ஏழாலை | ஊர் வலம் 01

Published on Author தண்பொழிலன்

சமூகமொன்றின் இருப்புக்கு வரலாறும் பண்பாடும் அத்தியாவசியமானது. வரலாறு, மற்றும் தொல்லியல் சான்றுகளை, அறியாமையாலும் வேறு புறக்காரணிகளாலும் நாம் கைவிட்டுச் செல்லும் இந்தக் காலத்தில், அவற்றை எதிர்காலத்துக்குக் கடத்த முடியாவிட்டாலும், ஆவணப்படுத்தியாவது வைக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நம் சமூக அலகுகளில்  ‘ஊர்’ என்பது முக்கியமான ஒன்று. அந்த மட்டத்திலேயே ஆவணப்படுத்தலை மேற்கொள்வது சிறப்பானது. ஊர் ஆவணப்படுத்தலை இன்னொருவர் செய்யாது, அந்தந்த ஊரவரே செய்யும் போது, அதன் பெறுமதி அதிகமாக இருக்கும். நம்பகத்தன்மை, சரிபிழை முதலிய பல தகவல்களையும் அதனுடன் இணைத்து ஆராயக்கூடியதாக இருக்கும்.

 

நமது நூலக நிறுவனம், ஊர் ஆவணப்படுத்தலில் கூடிய சிரத்தை எடுத்து வருகின்றது என்பது நம் நேயர்களான உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.  தத்தம் ஊரை, அந்தந்த ஊரவரே ஆவணப்படுத்திக்கொள்வது அவசியமானது.   அதன் பயனாகவே தம்பிலுவில், அரியாலை, ஆரையம்பதி ஆகிய மூன்று கிராமங்கள் நூலகத்தின் நேரடிக் கண்காணிப்பில் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. ஊர் ஆவணப்படுத்தலில் ஆர்வமாக இருக்கும் ஊர்களுக்கு வழிகாட்டல்களை வழங்கவும் நூலகம் தயாராக இருக்கிறது. அதற்கு ஏற்றவகையில், ஏற்கனவே வெளியான ஊர் ஆவணப்படுத்தல் தொடர்பான நூல்களை உசாத்துணைகளாக அறிமுகப்படுத்துவது தான் ஊர் வலம் எனும் நமது புதிய பகுதியின் நோக்கமாக இருக்கப்போகிறது.

இம்முறை நாம் பார்க்கப்போகும் நூல், நா.முத்தையாவால் எழுதப்பட்டு நாவலப்பிட்டி ஆத்மஜோதி பிரசுரத்தால் வெளியிடப்பட்ட “ஏழாலை” எனும் நூல். யாழ் மாவட்டம் வலிகாமப்பிரிவில் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்த ஊரான ஏழாலையைப் பற்றிய நூல் இது. சரியாக 42 ஆண்டுகளுக்கு முன், வேறொரு சூழலில், வேறொரு காலப்பின்னணியில் இது எழுதப்பட்டிருக்கிறது என்பதை மனதில் நிறுத்திய படி நூலுக்குள் நுழைவோம்.

நூல் அட்டை
நூல் அட்டை

“தேசப்பற்று, ஊர்ப்பற்று, நாட்டுப்பற்று எல்லாருக்கும் இருக்கவேண்டிய ஒன்றாகும், ஆனால் அப்பற்று மற்றைய இனத்தவரையோ மற்றைய ஊரவரையோ துன்புறுத்தவதாக அமையக்கூடாது” என்ற வரிகளுடன் ஆரம்பிக்கும் ஆசிரியரின் முன்னுரை, மிக எளிதாக தான் சொல்லவருவதை சொல்லி முடித்து விடுகிறது. பண்டிதர் சி.கணபதிப்பிள்ளை, பேராசிரியர் சு.வித்தியானந்தன் ஆகியோரின் அணிந்துரைகள் வாசித்து நயக்கத் தக்கவை.

அணிந்துரைகளைத் தொடர்ந்து ஆரம்பமாகும் நூல், ஏழாலையின் பெயர்க்காரணத்தை முதலில் ஆராய்கிறது. பழைமை வாய்ந்த ஏழு ஆலயங்கள் அமைந்ததாலேயே தம் ஊருக்கு ஏழாலையம் எனும் பெயர் உருவாகி, அது அம் கெட்டு ஏழாலை ஆனது என்கின்றது நூல்.

