தெற்காசியாவின் அறிவுக்களஞ்சியம் எனப் போற்றப்பட்ட யாழ் நூலகமானது எரியூட்டப்பட்டு இவ்வருடத்துடன் 44 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதுபோன்ற ஒரு அசம்பாவிதம் எதிர்காலத்தில் இடம்பெறக்கூடாது என்பதை முன்னிறுத்தி உதயமாகியதே நூலக நிறுவனமாகும். நூலக நிறுவனம் (Noolaham Foundation) என்பது இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எல்லா வகையான அறிவுத் தொகுதிகளையும் மரபுரிமைகளையும் மின்வடிவாக்கி, பாதுகாத்து, அவற்றை உலகவாழ் மானிடருக்கு www.noolaham.org, www.noolaham.media என்ற இணையத்தளங்கள் மூலம் இலவசமாக வழங்கி வரும் இலாப நோக்கமற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும். 2005 ஆம் ஆண்டு தைத்திருநாளில் நூலகத்திட்டம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், 2010 இல் நூலக நிறுவனம் என்ற பெயரில் சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்டு 20 ஆண்டுகள் கடந்தும் பல்பரிமாணங்களுடன் ஆவணப்படுத்தலின் தாயகமாக மிளிர்ந்து கொண்டிருக்கின்றது. இந்நிறுவனம், இலங்கையில் மட்டுமன்றி பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நோர்வே உள்ளிட்ட நாடுகளிலும் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக இயங்குகிறது.

நூலக நிறுவனமானது, ‘இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான எல்லா வகையான அறிவுத் தொகுதிகளையும், மரபுரிமைகளையும் ஆவணப்படுத்தி பாதுகாத்து அனைவருக்கும் கிடைக்கச் செய்வதோடு, அறிவுருவாக்கத்திலும் கற்றலிலும் ஈடுபடக்கூடிய திறமைமிக்க சமூதாயங்களை வலுவூட்டல்’ என்ற தனது பணி இலக்கை மையமாகக் கொண்டு பலதரப்பட்ட செயற்றிட்டங்களை திட்டமிட்டு, தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. 12 நாடுகளைச் சேர்ந்த 250 இற்கு மேற்பட்ட ஆதரவாளர்களின் மாதாந்த நன்கொடைகள் மூலமாகவும், கூட்டு நிறுவனங்களின் பங்களிப்புக்கள் மூலமாகவும் இந்நிறுவனத்திற்கான நிதியுதவி கிடைக்கின்றது. தற்போது ஆளுகை சபை உறுப்பினர்கள், பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு இயங்கிவரும் இந்நிறுவனம் இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகம் என தமது கிளைகளை பரப்பி ஆவணப்படுத்தும் பணியினை மேற்கொண்டு வருகின்றது.
இலங்கைத் தமிழ் சமூகத்தின் அனைத்து பரிமாணங்களையும் எவ்வித பாகுபாடுமின்றி ஆவணப்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் பணியை நிறைவேற்றி வரும் நூலக நிறுவனம், இன்றளவில் (10.06.2025) மொத்தமாக 6,099,038 பக்கங்களைக் கொண்ட 172,425 ஆவணங்களை ஆவணமாக்கியுள்ளது. இவற்றில் ஓலைச்சுவடிகள், நூல்கள், பத்திரிகைகள், இதழ்கள், நினைவு மலர்கள், வாழ்மொழி வரலாறுகள், வாழ்க்கை வரலாறுகள், புகைப்படங்கள், கல்வி வெளியீடுகள், நிறுவனப் பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு அறிவுத் தொகுதிகள் அடங்கியுள்ளன. இவ்வாறு ஆவணப்படுத்தப்படும் அறிவுத் தொகுதிகளை ஒவ்வொரு மாதமும் 35,000 இற்கும் மேற்பட்ட பயனாளர்கள் பார்வையிட்டு தமது அறிவு விருத்தியையும் கல்வி மற்றும் ஆய்வு நடவடிக்கைகளையும் பூர்த்தி செய்து வருகின்றார்கள் என்பதோடு, பாலர் முதல் பட்டதாரிகள் வரை இதனை நம்பகமான ஆதாரமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனது எண்ணிமமாக்கச் செயற்பாடுகள் அனைத்தும் சர்வதேச தர நிர்ணயத்திற்கு அமைவாக மிக நுணுக்கமான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
