உங்கள் பாடசாலையில் வெளியான  உங்களுக்கு நன்கு நினைவில் இருக்கின்ற அந்த ஒரு பிரசுரத்தை, ஏனோ உங்கள் குறித்த ஒரு நண்பரிடம் கொடுத்து விட்டீர்கள். ஆபத்துக்கு அவசரத்துக்கு வாங்கிச் சென்ற பேர்வழி எங்கோ தொலைத்துவிட்டார். எப்படி இருக்கும் உங்களுக்கு?

இப்படி பல ஏமாற்றகரமான சந்தர்ப்பங்கள் நமக்கு அமைந்திருக்கக்கூடும். ஆனால், இத்தகைய சந்தர்ப்பங்களில் உங்கள் பதற்றத்தைக் குறைக்கவும்,  பரவசத்தை நீடிக்கச் செய்யவும், நூலகம் உதவ முன்வந்திருக்கிறது. அது தான் பாடசாலைகள் ஆவணத்திட்டம்.

பாடசாலைகள் தாங்களாகவே முன் வந்து, தங்கள் பாடசாலை சார்ந்த சகல கடந்த கால வெளியீடுகளையும் எண்ணிமப்படுத்தி நூலகத்தில் சேமிக்கும் திட்டம் இது. ஒவ்வொரு பாடசாலைகளிடம் விண்ணப்பம் கோரி, அவர்களது ஆவணங்களை எண்ணிமப்படுத்தி நூலகம் தனது வலைத்தளத்தில் சேகரிப்பதுடன், திறந்த அணுக்கத்திலும் வைக்கிறது. அந்த ஆவணங்களின் பிரதியொன்று இறுவட்டில் பதிவு செய்யப்பட்டு, பாடசாலைகளிடமும் ஒப்படைக்கப்படுகின்றது. ஓரிரு பாடசாலைகள் இந்த உதவிக்கு கைம்மாறாக சிறிய நன்கொடை அன்பளிப்பையும் நூலகத்துக்கு வழங்கி இருக்கின்றன.

இந்த நோக்கில், இதுவரை, 200இற்கும் மேற்பட்ட பாடசாலைகளின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்களைச் சேகரித்துள்ளோம். முக்கியமாக யாழ் இந்துக்கல்லூரி, கொழும்பு ரோயல் கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி, யாழ் மகாஜனாக் கல்லூரி உள்ளிட்ட பாடசாலைகளின் ஆவணங்கள் பெருமளவு முற்றாக சேகரிக்கப்பட்டு விட்டன எனலாம். தற்போது யாழ் மத்திய கல்லூரியின் ஆவணங்கள் தொகுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையின் பல பிராந்தியங்களையும் உள்ளடக்கியதாக, பல பாடசாலைகளையும் மையப்படுத்தியதாக, இந்தச் சேகரம் வளரவேண்டும் என்பதே நூலகத்தின் நோக்கம். தன்னார்வப் பங்களிப்பைச் செய்ய விரும்பும் பாடசாலைகள், நிறுவனங்கள், ஏன் தனிப்பட்ட பழைய மாணவர்கள் – அதிபர்கள் – ஆசிரியர்கள் கூட இதில் பங்களிக்க முடியும். ஆர்வமுள்ளவர்கள் எம்மைத் தொடர்பு கொள்ளலாம். உங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் உறங்கிக்கொண்டிருக்கும் பள்ளிக்கால நினைவுகளை அசைபோடவும், நண்பர்களோடு பகிரவும் நூலகம் வழங்கும் ஒரு வாய்ப்பு இது.

“வேத்தியர் தமிழாவணம்” எனும் தலைப்பிலான கொழும்பு றோயல் கல்லூரி இறுவட்டு எண்ணிமப்படுத்தல் அறிக்கை: இங்கு

“ஆரம்” எனும் தலைப்பிலான யாழ் இந்துக்கல்லூரி ஆவணப்படுத்தல் அறிக்கை: இங்கு