‘திறந்த அணுக்க வாரம்’ (Open Access Week) எனும் பூகோள நிகழ்வு, வெற்றிகரமாக பத்தாவது தடவையாக இவ்வாண்டு ஒக்டோபர் 22 முதல் 28 வரை கொண்டாடப்பட்டு வருகிறது. நீங்கள் இணையப் புலமையாளர் உலகத்திற்கு நன்கு அறிமுகமானவர் என்றால், “திறந்த அணுக்கம்” (open access) என்ற சொல்லாடலை அடிக்கடி கடந்திருப்பீர்கள். உயர் கல்வி நிறுவகங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் நிகழ்கின்ற புலமைசார் ஆய்வுகளை உடனடியாகவும், இலவசமாகவும் சகலரும் பயன்படுத்துமாறு இணைய உலகில் வெளியிடுவதே ‘தகவலுக்கான திறந்த அணுக்கம்’ என்பதன் பொருள். நமது நூலகம் நிறுவனமும் திறந்த அணுக்கத்தைக் கைக்கொண்டுள்ள அமைப்பே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆய்வுகளின் பெறுபேறுகளையும் முடிவுகளையும், எவ்வித பாகுபாடுமின்றி யாரும் பயன்படுத்தலாம், மீள்பயன்படுத்தலாம் எனும் வசதி கிட்டும் போது, அது புலமை சார்ந்த தடைகளை இல்லாமலாக்குவதால், கல்வி மற்றும் மருத்துவ, விஞ்ஞான, தொழிநுட்ப உலகில் மாபெரும் அசுர வளர்ச்சியை ஏற்படுத்தும். மேலும் ஆய்வுகளுக்கான முதலீடுகள், ஆய்வேடுகளையும் கட்டுரைகளையும் வாசிப்போரின் எண்ணிக்கை என்பவற்றில் சடுதியான அதிகரிப்பை ஏற்படுத்தும் ஆற்றல் திறந்த அணுக்கத்துக்கு உண்டு. இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து, அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் புலமைசார் வெளியீடுகள் மற்றும் கல்வி வளங்கள் கூட்டமைப்பு (Scholarly Publishing and Academic Resources Coalition – சுருக்கமாக SPARC*) எனும் அமைப்பு திறந்த அணுக்க வாரத்தை முன்னெடுத்து வருகிறது. இதில் ஒரு மாணவனாக, ஆசிரியனாக, ஆய்வாளனாக, நூலகனாக, நீங்களும் இணைந்துகொள்ளலாம்.
திறந்த அணுக்கத்துக்கான முக்கியமான தடைகளுள் ஒன்று “பேவோல்” (PayWall) ஆகும். இதை, கட்டணச்சுவர் என்றோ அல்லது கொடுப்பனவுச்சுவர் என்றோ தமிழ்ப்படுத்தலாம். நீங்கள் இலங்கை மற்றும் தமிழக செய்தித்தாள்களின் இணையத்தளங்களை கட்டணம் செலுத்தி சந்தாதாரராகப் பார்வையிடும் ஒரு வாசகராக இருக்கலாம். தமது இணையத்தளங்களில் வெளியிடும் உள்ளடக்கங்களை மட்டுறுத்தி, கட்டணம் செலுத்தினால் மாத்திரமே அதை முழுமையாகப் பார்வையிடலாம் என்று நிபந்தனை விதிக்கும் செயற்பாட்டுக்குப் பெயர் தான் கட்டணச்சுவர். தமிழ்ச்சூழலில் இது செய்தி ஊடகங்களுக்கு மாத்திரமே வரையறுக்கப்பட்டிருக்க, பன்னாட்டுச் சூழலில், ஆய்வேடுகளை அணுகவோ, புலமைசார் கட்டுரைகளைப் படிக்கவோ தடைவிதிக்கும் முக்கியமான தடுப்பானாக கட்டணச்சுவர் காணப்படுகின்றது.
இணையத்தில் பரவலாதலை அடுத்து, அச்சு ஊடகங்களுக்கான கேள்வி குறைந்த பின்னணியில், மேலைநாட்டு ஊடகங்கள் சில, 2010இன் நடுப்பகுதியில் கட்டணச்சுவர் முறைமையை அறிமுகப்படுத்தின. அச்சுச் செய்தித்தாள்களின் எண்ணிக்கை குறைவினால் ஏற்பட்ட நட்டத்தை அதனால் ஓரளவு ஈடுசெய்ய முடிந்தது. இது பின்னாளில் புலமைசார் வலைத்தளங்களாலும் கடைப்பிடிக்கப்பட்டதை அடுத்து, மீத்திறனான ஆய்வேடுகளும் கட்டுரைகளும் கட்டணச்சுவர் முறைமைக்குள் நுழைந்தன. இது இணைய வாசகர் மத்தியிலும் அதிருப்தியையும் விமர்சனங்களையும் உருவாக்கியிருந்தது. ஒரு அச்சு இதழைப் படிக்கும் ஒருவர், அதை நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ பகிர்ந்துகொள்ள முடியும். ஆனால், கட்டணச்சுவர் முறைமை, இந்த வாய்ப்பை இல்லாமல் செய்துவிடுகிறது. சந்தாதாரராகுதல் கட்டாயம் என்ற விதி அங்கு காணப்படுவதால், அதன் வாசகர், அச்சு இதழுடன் கொள்கின்ற தொடர்பாடல் மனநிலையை இழக்கிறார்.
கட்டணச்சுவர் பொருளாதாரம் சார்ந்த ஏற்றத்தாழ்வுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவிக்கின்றது. அறிவோ புலமையோ விற்பனைக்குரியதாக இருக்கக்கூடாது என்ற திறந்த அணுக்க ஆதரவாளர்களின் குரல், கட்டணச்சுவர் முறைமையை புலமையில் பயன்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி ஓங்கி ஒலித்து வருகிறது. பேவோல் தொடர்பான விரிவான ஆவணப்படமொன்றை (Paywall: The Business of Scholarship) இங்கே நீங்கள் காணலாம்.