இழந்தவை ஏராளம்; இருப்பவற்றையாவது பாதுகாக்க வேண்டும்

Published on Author தண்பொழிலன்

Kopi
“தந்தை செல்வா பற்றிய நூல்களைச் சேகரித்துக் கொண்டிருந்தபோது, எதேச்சையாக நூலகமொன்றில், அவர் காலத்து விவரங்கள்  விரிவாகப் பதிவாகியுள்ள சுதந்திரன், ஈழநாடு ஆகிய நாளிதழ்களைக் கண்டெடுத்தோம். இப்போது நாம் செய்கின்ற ஆவணப்படுத்தல் முக்கியமானது தான் என்றாலும், கடந்த ஐம்பது, அறுபது ஆண்டுகளாக இந்த ஆவணப்படுத்தலை விடாமல் செய்துவந்தோரின் முயற்சியில் தான் மேற்படி இதழ்கள் எமக்குக் கிடைத்தன என்பதைக் குறிப்பிடவிரும்புகிறேன்” என்று தெரிவித்தார் திரு.கோபிநாத்.

அவுஸ்திரேலியாவின் ஏரிபிசி (ATBC) வானொலிக்கு அவர் நூலகம் நிறுவனம் தொடர்பாக வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார். தன்னைப் பற்றியும், நூலகம் நிறுவனம், நூலகம் மற்றும் ஆவணகச் செயற்திட்டங்கள் என்பன பற்றிய சுருக்கமான அறிமுகத்தைத் தந்த அவர், பின்பு மேலும் கூறுகையில், “நூலகத்தில் தற்போது சுமார் 50 ஆயிரம் வெளியீடுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. சுவரொட்டிகள், தபாலட்டைகள், வாழ்த்தட்டைகள் உட்பட மிகச்சிறிய பொருட்களையும் ஆவணப்படுத்துவதில் நாம் பின்னிற்பதில்லை என்பதே எமது சிறப்பம்சம் என்பேன்.

எழுத்தாவணங்களுக்குக் கொடுக்கும் அதே முன்னுரிமையை வாய்மொழி வரலாறுகளுக்கும் கொடுக்கிறோம். சொந்த அனுபவங்களை வாய்மொழி வரலாற்றில் கொணர்வது போல, அத்தனை தெளிவாக எழுத்தில் கொணர முடியாது. ஒரு ஆறுமணி நேர வாய்மொழி வரலாறு, ஆயிரம் பக்க புத்தகத்துக்குச் சமன். கடந்த ஆண்டு மட்டும் சுமார் 110 பேரின் வாய்மொழி வரலாறுகள் ஆவணகம் வலைத்தளத்தில் சேமிக்கப்பட்டுள்ளன. அவர்களில் இருவர் தற்போது இல்லை. அவர்களோடு மறைய இருந்த செய்திகளை ஆவணப்படுத்தியதில் எமக்குத் திருப்தி.” என்றார்.

வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய மூன்று இடங்களிலும் நூலகம் ஆவணப்படுத்தலை பரவலாகச் செய்து வருகிறது. யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பை மையப்படுத்தியதாக தற்போது இயங்குகிறோம். கிழக்கில் ஓரளவு நூலகப் பங்களிப்புகள் கிடைத்தாலும், போதிய நிதிவசதி இல்லாமையால் அங்கு அலுவலகம் அமைத்து ஆவணப்படுத்தலை துரிதப்படுத்தும் வாய்ப்பு இன்னும் சாத்தியப்படவில்லை. மேலும், இலங்கையிலுள்ள ஆளணியினரின் கொடுப்பனவும் சேர்த்து வாரத்துக்கு சுமார் ஒரு இலட்சம் இலங்கை ரூபா செலவாகிறது. எனவே எமது பங்களிப்பை மேம்படுத்த நிதி திரட்டும் தேவை இருக்கிறது. ஒருவர், வெறும் பத்து டொலர்களை, தொடர்ச்சியாக எமக்கு வழங்கி வந்தாலே போதும். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல, அது நிச்சயம் பெருந்தொகையை எமக்குப் பெற்றுத்தரும். நிதியுதவி செய்ய இயலாவிட்டாலும் பரவாயில்லை. தங்கள் வசமுள்ள  பழைமைவாய்ந்த ஆவணங்களைக் கொடுத்துதவினால் உதவியாக இருக்கும். நாம் இழந்தவை ஏராளம். இருப்பவற்றையாவது பாதுகாக்க வேண்டும்” என்று கூறி முடித்துக்கொண்டார்.

திரு.கோபிநாத்தின் உரையை இங்கு முழுமையாகக் கேட்கலாம்.

One Response to இழந்தவை ஏராளம்; இருப்பவற்றையாவது பாதுகாக்க வேண்டும்

  1. தங்கள் பணி உலக சமுதாயத்துக்கு எவ்வளவு தூரம் பயன்படும் என்பது வார்தைகளால் வடிக்க இயலாதது. தங்களின் மேலான சேவைக்கு நன்றி செலுத்த வார்த்தைகள் போரா.