புத்தகங்களுக்கு ஒரு நாள்!

Published on Author தண்பொழிலன்

இந்த ஆண்டிற்கான உலக புத்தக தினமானது ஏப்ரல் 23, 2018 திங்கட்கிழமையன்று உலகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கடந்த 1995இலிருந்து யுனெஸ்கோ அமைப்பின் அனுசரணையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் திகதி கொண்டாடப்பட்டுவரும் இத்தினமானது புத்தகம், அதன் பதிப்புரிமை மற்றும்  வாசிப்பைப் பழக்கத்தை அதிகரித்தல் முதலியவற்றை நோக்கமாகக் கொண்டதாகும். எனவே, சில இடங்களில் இது “புத்தக பதிப்புரிமை தினம்” என்றும் அழைக்கப்படுகிறது.

1920களிலேயே ஸ்பெயினில் உலக புத்தக தினம் பற்றிய கருதுகோள் தோன்றிவிட்டது என்றாலும், 1995ஆம் ஆண்டிலேயே யுனெஸ்கோ அமைப்பானது அந்நாளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டு உலகளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தியது. ஸ்பெயினின் மரபுக்கு மேலதிகமாக, சேக்ஸ்பியர் மறைந்த தினம் என்பதும் அந்நாளைக் குறிப்பிடத்தக்க ஒன்றாக மாற்றியது. எனினும் ஐக்கிய இராச்சியத்திலும் அயர்லாந்திலும் மாத்திரம் பெரிய வெள்ளி விடுமுறை கருதி இது மார்ச்சின் முதலாவது வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. அமெரிக்காவின் சில பகுதிகளில் ஏப்ரல் 26ஐ அண்டிவரும் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று, உலக புத்தக தினத்தை ஒட்டி, வீதிக்களியாட்ட நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கம். புத்தக தினத்தை ஒட்டி வருடாந்தம் ஸ்பெயினில் இடம்பெறும் உலகின் ஐம்பெரும் புத்தகத்திருவிழாக்களில் ஒன்றான புவனர்ஸ் அயர்ஸ் நூலங்காடி, இவ்வாண்டும் (44ஆவது முறையாக) நடைபெற்றது.

கடந்த ஆண்டு புவனர்ஸ் அயர்ஸில் இடம்பெற்ற நூலங்காடியில் ஒரு காட்சி. (படம்: விக்கிப்பீடியா)

தமிழகத்திலும் இலங்கையிலும் இடம்பெறும் புத்தகக் கண்காட்சிகள் வெறும் விழாமனநிலைக்கு மேல் பெரும்பாலும் பயனளிப்பதில்லை என்பதே கசப்பான உண்மை. உலக புத்தக தினக் கொண்டாட்டங்களும், அவற்றை வெவ்வேறு வளர்ந்த நாடுகள் கொண்டாடும் பாங்குகளும், புத்தகங்கள் எந்தளவுக்கு நேசிக்கப்படவேண்டும் என்பதற்கு சான்றுகளாகின்றன. அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவேனும் நூல்களை ஆராதிக்கும் மனப்போக்கு தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உருவாகி வளரவேண்டும். தனிப்பட்ட ரீதியிலேனும் நூல்களின் காதலர்களாக நாம் அதைச் செய்யவேண்டும். அதற்கு இந்த உலக புத்தக தினத்தில் சபதமேற்கலாம். அதற்கான தேவையும் கடமையும் கூட நமக்கு இருக்கிறது.