2025, ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்திற்கு, இலங்கையின் வடக்கு மாகாணத்தின் கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் வருகை தந்திருந்தார்.
நிறுவனத்தின் வரவேற்பறையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அரிய ஆவணங்களைப் பார்வையிட்ட இவர், ஓலைச்சுவடிகளை ஆவணப்படுத்துவது தொடர்பில் கூடுதலாக கேட்டறிந்து கொண்டார்.
தொடர்ந்து, நிறுவனத்தின் ஒவ்வொரு துறையினையும் சென்று பார்வையிட்ட போது, துறை சார் செயற்பாடுகள் மற்றும் அதில் காணப்படக்கூடிய தேவைகள் தொடர்பில் அந்தந்த துறைசார் தலைவர்கள் தெளிவாக விளக்கம் கொடுத்தனர்.
நூலக நிறுவனம் அதனது ஆவணப்படுத்தல் பணிகள் தொடர்பில் நேரடியாகப் பார்வையிட்ட இவருக்கு, நிறுவனத்தின் கட்டமைப்பு, செயற்பாடுகள், இதுவரையிலான அடைவுகள், ஆவணமாக்கல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் நிறுவனம் எதிர்கொண்டு வருகின்ற சவால்கள், தேவைப்பாடுகள் குறித்து நூலக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அலுவலர் றஞ்சுதமலர் நந்தகுமார் அவர்களால் விளக்கக்காட்சி ஊடாக தெளிவுப்படுத்தப்பட்டது.
இறுதியாக, “இன்று நூலகத்திற்கு விஜயம் செய்து பார்வையிட்டேன். மிகவும் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள். வளப்பற்றாக்குறை ஒரு பிரச்சினையாகவுள்ளது. வளப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்தால் இந்நிறுவனம் மிகவும் சிறப்பாக செயற்பட முடியும். இதனைச் சார்ந்த அனைத்து உத்தியோகத்தர்களின் பணிகளைப் பாராட்டி வாழ்த்துகிறேன். இந்நூலகம் மிகவும் சிறப்பாக இயங்குவதற்கு என்னாலான உதவிகளை செய்வதற்கும், நலன்விரும்பிகளின் பங்களிப்பை பெறுவதற்கும் உதவி செய்வேன்.” என தனது பின்னூட்டலை வழங்கிச் சென்றார்.
இவருடனான சந்திப்பில் நூலக பிரதம நிறைவேற்று அலுவலர் மற்றும் நிறுவனத்தின் ஏனைய பணியாளர்களும் இணைந்து கொண்டனர்.