நீர்வளமும் நிலவளமும், கிணறு காவிகள், மருதநிலம், மேலோட்டமான பார்வை,கிராமசபை முதலான அடுத்த பாகங்கள், ஏழாலையூரின் செழுமையையும் குடித்தொகை, புள்ளிவிபரவியல் தொடர்பான தகவல்களையும் தருகின்றன.

பின்பக்கங்களில் ஏழாலையைப் பிறந்தகமாகக் கொண்ட சி.வை.தாமோதரம்பிள்ளை, காசிவாசி செந்திநாதையர், சடைவரத சுவாமிகள், அருளானந்தசிவம் ஆகியோர் பற்றிய தகவல்கள் தரப்படுகின்றன. ஊடே ‘கனகிபுராணம்’ எனும் சிருங்கார நூலை எழுதிய சுப்பையனார் பற்றிய விவரங்களும் வருகின்றன. ஏழாலைக்குச் சிறப்பான நாட்டார் மரபு, நவீன இலக்கியகர்த்தாக்களையும் ஆசிரியர் விவரித்துள்ளார்.

ஏழாலையோடு இணைத்து நோக்கப்பட்ட, ஆனால் பிற்காலத்தில் குரும்பசிட்டி மற்றும் புன்னாலைக்கட்டுவனோடு நிர்வாக ரீதியில் பிரிக்கப்பட்ட குப்பிழான் கிராமம் பற்றியும் சில அரிய தகவல்களை ஆசிரியர் எழுதுகின்றார். இவை புவியியல் மற்றும் நிர்வாக எல்லைகள், காலத்துக்குக் காலம் எவ்விதம் மாறுபடுகின்றன என்பதப் புரிந்துகொள்ள முயல்வோர் கட்டாய வாசிக்கவேண்டிய வரிகள்.

ஏழாலையிலுள்ள கோவில்கள், பாடசாலைகள் பற்றிய விவரங்களும் அடங்கியுள்ளன. இன்னும் இந்நூல் கொண்டிருக்கும் அரிய செய்திகள் பலவுண்டு. உதாரணமாகச் சொன்னால்,1927இல் மகாத்மா காந்தி அயற்கிராமமான மல்லாகத்துக்கு வருகை தந்தபோது ஏழாலையில் சூடுபிடித்த தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் பற்றியும், ஏனைய யாழ்ப்பாணக் கிராமங்கள் போலன்றி, அருளானந்தசிவம் எனும் ஏழாலைப் பெரியார் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முறைப்படி சிவதீட்சை வழங்கி அவர்களது ஆலய நுழைவுக்கு எதிர்ப்பார் எவரும் இல்லாதாக்கினார் என்ற தகவலும் சமூகவியல் ரீதியில் முக்கியமானவை. கூடவே நகைச்சுவையாகவும், சற்று தீவிரமாகவும் ஒளிவுமறைவின்றி இங்கு விவரிக்கப்படுகின்ற சமூகவியல் சார்ந்த எதிர்மறைக் கருத்துக்கள், மானுடவியல் ஆய்வுகளில் இன்றியமையாத கருத்துக்களை வழங்கும் மையங்களாகத் திகழ்கின்றன.

நூல் எழுதப்பட்ட காலப்பின்னணியைச் சிந்தித்துப் பார்க்கும் போது, ஒருவேளை இதில் சொல்லப்பட்டுள்ள ஓரிரு எதிர்மறை அம்சங்கள் தொடர்பில் எதிர்ப்புகள் வந்திருக்கலாம். ஆனால் காய்தல் உவத்தலின்றி, அவற்றையும் ‘ஆவணப்படுத்தல்’ என்ற பக்கச்சார்பற்ற கண்ணாடி வழியே நோக்கி இந்நூலை யாத்த ஆசிரியர், நம் நன்றிக்கும் மரியாதைக்கும் உரியவர். இது ஓர் மகத்தான சாதனை தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஊர் ஆவணப்படுத்தலில் ஏழாலை பற்றிய இந்த அருமையான, அற்புதமான நூல் நமக்குக் கற்றுத்தரும் பாடம் இதுவே. ஆவணப்படுத்தலில் ஓரஞ்சாராமை. எதிர்கால ஆய்வுகளுக்கு ஒவ்வொரு ஊர்களும் தொடர்பாகக் கிடைக்கும் ஓரஞ்சாராத தகவல்கள் அளிக்கின்ற பங்களிப்பு கொஞ்ச நஞ்சமல்ல.