கொக்குவில் நம் ஊர் | ஊர் வலம் 02

Published on Author தண்பொழிலன்

FromtCover

“வில்வளைவான அமைப்புடைமையாற் குளங்களோடு சேர்ந்த பல தமிழ்ப்பெயர்கள் ஊர்ப்பெயராயின. பொத்துவில், தம்பிலுவில், கொக்குவில், கோண்டாவில், நந்தாவில், இனுவில், மல்வில், மந்துவில் இன்னும் பல இதற்கு உதாரணமாகும். செழிப்பான கியாதி நிறைந்த வரலாற்றுப் புகழ் வாய்ந்த யாழ்ப்பாணக்குடா நாட்டிலமைந்த ஊர்களில் புகழ்பூத்த ஒரு ஊர், கொக்குவில். கொக்கு ஒரு பறவை, ஒரு பூமரம், ஒரு குதிரை, மாமரம் என்றெல்லாம் பொருள்படும்.”

“கொக்குவில் நம் ஊர்” நூலுக்கான தன் அணிந்துரையில் யாழ்ப்பாணத்துக் கொக்குவில் பதியை இப்படித்தான் அறிமுகப்படுத்துகிறார் புலோலி முருகவே. பரமநாதன். அந்நூல். கொக்குவிலைச் சேர்ந்த த.செல்லத்துரை.நடராசா, சு.நா.பாலகுமார் ஆகியோரால் எழுதப்பட்டு, 2009இல் கனடா விவேகா பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட புத்தகம்.

புலம்பெயர்ந்து வாழ்வோரில், பிறந்தமண்ணை நினைத்து ஏங்காதவர்கள் யாருமே இருக்கமுடியாது. சொல்லப்போனால், ஊரின் பெருமையையும் அருமையையும் அறிந்துகொள்ள, வெளிநாட்டுக்குப் போய் வாழவேண்டி இருக்கிறதோ என அஞ்சத்தோன்றுகிறது. எனவே தான் தாயகம் பற்றிய பல காத்திரமான படைப்புகள் உள்நாட்டுடன் ஒப்பாக புலம்பெயர் தேசங்களிலும் அதிகளவில் உருவாகி இருக்கின்றன.

BackCover

கொக்குவில் நம் ஊர் அத்தகைய ஒரு அரிய படைப்பு. அணிந்துரை, மதிப்புரை, சிறப்புரை, முன்னுரை என்பவற்றை அடுத்து, இந்நூல் ஐந்து இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் இயல், கொக்குவில்லின் அமைவிடத்தையும் சிறப்புகளையும் பிரஸ்தாபிக்கிறது.

இரண்டாம் இயலில் கொக்குவில் மண்ணின் சான்றோர்களும் , மூன்றாம் இயலில் கொக்குவில்லில் அமைந்த கோவில்கள் பற்றிய விபரங்களும், நான்காம் இயலில் கல்விக்கூடங்களின் வளர்ச்சியும், ஐந்தாம் இயலில் சனசமூக நிலையங்கள் பற்றிய விபரங்களும் காணப்படுகின்றன.

பின்னிணைப்புகளாக சில கோவில்கள், பாடசாலைகளின் வண்ணப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. பத்தாண்டுகளுக்கு முன் வந்த நூல் என்ற வகையில் இந்த வண்ணப்படங்கள் அரிய சேமிப்புகள். கொஞ்ச நாட்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் பிரபலமாயிருந்த பத்துவருட சவாலில், இந்தப் படங்களைப் போட்டு, இன்றுள்ள தோற்றங்களையும் ஒப்பிட்டிருக்க முடியும்.

புலம்பெயர் தேசத்திலிருந்தவாறு இவ்வாறான கூட்டு முயற்சியுடன் உருவான நூல் என்ற வகையில் இந்நூல் ஊர் வலத்தில் கவனிக்கத்தக்க இடத்தைப் பெற்றுக்கொள்கிறது.

நூலகம் தமிழ் கிராமங்களை ஆவணமாக்க தொடங்கியிருக்கும் இவ் வேளையில்  இவ்வாறான நூல்களையும் அவற்றினை ஆவணப்படுத்திய முறைகளையும் அலசுவது முக்கியமாகிறது.

இவ்வகையில் இந்நூலினை நூலகத்திற்கு வழங்கி அதற்கு அனுமதியும் அளித்த கனடாவில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் ஒருவரான திரு த.செல்லத்துரை.நடராசா அவர்கள் எம்நன்றிக்குறியவர்.

நூலை வாசிக்க: இங்கு அழுத்துங்கள்