முகநூலில் அண்மையில் பிரபலமாக இருந்த ஐந்து புத்தகங்கள் சவால் (Five books challenge) பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். பொதுவாக இந்த சவாலில் தங்களுக்குப் பிடித்த ஐந்து புத்தகங்களின் அட்டைகளைப் பதிவிட்டு, இன்னும் ஐந்து பேரை இணைத்துக்கொள்வார்கள். அவ்வாறு இணைக்கப்பட்ட ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த ஐந்து புத்தகங்களின் அட்டைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
பிரபலமான அல்லது பலருக்கும் பிடித்தமான புத்தகங்களின் அட்டைகளே இந்த சவாலில் பெரும்பாலும் பகிர்ந்துகொள்ளப்பட்டன. எனினும், முகநூல் பதிவர்கள், பத்தோடு பதினொன்றாகக் கருதி அந்தப் பதிவுக்கு விருப்பம் தெரிவித்து விட்டுச் சென்றார்களே தவிர, வாசிப்பில் ஆர்வம் கொள்ளத்தூண்டும் விதத்தில் அந்த சவால் அமையவில்லை.
அமெரிக்காவின் ஃபைவ் புக்ஸ் எனும் வலைத்தளம், குறித்த துறையில் தேர்ந்த நிபுணர்களிடம் செவ்வி கண்டு, அந்தத் துறையில் சிபாரிசு செய்யக்கூடிய ஐந்து புத்தகங்களின் பட்டியலை பிரசுரித்து வருகின்றது. புத்தம் புதிய, ஆனால், கவனிக்கப்படவேண்டிய நூல்கள் இந்தப் பட்டியல்களில் அடங்கிவிடுவதால், வாசகர்களுக்கு மிகப்பயன் அளிக்கக் கூடிய பல நூல்கள் உடனுக்குடன் உலகுக்கும் தெரிய வருகின்றன. மிகச்சிறப்பான பணி.
தமிழில் இத்தகைய வலைத்தளம் எதுவும் இல்லை. வலைத்தளம் நடத்துமளவிற்கு அத்தனை ஆர்வமான விரிந்த வாசகர் வட்டமும் இல்லை. துறைசார் நிபுணர்களைக் கண்டறிவதும் இலகுவானதாக இல்லை. அதனால், நூலகம் நிறுவனம் இதில் குறித்த சில துறைகளிலேனும் தன் கவனத்தைச் செலுத்துவது நல்லது என்று கருதுகிறது. அதற்கு இணையத்தை விட்டால், வேறு இடம் ஏது?
இதோ! இது நமது நண்பர்களுக்காக நூலகம் நிறுவனம் விடுக்கும் சவால்!!!
இந்தச் சவாலை, நூலக நண்பர்கள், முகநூல், டுவிட்டர், வலைப்பதிவு, வலைத்தளம், யூரியூப் எனத் தாங்கள் விரும்பும் எந்த சமூக வலைத்தளங்களிலும் செய்யலாம்.
இம்முறை நம் தெரிவு, இலங்கை வரலாறு.
நீங்கள் செய்யவேண்டியது இது தான்.
1. இலங்கை வரலாறு தொடர்பாக வெளிவந்த, மிகச்சிறந்தவை அல்லது மிகப்பயனுள்ளவை என்று உங்களால் சிபாரிசு செய்யக்கூடிய, நீங்கள் வாசித்த, ஐந்து புத்தகங்களைப் பகிருங்கள்.
2. அவற்றை ஏன் சிறந்தவை என்று கருதுகிறீர்கள் என்பதற்கான சிறிய குறிப்பொன்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
3. இணையத்தில் (குறிப்பாக நூலகம், ஆவணகம் வலைத்தளங்களில்) அந்நூல் மின்னூலாகக் கிடைக்குமென்றால் உரலி முகவரியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
4. ஒவ்வொரு பதிவுடனும், உங்களுக்குத் தெரிந்த வரலாற்றில் ஆர்வமுள்ள நண்பர் ஒருவரை இணைத்து அவர்களுக்கும் சவால் விடுங்கள்.
5. முகநூல் அல்லது கீச்சு என்றால், #Noolaham #5புத்தகசவால் #இலங்கை_வரலாறு ஆகிய மூன்று tagகளையும் தவறாமல் இணையுங்கள்.
உங்களை யாரும் இதுவரை இணைக்கவில்லை என்றாலும், நீங்களே கூட ஆரம்பித்து வைக்கலாம். அந்த நூல்கள், தமிழோ ஆங்கிலமோ எந்த மொழியில் எழுதப்பட்டவை என்றாலும் சரி. (சிறந்த சிங்கள நூல்களையும் சேர்த்துக்கொள்ளலாம். அவை மொழிமாற்றப்பட வேண்டும் என்ற சிந்தனையை எடுத்துச் செல்ல முடியும்)
சிறந்த பதிவுத்தொடர்களை உங்கள் பெயர் குறிப்பிட்டு, நமது நூலகம் வலைத்தளத்தில் தனிப்பதிவாக சேமித்து வைப்போம். இந்த சவால் வெற்றியளித்தால், தொடர்ந்தும் வெவ்வேறு துறைகளில் சிறந்த நூல்களையும் நாம் கவனிக்கச் செய்யலாம்.
நூலகம் நிறுவனம் சார்பாக முதலில் மயூரநாதன், அருண்மொழிவர்மன், சிறீதரன் ஆகிய மூவருக்கும் முதல் சவாலை விடுக்கிறோம்.
எங்கே, ஆரம்பியுங்கள் பார்ப்போம்?
#Noolaham # 5புத்தகசவால் #இலங்கை_வரலாறு