நூலக நிறுவனம் பல செயற்றிட்டங்களை செய்து முடித்துள்ளது. இதில், பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், பழங்குடியினர் ஆவணகம், மலாய் மொழி – அரபுத்தமிழ் சேகரம், யாழ்ப்பாணப் பத்திரிகைகள், உதயன் பத்திரிகை நூலகம், பஞ்சாங்க ஆவணமாக்கம், யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம், ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம், இலங்கை முஸ்லிம்களின் துண்டுப்பிரசுர ஆவணகம் போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். தற்போதும் இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம், யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் ஆவணமாக்கம், ஈழத்துத் தமிழ்ச் சுவடி நூலகம் போன்ற பல செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இது, தமிழ் சமூகத்தின் அடையாளம், வரலாறு, கலாசாரம் போன்றவற்றை எதிர்கால சந்ததியினருக்கு வழங்கும் பாலமாக இருக்கிறது. நூலக நிறுவனத்தையும் அதனுடைய அனைத்து செயற்பாடுகளையும் www.noolaham.foundation என்ற இணையத்தளம் ஊடாகச் சென்று நீங்கள் பார்வையிட முடியும்.
நூலக நிறுவனத்தின் பணி இலக்கிற்கமைய மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்கள் சமுதாயத்தை வலுப்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கின்றது. சமூகத்திற்கு நூலக நிறுவனத்தின் தேவைகள் அல்லது முக்கியத்துவம் இன்றியமையாதது. அழிவடையும் நிலையிலுள்ள ஆவணங்களை அபாயத்திலிருந்து மீட்டெடுப்பதற்கும், தமிழ் சமூகத்தின் அறிவு மற்றும் பண்பாட்டை பாதுகாப்பதற்கும், கல்வி ஆராய்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டுக்கு ஆதரவு வழங்குவதற்கும், தமிழ் சமூகத்தின் மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட சமூக வரலாற்றை வெளிக்கொணர்வதற்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும், உலகளாவிய சமூகங்கங்களின் திறந்த அணுகல் (Open Access) செயற்பாட்டிற்கும் நூலக நிறுவனத்தின் தேவை சமூகத்திற்கு அவசியமாக உள்ளது.
மேலும், தற்காலத்தில் வலையூடகங்களின் வளர்ச்சியானது செயற்கை நுண்ணறிவு (AI) தொழிநுட்பம் வரை மிக வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றது. பாரம்பரிய நூலகங்களை விட இணைய நூலகங்களே பலருக்கும் பெருமளவு சாத்தியங்களை உருவாகிக் கொடுக்கின்றது. இத்தகைய 24 மணிநேர இலவச இணைய நூலக வசதியை நூலக நிறுவனமானது உலகவாழ் சமூகத்திற்கு வழங்குவதோடு, அதனை எவ்வித சிரமங்கள் இன்றி இலகுவாக கையாளுவதற்கான விரைவான வசதிகளையும் வழங்கி வருவதால் இந்நிறுவனத்தின் தேவை சமூகத்திற்கு காத்திரமானது.
