“யாழ்ப்பாண இராச்சியம்” எனும் நூலானது, இலங்கைத் தமிழரின் வரலாற்றைப் பொறுத்தவரை, மிக முக்கியமானதாகும். பேராசிரியர்.சி.க.சிற்றம்பலம் அவர்களின் தொகுப்பில், 1992 இல் யாழ்.பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்த இந்நூல், வட இலங்கையில் நிலவிய தமிழரசு பற்றிய அதிகபட்ச சான்றாதாரங்களுடன் எழுதப்பட்ட அருமையான நூல் ஆகும்.
இந்நூலானது, அதிகபட்ச வரலாற்றுணர்வோடு இலங்கையில் எழுதப்பட்ட தமிழ்நூல்களில் ஒன்று எனலாம். யாழ் தீபகற்பத்தின் வரலாற்றைப் பாடுகின்ற, கைலாயமாலை, வையாபாடல், யாழ்ப்பாண வைபவ மாலை ஆகிய தொன்மங்களை அப்படியே எடுத்தாளாமல், அவற்றில் “கதை” எனத் தள்ளத்தக்கவற்றைத் தள்ளி, “உண்மை” எனக் கொள்ளக்கூடியவற்றைக் கொண்டு, இந்நூலில் கட்டுரை எழுதிய ஆசிரியர்கள், வரலாற்றை உருவி எடுக்கும் பாங்கு கவர்ச்சிகரமானதாக இருக்கிறது.
சிங்கை நகர், யாழ்ப்பாணப்பட்டினம், நல்லூர், இவை எல்லாம் ஒரே இடம் தானா அல்லது வெவ்வேறு இடங்களா என்ற சர்ச்சைகளுக்கும் இந்நூலில் ஒப்பீட்டளவில் திருப்திகரமான பதிலைக் காணலாம். இன்றைய யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பகுதிகளே பண்டுதொட்டு ஆரியச்சக்கரவர்த்திகளின் தலைநகராக விளங்கிவந்தன என்பதற்கான சான்றுகள் இதில் போதிய அளவு விளக்கப்பட்டுள்ளன.
“சங்கிலி” என்ற பெயர் கொண்ட ஆரியச்சக்கரவர்த்திகள் இருவர் என்பதை அறுதியாக முன்வைத்த நூல்களில் இந்நூலின் பங்கு சிறப்பிடம் பெறுகின்றது. சோழர், பாண்டியர், விஜயநகரப் பேரரசு, கேரளத்து சாமூத்திரி, தஞ்சை நாயக்கர், ஏனைய சிங்கள அரசுகள், போர்த்துக்கேயர் ஆகியோருடன் வட இலங்கை கொண்டிருந்த சமூக – அரசியல் – பண்பாட்டு உறவுகள் விலாவாரியாக விளக்கப்பட்டுள்ளன.
இந்நூலில் சொல்லப்படுகின்ற அரிய செய்திகளில் ஒன்றாக, அநியாயமாகக் கொலையுண்டு சிவபூதவராயர் என்ற பெயரில் நாட்டார் தெய்வமாக மாறிய ‘வீதிய பண்டாரம்’ எனும் சிங்களப் பெருவீரனின் கதையைச் சொல்லலாம். மேலும், யாழ்ப்பாணத்தின் சமூகவியல் – மானுடவியல் சார்ந்த முன்னோட்டமான ஆய்வுகளும் கருத்துகளும் இந்நூல் போல, வேறெந்த நூல்களிலும் விரிவாகக் கூறப்படவில்லை என்றே சொல்லவேண்டும்.
நூலின் அடுத்த பதிப்பு வெளிவந்ததா தெரியவில்லை. இடைப்பட்ட இருபத்தாறு ஆண்டுகளில் எத்தனையோ புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றையும் உள்ளீர்த்து, இந்நூலை இற்றைப்படுத்தி, விரைவில் மீண்டும் பதிப்பிக்க யாழ் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்த அரிய நூலை நீங்களும் நூலகம் வலைத்தளத்தில் தரவிறக்கிப் படிக்கலாம்.
நூலகம் வலைத்தளத்தில் உங்களுக்குப் மிகவும் பிடித்த ஒரு நூல் எது? அதுபற்றிய விபரங்களைக் கருத்துப்பெட்டியில் கூறுங்கள்.
ஈழத்தமிழர் வரலாறு (கி.பி 1000 வரை) தொகுதி 1