கல்வித் துறைகள், ஆய்வு முறைமைகள், சமூக நிறுவனங்கள் என்பன ஆக்கபூர்வமான விமர்சன நோக்கில் அணுகப்பட வேண்டியது அவசியம். நூலகங்கள் (Libraries), ஆவணகங்கள் (Archives), அருங்காட்சியகங்கள் (Museums) ஆகிய மூன்றும் இவ்வாறே கூர்மையாக நோக்கப்படவேண்டும். பெரும்பாலும் இத்தகைய நினைவக நிறுவனங்கள் சமூகத்தின் அதிகார மையங்களோடு தொடர்புடையவையாகவே அமைகின்றன. இவற்றில் எது ஆவணப்படுத்தப்படுகிறது, யார் ஆவணப்படுத்துகிறார்கள், எப்படி ஆவணப்படுத்துகிறது, யாருக்கு அணுக்கம் உள்ளது உட்பட்ட கேள்விகள் முக்கியமானவையாக அமைகின்றன.
இன்றைய நவீன நூலகம் – ஆவணகம் – அருங்காட்சியக துறை நிறுவனங்களின் கட்டமைப்பு மேற்குலகில் தோற்றம் பெற்றது. ஐரோப்பிய அறிவொளிக் கால எழுச்சி, காலனித்துவ ஆதிக்கம், தொழிற்புரட்சி ஆகியன இந்தத் துறைகளில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தின. எடுத்துகாட்டுக்கு இலங்கை நூலகங்களில் பரவலாகப் பயன்படும் தூவி தசம வகைப்படுத்தல் முறைமையின் முதன்மை ஆயிரம் பகுப்புக்களை உற்று நோக்கினால் மேற்குலகத் தாக்கம் தெளிவாக விளங்கும். அதில் 200இல் துவங்கும் சமயப் பகுப்பில் பெரும்பான்மையானவை கிறித்தவ சமயத்தைப் பற்றி அமைகின்றன. புத்த சமயத்தைப் பற்றியோ இந்து சமயத்தைப் பற்றியோ அல்லது இறைமறுப்பைப் பற்றியோ அங்கு பகுப்புகள் எதுவும் இல்லை.
ஆவணகங்கள் ஆட்சி அதிகாரங்களை முறைப்படுத்துவதிலும் (legitimizing), ஏதுவாக்குவதிலும் முக்கிய பங்கு வகித்துவந்துள்ளன. ஆவணங்களை உருவாக்குதல், சேகரித்தல், நிர்வகித்தல், அரசியல் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த ஒரு முக்கிய கருவியாக விளங்கிற்று. இன்றும் இலங்கை ஆவணகத்தில் ஒல்லாந்தர் கால ஆவணங்களை எண்ணிமப்படுத்தி பாதுகாப்பது, நெதர்லாந்து அரசின் ஆதரவில் முதன்மையாக முன்னெடுக்கப்படும் பணிகளில் ஒன்று என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அருங்காட்சியகங்கள் காலனித்துவ நாடுகளில் இருந்து செல்வந்தர்களால் கொண்டுவரப்பட்ட சேகரிப்புப் பொருட்களைக் காட்சிப்படுத்தவென தொடங்கப்பட்டனவாகும். இந்தத் தனியார் சேகரிப்புக்களில் இருந்தே இன்றைய பெரும்பாலான அருங்காட்சியகங்கள் உருவாக்கப்பட்டன. மேற்குலகின் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான அருங்காட்சியகங்கள் இன்றும் வன்முறையாகத் திருடப்பட்ட பெருட்களை கொண்டிருக்கின்றன.
இந்தப் பின்புலத்தைப் புரிந்து கொள்வதன் ஊடாகவே நூலகம், ஆவணகம், அருங்காட்சியகம் என்பவற்றை சீரமைக்கவும், அவற்றுக்கான மாற்றுக்களை உருவாக்கவும் முடியும். இந்த வரலாற்றுப் பின்னணியை நாம் மேலும் ஆழமாக அறிய பின்வரும் வளங்கள் உதவுகின்றன:
- Catalogues and the Collecting and Ordering of Knowledge (I): ca. 1550–1750 (ஆய்வுக் கட்டுரை)
- Why I quit the Art Gallery of Ontario: former Canadian-art curator Andrew Hunter explain (செய்திக் கட்டுரை)
- After #CadaanStudies (கட்டுரை)