அதிபர்கள் சந்திப்பும் பாடசாலை ஆவணமாக்கலும்

Published on Author தண்பொழிலன்

நூலக நிறுவனமானது வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளின் வெளியீடுகளை ஆவணப்படுத்தும் நோக்கில் பாடசாலைகளிலிருந்து மேற்கொள்ளப்பட்ட வெளியீடுகள் ,மாகாண, வலய மட்ட பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் பரிகார கற்றல் கையேடுகள் உட்பட மாணவர் கற்றல் கற்பித்தல் சார் விடயங்கள் போன்றவற்றை சேகரித்து எண்ணிமப்படுத்தி இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்கான எழுத்து மூல அனுமதியை வடமாகாண கல்வித்திணைக்களத்திடமிருந்து பெற்றுள்ளது. இதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு சுற்றறிக்கை மூலம் வட மாகாண கல்விப்பணிப்பாளர் செ.உதயகுமார் வலயப்பாடசாலை அதிபர்களை கேட்டுள்ளார்.

துணுக்காய் வலயக்கல்வி அலுவலகம், முல்லைத்தீவு
துணுக்காய் வலயக்கல்வி அலுவலகம், முல்லைத்தீவு

 

இதன் முதற்கட்டமாக , துணுக்காய் கல்வி வலயப் பணிப்பாளரின் ஒத்துழைப்புடன் 04.01.2019 வெள்ளிக்கிழமை அன்று வலயக் கல்விப் பணிமனையில் வழமையாக நடைபெறும் அதிபர்களுக்கான கூட்டத்தில் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர்களுடன் நூலக நிறுவனத்தினர் சந்திப்பொன்றை நடத்தினர். இதில் நூலக நிறுவனம் மற்றும் அதன் செயற்பாடுகள் பற்றியும் குறிப்பாக பாடசாலை வெளியீடுகளாகிய ஆண்டு மலர்கள், பரிசளிப்பு விழா மலர்கள், விளையாட்டு விழா மலர்கள், அதிபர் அறிக்கைகள், கல்லூரிச் சஞ்சிகைகள், கழகங்கள், சங்கங்களின் மலர்கள், விழா மலர்கள், செய்திமடல்கள், பாராட்டு மலர்கள், பழைய மாணவர் வெளியீடுகள் மற்றும் ஏனைய பாடசாலை வெளியீடுகளையும் கல்வி வளங்களாகிய கடந்தகாலப் பரீட்சை வினாத்தாள்கள், மாதிரி வினாத்தாள்கள், பரீட்சை வழிகாட்டிகள், பாடக் குறிப்புக்கள், பயிற்சி வளங்கள் மற்றும் ஏனைய கற்றல், கற்பித்தல் வளங்களையும் சேகரித்து ஆவணப்படுத்தும் முயற்சி பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

யனவரி 4 அன்று இடம்பெற்ற துணுக்காய் அதிபர் சந்திப்பு
யனவரி 4 அன்று இடம்பெற்ற துணுக்காய் அதிபர் சந்திப்பு

 

அதேபோல் 11.01.2019 அன்று முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகமூடாக அதிபர்களைச் சந்தித்து பாடசாலை ஆவணப்படுத்தல் பற்றிய அறிமுகத்தை நூலகம் நிறுவனத்தினர் வழங்கினார்கள்.

முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகம்

முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகம்

 

யனவரி 11ஆம் திகதி முல்லைத்தீவு அதிபர்களுடனான சந்திப்பு
யனவரி 11ஆம் திகதி முல்லைத்தீவு அதிபர்களுடனான சந்திப்பு

 

பாடசாலை ஆவணப்படுத்தலில் நூலகம் கொண்டுள்ள அக்கறை எதிர்காலத்தில் நிச்சயம் பயனளிக்கும் என்று நம்பிக்கை கொள்வதற்கான இன்னொரு சம்பவம், நமது யாழ். அலுவலகத்தில் இடம்பெற்றிருக்கிறது. கொக்குவிலைச் சேர்ந்த பரியோவான் கல்லூரி மாணவன் எஸ். மானசன் கடந்த யனவரி 21ஆம் திகதி எமது அலுவலகத்துக்கு வருகை தந்து தன்னிடமிருந்த சாதாரண தர கடந்தகால வினாப்பத்திரங்களின் தொகுதியை எம்மிடம் ஒப்படைத்துச் சென்றார். அவர் கடந்த ஆண்டு தான் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்.

செல்வன் மானசன் ஒப்படைத்த வினாத்தாள்கள்
செல்வன் மானசன் ஒப்படைத்த வினாத்தாள்கள்

 

இந்த இளம் வயதில் அவருக்கு ஆவணப்படுத்தலில் ஏற்பட்ட ஆர்வம் எமக்கும் உற்சாகம் ஊட்டியது. அவருக்கு எங்கள் நன்றிகளும் பாராட்டுகளும். ஏனைய மாணவர்களும் இப்படி ஆவணப்படுத்தலில் ஆர்வம் கொள்ள வேண்டுமென்றும், பாடசாலைச் சமூகமும் ஆவணப்படுத்தலில் தவிர்க்கமுடியாத இடம் வகிக்கவேண்டும் என்றும் நூலகம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.