இசை மானுடனின் ஓய்வுப்பொழுதுகளை அழகாக்கி வருகின்ற மிகத் தொன்மையான கலை. வெற்று ஓசையான இரைச்சலை சந்தமாகவும் இசையாகவும் லயித்து அனுபவிப்பதற்கு மனிதன் எப்போது அறிந்தான் என்பது சரியாகத் தெரியவில்லை. எனினும், மூங்கில்களிலிருந்து புல்லாங்குழலையும், வில்லிலிருந்து யாழையும், இறந்த விலங்கின் தோலிலிருந்து தண்ணுமையையும் மனிதன் இயல்பாகவே கண்டறிந்தான் என்பது ஒரு கருத்து.
தமிழ் மரபில் இசைக்கு மிகப்பெரிய இடம் உண்டு. மிகப்பழைய தமிழ் இலக்கியங்களலிருந்தே நமக்கு இசை பற்றியும் இசைக்கருவிகள் பற்றியும் தொடர்ச்சியான சான்றுகள் கிடைத்தவாறு இருக்கின்றன. இசையை மன்னர்கள் கொண்டாடிய அளவுக்கு இசைக்கலைஞர்களையும் கொண்டாடியிருக்கிறார்கள். பாணன், விறலி, புலவன் முதலிய இசைக்கலைஞர்கள் பற்றிய செய்திகள் சங்க இலக்கியங்களிலேயே விரிவாகப் பதிவாகி இருப்பதைக் காணலாம்.
இசை மிகத்தொன்மையானது என்பதால், இசைக்கருவியைச் சமைக்கும் பாரம்பரியத் தொழிற்கலையும் மிகப்பழைமையானது என்பதை உய்த்துணரலாம். தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி ஆகிய மூன்று வகை இசைக்கருவிகளையும் ஆக்கும் பணி கடினமானது, நுணுக்கமானது, அக்கலைகளைப் பேண வேண்டிய அவசியமும் கட்டாயமும் நம் முன் எழுந்து நிற்கின்றது.
மலையகத்தில் மேளம் தயாரிக்கும் தொழிற்கலையானது, நமது நூலக நிறுவனத்தைச் சேர்ந்த களப்பணியாளர் லுணுகலை ஸ்ரீ மற்றும் அவரது குழுவினரால் அண்மையில் ஆவணப்படுத்தப்பட்டது. மேளத்தை அமைப்பதற்கான மரத்தைத் தேர்தல், உரிய விதத்தில் விலங்குத்தோலைப் பதப்படுத்தல், அதை மரத்தோடு இணைத்து மேளத்தை முழுமைப்படுத்தல் என்ற படிநிலையில் இத்தொழிற்கலை ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.
இது தொடர்பான வாய்மொழி வரலாறுகள், மேலதிக புகைப்படங்கள் என்பனவும் தற்போது நமது ஆவணக வலைத்தளத்தில் தரவேற்றப்பட்டு வருகின்றன. அவற்றில் சிலவற்றை நீங்கள் ஆவணகம் வலைத்தளத்தில் பார்வையிடலாம்: