நூலக நிறுவன வளங்கள் உயர் ஆய்வுக்கு பயன்படுத்த வல்லவை!

Published on Author தண்பொழிலன்
800px-நூலகம்_பட்டறை_26,2017_14
திருக்கோணமலை விக்கிப்பீடியா – நூலகம் பயிற்சிப்பட்டறை

நூலகம் அருமையான, அரிய படைப்புக்களை பாதுகாத்து அணுக்கம் வழங்குகின்றது.

இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில், நூலக நிறுவனத்தின் வலைத்தளங்களிலுள்ள நூல்களையும் இதர சேகரங்களையும் மட்டுமே அணுகித் தம் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதனூடாக பலரும் தம் முனைவர்ப் பட்டங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

திரு.அருண்மொழிவர்மன் மற்றும்  திரு.சுகந்தன் ஆகியோர் கனடாவின் சி.எம்.ஆர். வானொலிக்கு, கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி வழங்கிய செவ்வியில் மேற்படி தெரிவித்தனர்.

நூலகம் நிறுவனம், அது உருவான பின்னணி, அதன் துணைத்திட்ட வலைத்தளங்களான நூலகம் , ஆவணகம், ஈ-பள்ளிக்கூடம் முதலான வலைத்தளங்கள் பற்றிய சுருக்கமான அறிமுகத்தைச் செவ்வியின் ஆரம்பத்தில் இருவரும் பகிர்ந்துகொண்டனர். நூலகம் செய்து வரும் பெரும்பணியான ஆவணப்படுத்தல் மற்றும் தொகுத்தல் செயற்பாடானது, தமிழ்ச்சூழலைப் பொறுத்தவரை ஏற்கனவே நம்பியாண்டார் நம்பி, உ.வே.சாமிநாதையர், சேர். சி. வை. தாமோதரம்பிள்ளை, கணேசய்யர் என்று தொடர்கின்ற ஆயிரம் ஆண்டுக்கும் மேற்பட்ட தொடர்ச்சித் தன்மையை உடையது. ஆனால் அது பற்றிய தெளிவுபடுத்தலோ, ஆர்வமோ, அவ்வளவாகத் தமிழர்கள் மத்தியில் இல்லை என்பது கவலைக்குரியது.

உதாரணமாக கனடாவை எடுத்துக்கொண்டாலே, இங்கு ஈழத்தமிழர் புலம்பெயர்ந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள் இறுதிச்சடங்கு செய்வதில் மிகப்பெரிய வேறுபாட்டை அவதானிக்கலாம். வெறும் சிற்றுண்டிகளே மிகக் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வேறுபாட்டைக் காட்டுகின்றன. இவை எதுவுமே போதியளவு ஆவணப்படுத்தப்படவில்லை.

அருண்மொழிவர்மன் கருத்துரைக்கையில், நூலகம் தமிழ் பேசும் சமூகத்திலுள்ள பன்வகைமையைப் பேணவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. தமிழ்ச் சமூகத்துக்குள்ளேயே சிறுபான்மையாகக் கணிக்கப்படுபவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தப்படுகின்றது. பெண்கள், முஸ்லீம், சாதியம் முதலான  சிறப்புச்சேகரங்கள், மட்டக்களப்பு, மலையகம் என்று பிரதேச ரீதியாக ஆவணப்படுத்தல்கள் தற்போது நூலகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.

சுகந்தன் கூறுகையில், தமிழ் மொழிக்கென்று உலகளாவிய ரீதியில் உள்ள மிகப்பெரிய எண்ணிம நூல்நிலையமாக நூலகம் வலைத்தளமே காணப்படுகிறது என்பது மட்டற்ற பெருமிதத்தை ஏற்படுத்துகிறது என்றார்.

ஆனால் நூலகம் மீதான போதிய கவனம் இதுவரை செலுத்தப்படவில்லை என்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர். ஓர் இலாபநோக்கற்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு என்பதால், தன்னார்வத் தொண்டர்களின் ஒத்துழைப்புடனேயே பெரும்பாலும் இயங்குகிறது. மிகக்குறைந்த தொகை என்றாலும், தொடர்ச்சியாக நிதியதவி செய்யும் போது, நூலகம் நிறுவனத்தின் நிலைபேற்றை உறுதிசெய்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.

செவ்வியை முழுமையாகக் கேட்க: இங்கு செல்லவும்.