வரலாறு என்றால், நாமெல்லாம் சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு, என்று பட்டியல் வாசிப்போம். இதே கேள்வியை தொன்மையான வரலாற்றுக் குடியிருப்புகள் என்றால், மதுரை, தஞ்சை, காஞ்சி என்றோ, கீழடி, ஆதிச்சநல்லூர் என்றோ மீண்டும் தமிழகத்திலேயே போய் நிற்போம். கொஞ்சம் விடயம் தெரிந்தவர் என்றால் யாழ்ப்பாண இராச்சியம், வன்னிச் சிற்றரசுகள், மட்டக்களப்பு வன்னிமைகள் திருக்கோணமலை, கந்தரோடை, பொம்பரிப்பு, என்று இங்குள்ள பட்டியலையும் சேர்த்துக்கொள்ளுவோம். .
இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். நீங்கள் பிறந்த ஊரின் வரலாறு உங்களுக்குத் தெரியுமா? தமிழரின் வரலாற்றுக் குடியிருப்புகளில் உங்கள் ஊரின் பெயரையும் இணைத்துக்கொள்ளலாமா? வரலாற்றில் உங்கள் ஊரின் வகிபாகம் என்ன? அதன் வரலாறு எந்த ஆண்டிலிருந்து ஆரம்பிக்கிறது? உங்கள் ஊரின் பெயருக்கான காரணம் தெரியுமா? அங்கு வசிக்கின்ற சமூகங்கள் எங்கிருந்து வந்து குடியமர்ந்தார்கள் என்று தெரியுமா? அதற்கான ஆதாரங்கள் என்னென்ன?
இந்தக் கேள்விக்கெல்லாம் பெரும்பாலும் நம் விடை, “இல்லை” அல்லது “தெரியாது” என்பதே. நாம் சொந்த ஊர் வரலாற்றில் அக்கறை காட்டுவதில்லை. காட்டவேண்டியதன் அவசியமும் நமக்குப் புரிவதில்லை. இதில் யாரையும் குறைகூறவும் முடியாது. ஏனென்றால், பழங்காலந்தொட்டே நம் மத்தியில் வரலாற்றை ஆவணப்படுத்தி வைக்கும் போக்கு காணப்பட்டிருக்கவில்லை. அப்படியே ஆவணப்படுத்தி வைத்திருந்தாலும், அவை மிகைப்படுத்திய தொன்மங்களைக் கொண்டவையாகவும், கட்டுக்கதைகளை அதிகளவில் கொண்டவையாகவுமே காணப்படுகின்றன.
ஒரு சிறு புவியியல் பிரதேசத்துக்குள்ளிருந்து அல்லது மிகச்சிறிய குடித்தொகை ஒன்றிலிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் வரலாற்றை “நுண்வரலாறு” என்று சொல்லலாம். மானுடரின் ஒட்டுமொத்த வரலாறு என்பது பலகோடி நுண்வரலாறுகளின் தொகுப்புத் தான். நுண்வரலாறுகள் எத்தனைக்கெத்தனை திருத்தமாகப் பெறப்படுகின்றதோ, அத்தனைக்கத்தை வரலாறும் திருத்தமாக அமையும். இந்த விடயத்தில் ஒவ்வொரு ஊரின், அந்தந்த மக்களின் வரலாறுமே மிக முக்கியமான ஆவணங்களாக அமைந்துவிடுகின்றன.
வரலாற்றில் எமக்குள்ள அசிரத்தையை நீக்கும் முகமாக, நூலகம் நிறுவனம் முன்மொழிந்துள்ள திட்டம் “ஊர் ஆவணப்படுத்தல் திட்டம்“. இலங்கையின் ஒவ்வொரு ஊரும் தன் ஊரின் வரலாறு, மரபுகள், அங்கு மறைந்துவரும் வழக்காறுகள், புகழ்பெற்ற இடங்கள் அனைத்தையும் காணொளி, புகைப்படம், ஒலி, பல்லூடக வடிவங்களில் சேமித்து இணையத்தில் வலையேற்றுவது அத்திட்டத்தின் நோக்கம். ஆய்வாளர்களும் ஆர்வமுள்ளவர்களும், இருந்த இடத்திலிருந்தே அவற்றைத் தேடி அறிந்துகொள்ளும் வண்ணம், ஆவணகம் வலைத்தளத்தில் அவை பாதுகாப்பாக சேமிக்கப்பட்டிருக்கும். இன்று இல்லாவிட்டாலும், என்றோ ஒருநாள் அவற்றின் பெறுமதி விலைமதிப்பற்றதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
நூலகம் நிறுவனம் முன்மொழிந்துள்ள ஊர் ஆவணப்படுத்தும் திட்டத்தின் கீழ், கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பிலுவில் கிராமம் ஆவணப்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் யாழ்ப்பாண மாவட்டம் அரியாலைக் கிராமமும், மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதி கிராமமும் இத்திட்டத்தில் உள்ளீர்க்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் நூலக நிறுவனம் அரியாலை மக்கள் ஒன்றியங்களின் பங்களிப்புடன் அரியாலை ஊர் ஆவணமாக்கலில் தற்போது ஈடுபட்டுவருகின்றது. இக்கிராமங்கள் தொடர்பான பழைய நூல்கள், ஏட்டுச்சுவடிகள், புகைப்படங்கள், வரைபடங்கள், வாய்மொழி வரலாறுகள் என்பன படிப்படியாகத் தொகுக்கப்பட்டு ஆவணகம் வலைத்தளத்தில் தரவேற்றப்பட்டு வருகின்றன.
