2017இல் நூலக நிறுவனம்: ஒரு மீள் பார்வை

Published on Author தண்பொழிலன்

noolaham_revision_2017நூலக நிறுவனமானது, வெற்றிகரமாக தனது 14 ஆவது ஆண்டுக்குள் காலடியெடுத்து வைக்கும் இவ்வேளையில், கடந்த 2017இல் சிறப்பாகச் செய்துமுடித்த முக்கியமான மைல்கற்களையும், அடுத்த ஆண்டுக்காகவும் தொடரும் நடவடிக்கைகளையும் கவனப்படுத்த விரும்புகின்றது.

நூலகத்தின் 2017ஆம் ஆண்டில் செய்து முடிக்கப்பட்ட முதன்மை அடைவுகளாக பின்வருவனவற்றைப் பட்டியல் படுத்தலாம்.

Sutantiran1அரிய பத்திரிகைகள், இதழ்கள்  என்பவற்றை ஆவணப்படுத்தல்

இந்த ஆண்டு யாழ் நூலகத்திலும் இதர சேகரங்களிலும் இருந்த  சுமார் 25,000 வரையான ஈழத்து பத்திரிகைகள், இதழ்கள் ஆகியன எண்ணிம முறையில் பாதுகாக்கப்பட்டு உள்ளதுடன், பெரும்பான்மையானவை எண்ணிம நூலகத்தில் (noolaham.org) அணுக்கப்படுத்தப்படுகின்றன.

 

வாய்மொழி வரலாறுகள்

vaymozhiஎழுத்தாவணங்களைத் தாண்டி அறிவுத்தளங்கள் நேரடியாக ஆவணப்படுத்தப்பட்டு அணுக்கப்படுத்த வேண்டும் என்பது நூலக நிறுவனத்தின் முதன்மை நோக்கங்களில் ஒன்று.  வாய்மொழி வரலாறுகள் இதன் ஒரு முதன்மை வடிவம் ஆகும்.  முறையாகத் திட்டமிடப்பட்ட நேர்காணல் மற்றும் கட்டமைக்கப்படாத உரையாடல் மூலம் துறைசார்ந்த பலரது வாழ்க்கை அனுபவங்களும் அறிவும் காணொளிகள் அல்லது ஒலிப்பதிவுகளாக பதிவு செய்யப்பட்டு வாய்மொழி வரலாறுகள் வெளியிடப்படுகின்றன.  இந்த ஆண்டு தெளிவத்தை ஜோசப், கே. ஆர். டேவிட், யோகேஸ்வரி சிவப்பிரகாசம் உட்பட்ட 60 இற்கு மேற்பட்ட, ஈழத்தின் முதன்மை ஆளுமைகளின் வாய்மொழி வரலாறுகள் பதியப்பட்டு அணுக்கப்படுத்தப்பட்டன. 


பல்லூடக ஆவணகத் தள வெளியீடு

avanahaaஒளிப்படம், ஒலிப்பதிவு, காணொளி, இயல்பு எண்ணிம ஆவணம், மேற்கோள் உட்பட்ட பல தரப்பட்ட ஊடக வகைகளை பாதுகாக்கவும், அணுக்கப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் உதவும் வண்ணம் நூலக நிறுவனம் 2017 இல் ஆவணகம் பல்லூடகத் தளத்தை (aavanaham.org) வெளியிட்டது. நிறுவி ஓராண்டுக்குள்ளேயே ஆவணகம் பல பரிணாமங்களில் சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது.  ஜெயரூபி சிவபாலன், குலசிங்கம் வசீகரன், இ. மயூரநாதன், ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம், பிரபாகர் நடராசா, தமிழினி, ச. சாந்தன் உட்பட்ட பல பங்களிப்பாளர்களின் தன்னார்வப் பங்களிப்பால் நூலக ஒளிப்படச் சேகரம் 1,600 ஒளிப்படங்களைத் தாண்டியுள்ளது.  இந்தப் படங்கள் சமூக வரலாற்று கல்வி முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக விளங்குகின்றன.  பெரும்பாலானவை ஆவணக தரத்தில் (archival quality) அமைந்தவை.  இதில் பங்கேற்ற அனைவருக்கும் எமது நன்றியும்  பாராட்டுகளும் உரித்தாகட்டும்