இத்தகைய காத்திரமான சேவையாற்றும் நூலக நிறுவனத்துடன் இணைந்து கைகோர்த்து தங்களால் முடியுமான ஆவணப்படுத்தல் பங்களிப்பினை வழங்கமுடியும். அந்தவகையில், நூலக நிறுவன செயற்பாடுகளுக்கான தொடர்ச்சியான ஆதரவு மற்றும் ஆலோசனைகனை வழங்குதல், அனைத்து நாடுகளுக்கும் நூலக நிறுவனத்தை அறிமுகப்படுத்தி நிறுவன முயற்சிகளுக்கு தலைமைதாங்கி ஆதரவளித்தல், நூலக நிறுவனத்தின் பிராந்திய ஆவணப்படுத்தல் நடவடிக்கைகளுக்கும் அறிவுத் தொகுதிகளை (ஓலைச்சுவடிகள், நூல்கள், பத்திரிகைகள், இதழ்கள், நினைவு மலர்கள், வாழ்மொழி வரலாறுகள், வாழ்க்கை வரலாறுகள், புகைப்படங்கள், கல்வி வெளியீடுகள்) சேகரிப்பதற்கும் ஆதரவளித்தல், நூலக நிறுவனத்தின் செயற்றிட்டங்களுக்குத் தேவையான நிதி அனுசரணை வழங்குதல் போன்ற பல வழிமுறைகளுக்கு ஊடாக எம்முடன் நீங்கள் கைகோர்த்து தன்னார்வலராக பங்களிக்க முடியும்.
மேலும், ஒவ்வொரு துறை சார்ந்தும் வெளியான அரிய ஆவணம் உட்பட எல்லா அறிவுத் தொகுதிகளையும் ஆவணப்படுத்தினால் தான் பயனாளர்கள் முழுமையான உச்சப் பயனை பெற முடியும். இதற்கு எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும், ஆளுமையுடைய தனிநபர்களும் எம் நிறுவனத்தோடு கைகோர்ப்பது மிக மிக அவசியமானதாகும். நூலக நிறுவனத்துடன் இணைந்து தமது வெளியீடுகளை ஆவணப்படுத்தி பாதுகாக்க விரும்பினால் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்திலும் மட்டக்களப்பு, மலையகத்தில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகங்களிலும் நேரடியாகச் சென்று தொடர்பு கொள்ளலாம். அல்லது +94212231292, +94761625485 எனும் தொலைபேசி எண்களிலும், noolahamfoundation@gmail.com எனும் மின்னஞ்சல் ஊடாகவும் தொடர்பு கொள்ளலாம். இந்நிறுவனமானது ஓலைச்சுவடிகள், நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், பிரசுரங்கள், சிறப்பு இதழ்கள், நினைவு மலர்கள், அறிக்கைகள், நிறுவனங்கள் என்பன போன்ற அனைத்தையும், சுருக்கமாக கூறினால் இலங்கை தமிழ் சமூகம் தொடர்பான அத்தனை அம்சங்களையும் ஆவணப்படுத்தி பாதுகாக்கும் முக்கிய பணியினை மேற்கொண்டு வருகின்றது. இது சம்மந்தமான அம்சங்களை ஆவணப்படுத்த விரும்புபவர்களும் எம்மை தொடர்பு கொள்ள முடியும்.
ஆகவே, நூலக நிறுவனம், தமிழ் சமூகத்தின் அறிவு மரபை பாதுகாத்து, எதிர்கால சந்ததியினருக்கு வழங்கும் முக்கியமான ஆதாரமாக இருக்கிறது. இது, இன்றைய இளம் தலைமுறைக்கு தங்களது அடையாளம், வரலாறு, கலாசாரம் போன்றவற்றை அறிந்து கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. அதனால், இந்நிறுவனத்தின் செயற்பாடுகள் தமிழ் சமூகத்தின் எதிர்காலத்தை கட்டியமைக்கும் ஒரு அறிவுப் பாலமாக திகழ்கிறது. ஆக, நூலக நிறுவனத்தின் இணையத்தளத்தை யாரும், எரித்துவிடவோ அழித்துவிடவோ முடியாது என்பதால் காலா காலத்துக்கும் பாதுகாப்போடு இருந்து தொடர்ச்சியான சேவையை சமூகத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ப. ஜோன் டிலக்ஷன்,
எண்ணிம நூலக அலுவலர்,
மட்டக்களப்பு பிராந்திய அலுவலகம், நூலக நிறுவனம்.