ஊர் ஆவணப்படுத்தலின் முதன்மையான நன்மையே,அந்த ஊருக்கு இயல்பாகவே உருவாகிவந்த தனித்துவமான வழக்கங்கள் வெளிவரும் என்பது தான். அந்த வழக்கங்கள் உருவாகக் காரணம் என்ன என்பதை மானுடவியல் மற்றும் சமூகவியல் ரீதியில் ஆராயும் போது, பல வரலாற்று வாசல்கள் திறக்கும்.
ஒரு சிறு உதாரணமாக ஊர் ஆவணப்படுத்தலில் ஈடுபடுத்தப்படும் தம்பிலுவில் கிராமத்திலே கண்டறியப்பட்ட தனித்துவங்களைச் சொல்லலாம். கிழக்கிலங்கையின் வேறெந்தக் கிராமங்களிலும் அவதானிக்கப்படாத “தனிஷ்டா பஞ்சமி” வழக்கம் (குறித்த நட்சத்திரத்தில் ஒருவர் மரிக்கும் போது குடும்பத்தார் குறிப்பிட்ட நாட்கள் வீட்டைப் பூட்டிவைத்தல்) தம்பிலுவில் கிராமத்தில் அவதானிக்கப்பட்டுள்ளது. குழந்தையொன்று பிறந்த பின்னர் இடம்பெறும் “மருங்கை” எனும் விருந்துபசாரம், வேறு இடங்களில் முப்பது நாட்களின் பின்பேயே நிகழ, இவ்வூரில் மாத்திரம் ஒன்பதாம் நாள் இடம்பெறுகிறது. கிழக்கிலங்கைக்குத் தனித்துவமான “கொம்புமுறி” விளையாட்டில், எல்லா ஊர்களிலும் தந்தைவழியே கருத்தில் கொள்ளப்பட, இவ்வூரில் தாய்வழியே பார்க்கப்படுகிறது. ஆண் – பெண் மைத்துன உறவுகளை முறையே “மெச்சான், மெச்சி” என்று அழைக்கும் இவ்வூர் வழக்கம், சுவாமி விபுலானந்தரால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. மூன்றுக்கும் மேற்பட்ட மேலைத்தேய ஆய்வாளர்கள் இவ்வூரின் சமூகவியலை விரிவாக ஆராய்ந்திருக்கிறார்கள். இப்படி மானுடவியல் ரீதியில் முக்கியமான பல தகவல்கள் இந்த ஒரே ஊரில் கிடைத்திருக்கின்றன. இப்படி, பல நூறு ஊர்கள் ஆவணப்படுத்தப்படும் போது எத்தனை செய்திகள் கிடைக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.
ஆரையம்பதி கந்தசுவாமி கோவில் குடமுழுக்கு விஞ்ஞாபனம் 1979
சாதாரணமாகவே, நாம் ஆவணப்படுத்தலின் முக்கியத்துவத்தை உணர்வதில்லை. தங்களிடமுள்ள பழைய ஆவணங்களை சிலர் குப்பைகளாகக் கருதி வெளியே வீச, இன்னும் சிலர் குடும்பச்சொத்து என்று மறைத்துவைத்து அவற்றை செல்லரித்துப்போக வைக்கிறார்கள்.
பழைய வாழ்த்து அட்டைகளோ, திருமண அழைப்பிதழ்களோ, மரண அறிவித்தல்களோ, கோயில் விஞ்ஞாபனங்களோ, எத்தனையோ குப்பையில் வீசப்பட்டிருக்கும். அவை ஒவ்வொன்றுமே ஆவணங்கள் தான். மிகப்பழைமையான ஆவணங்களை தங்கள் குடும்பப்பொக்கிஷமாக அல்லது தனிப்பட்ட சேகரிப்புகளாகப் பேணுபவர்கள் அவை உரியமுறையில் திரும்பிக் கிடைக்காது என்று அஞ்சுகிறார்கள். அத்தகைய அரிய சேகரிப்புகள் நவீன தொழிநுட்ப உத்திகளைப் பயன்படுத்தி போட்டோபிரதி அல்லது மின்வருடல் (scan) செய்யப்பட்டு வழங்கியபடியே உங்களை வந்தடையும் என்று உத்தரவாதம் தரமுடியும்.
நூலகம் முன்மொழிந்துள்ள இவ்வூர்கள் மாத்திரமன்றி, ஏனைய தமிழ் பேசும் மக்களுக்கும் ஒரு பணிவான வேண்டுகோள், தங்கள் தங்கள் ஊர் தொடர்பான ஆவணங்களைத் தனிப்பட்ட ரீதியிலேனும் சேகரிக்கத் தொடங்கலாம். என்னென்ன விடயங்கள் முக்கியமாக ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்ற விவரம் இங்கு உள்ளது. இயன்ற விரைவில் ஆவணப்படுத்துங்கள்! ஒவ்வொரு கணமும் நாம் ஏதோ ஒன்றை இழந்துகொண்டிருக்கிறோம் என்பதை, வரலாற்றை புறக்கணிக்கும் தமிழர்களாக வேதனையுடன் சுட்டிக்காட்டியே ஆகவேண்டி இருக்கிறது.
I’m in possession of the ‘Gazetteer of Central province of Ceylon’, a rare book written in 2 volumes in English, recording all the villages and their population, important landmarks and demographics in the Central province of Ceylon in late 1800’s. Originally published in 1896 and written by A.C. Lawrie who was a District Judge of Kandy. This gazetteer is recognized as an important record of late nineteenth century Ceylon.
I can lend this book for scanning purposes if needed.