முழுமையான தமிழ் நூற்பட்டியல்

avanahamஇலங்கைத் தமிழ் நூல்களின் முழுமையான நூற்பட்டியல் (bibliography/catalog) எண்ணிமப்படுத்தப்பட்டு இணையம் ஊடாக அணுக்கப்படுத்துவது ஒரு முக்கிய தேவையாக உள்ளது.  நூலகத்தின் நூல் விபரப் பட்டியல் செயற்திட்டத்தின் ஊடாக, இலங்கை நூலக முன்னோடி என். செல்வராஜா அவர்களின் உதவியுடனும் அனுமதியுடனும்  11,500 இற்கு மேற்பட்ட நூல் விபரங்கள் இதுவரை உள்ளிடப்பட்டுள்ளன.  தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான அனைத்து நூற்களைப் பற்றிய விபரங்களையும் சேர்ப்பது இந்தச் செயற்திட்டத்தின் தொலைநோக்காகும்.

 

 

நூலகம் – விக்கிப் பட்டறைகள்

hattonவிக்கிமீடியா, உத்தமம், சேர்வ் அறக்கட்டளை நிறுவனங்களுடன் இணைந்து நான்கு பட்டறைகளை நூலக நிறுவனம் 2017 ஒழுங்குபடுத்தியதுஏப்பிரல் 4 வடக்கில் கொக்குவிலிலும், ஆகத்து 24 வடக்கில் சாவகச்சேரியிலும், ஆகத்து 28 மலையகத்தில் ஹட்டனிலும், நவம்பர் 26 கிழக்கில் திருக்கோணமலையிலும் நான்கு பயிற்சிப்பட்டறைகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. இவற்றில், மொத்தமாக சுமார் நூறு பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றிருந்தனர்.

 

மலையக ஆவணக விரிவாக்கம்

மலையக நூற்பட்டியல் தொகுப்பு, மலையக கள ஆவணப்படுத்தல், எண்ணிமப் பாதுகாப்பு, மலையக தன்னார்வலர்களின் ஒருங்கிணைப்பு என மலையக ஆவணகச் செயற்திட்டம் இந்த ஆண்டு விரிவாக்கம் பெற்றது.


சுவடிகள் ஆவணப்படுத்தல்

manuscriptஅடுத்த தலைமுறைக்கு கிடைக்காமல் போய்விடும் வாய்ப்புள்ள ஏட்டுச் சுவடிகளை நூலகத்தின் களப் பணியாலும், தன்னார்வலர்களின் மனமுவந்த கொடைகளாகவும் பெற்றுக்கொள்ளப்பட்டு எண்ணிமப்படுத்தப்படும் செயற்பாடு முதற்கட்டமாக வடக்கில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் பயனாக தற்போது பல அரிதான ஏட்டுச்சுவடிகள் எண்ணிமப்படுத்தப்பட்டு, எண்ணிம முறையில் பாதுகாக்கப்பட்டு அணுக்கப்படுத்தப்படுகின்றன.

 

தொழிற்கலைகள் ஆவணப்படுத்தல்

thumbuதமிழ் விக்கிப்பீடியா சமூகத்துடன் இணைந்து தொழிற்கலைகள் ஆவணப்படுத்தல் செயற்திட்டம் மலையகம், கிழக்கு மற்றும் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கிழக்கில் தும்புத்தொழில் வாய்மொழி வரலாறாகவும் ஒளிப்படங்களாகவும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. மலையகத்தில் பறை வாத்தியம் உருவாக்குதல் முதலான தொழிற்கலைகள் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. வடக்கிலும் பல்வேறு தொழிற்கலைகள் தற்போது ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன.

 

இவை தவிர, பல்வேறு ஆய்வுப் பொருட் சேகரங்கள் (Thematic Research Collections), தனிநபர் சேகரங்கள் (Personal Collections) உட்பட்டவையும் பல வழிகளில் விரிவடைந்துள்ளன.

கடந்த ஆண்டு மாத்திரம் திருப்திகரமாகச் செய்துமுடிக்கப்பட்டுள்ள மேற்படி திட்டங்கள் யாவும், நாம் தான் செய்தோமா எனும் மலைப்பையும்  மகிழ்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளன. இனிவரும் ஆண்டுகளிலும் இச்செயற்றிட்டங்களைத் தொடர்ச்சியாகக் கொண்டுசென்று அவற்றை மேலும் பலப்படுத்தவேண்டும் என்பதே நூலகத்தின் குறிக்கோளாகும். வழமை போலவே வாசகர்கள், பயனர்கள், அனுசரணையாளர்கள் அனைவரினதும் பெறுமதியான ஆதரவை எதிர்பார்த்து 2018ஆம் ஆண்டில் வெற்றிகரமாகக் காலடி எடுத்து வைக்கிறோம்.  அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!