அறுபதாண்டுகளுக்கு முன் ஒரு புத்தாண்டு பருவகாலம் | காலக்கண்ணாடி 05

Published on Author தண்பொழிலன்

நூலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய 2019 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

 

இம்முறை காலக்கண்ணாடியில் நாம் பார்க்க இருப்பது, ஈழநாடு பத்திரிகை. யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து வெளியான பழம்பெரும் தினசரிகளில் ஒன்று. 1960 புத்தாண்டை அண்டி வெளியான அவ்விதழின் 1959 டிசம்பர் 26 இதழைத் தான் நாம் இன்று பார்க்கப் போகிறோம்.

eezhanadu01

“இடதுசாரிப் பிளவுகள்: டட்லி அதிர்ஷ்டம்” என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் பத்திரிகையின் தலைப்புச் செய்தியில், கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளைத் தோற்கடித்து யு.என்.பி வென்ற பின்னணி விளக்கபப்ட்டுள்ளது. ஜனநாயக காங்கிரஸ் மன்னாரிலும் மலைநாட்டிலும் போட்டியிடும் என்ற பெட்டிச்செய்தியும் முதற்பக்கச் செய்தியாக இடம்பிடித்துள்ளது.

 

சிங்கள வாக்காளர்களால் நகரசபைக்குத் தெரிவான உணுப்பிட்டி வட்டாரத்தின் சார்பில் தெரிவான திருமதி மீனா இரத்தினத்தின் பேட்டி இரண்டாம் பக்கத்தை அலங்கரிக்கிறது. அறுபது ஆண்டுகளிலேயே உணுப்பிட்டி எனும் இவ்வட்டாரம், இன்று தமிழிலும் ஹூனுப்பிட்டி என்றே அழைக்கப்படுகிறது என்பதையும் நாம் அவதானிக்கவேண்டும். “வகுப்புவாதக் கூச்சல் இனி இங்கு பலிக்காது” என்ற அம்மணியின் கூற்றில் உள்ள உறுதியும் நம்பிக்கையும் நம்மையும் மெய்சிலிர்க்கவைக்கிறது. இந்தப் பத்திரிகை வெளியான காலத்தில் “வகுப்புவாதம்” “வகுப்புவாதம்” என்றெல்லாம் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டடுள்ளது.

 

தர்ம சமாஜக் கட்சி விடுத்துள்ள பத்திரிகை அறிக்கையில் “50 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்” என்ற கோரிக்கை உட்பட பல கட்சிக்கொள்கைகள் விவரிக்கபப்ட்டுள்ளன. 10ஆம் பக்கத்தில் “வடபகுதி பார்லிமெண்ட் தொகுதிகள் அதிகரிக்கபப்ட்டுள்ளன” என்ற தலைப்புடன், உடுவில், நல்லூர், கிளிநொச்சி, உடுப்பிட்டி ஆகிய புதிய தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளமை பற்றிய செய்தி விரிகின்றது. இந்தச் செய்தியின் காலத்தில், இன்னும் கிளிநொச்சி மாவட்டம், யாழ்ப்பாணத்திலிருந்து பிரிந்து தனிமாவட்டம் ஆகவில்லை என்பதை நாம் கவனிக்கவேண்டும்.

 

ஈழநாடு சிறுவர் பகுதி ‘சின்னமாமா’வால் எழுதப்படுவதுடன், சிறுவர்கள், புதிய மருமக்கள் என்ற பெயரிலேயே இணைக்கபப்டுகிறார்கள்.  டிசம்பர் 26 என்பதால் நத்தாரை ஒட்டி பல சிறப்புக் கட்டுரைகளும் துணுக்குச் செய்திகளும் இடம்பெற்றுள்ளன.

 

ஆசிரியர் தலையங்கத்தில் விடைபெறும் 1959 பற்றிய தகவல்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. நிலவில் மனிதன் காலடி எடுத்து வைத்த ஆண்டு என்ற பெருமிதமான அறிமுகத்துடன், 1959 புகழப்படுகிறது. இரண்டாம் உலகப்போர், பனிப்போர் பற்றிய தகவல்கள், இந்திய – சீன எல்லை யுத்தம், இவற்றிலெல்லாம் ஏற்பட்டுள்ள சமாதான நகர்வுகள் வரவேற்கப்படுகின்றன கூடவே இலங்கையின் உள்நாட்டரசியலில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் இகழப்படுகின்றன. பண்டா கொலைச்சம்பவம் சோகத்துடன் குறிப்பிடப்படுகின்றது. எனினும் அன்றாடத்தில் என்றேனும் விடிவை எதிர்நோக்கும் மானுட மனத்தின் எதிர்பார்ப்பைச் சொல்லியே 1960ஐ வரவேற்று ஆசிரியர் தலையங்கம் நிறைவுறுகின்றது.

 

இலக்கியமும் ஈழநாட்டில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருக்கிறது. வ.அ.இராசரத்தினத்தின் “துறைக்காரன்” என்ற சிறுகதை, வே.க.ந எழுதும் “தமிழில் கட்டுரை வளர்ச்சி” எனும் தொடரின் இரண்டாம் பாகம் என்பன அவற்றில் குறிப்பிடத்தக்கவை. பண்பாடு, ஒழுக்கம், வாழ்க்கைநிலை என்பவற்றை செம்மைப்படுத்தும் சிறுகதைகளை எழுதி அனுப்புமாறு எழுத்தாளர்களிடம் ஈழநாடு கோரும் பெட்டிச்செய்தி ஒன்றும் கருத்தைக் கவர்கின்றது.

 

ஈழத்தின் இயற்கைக்காட்சிகள் பற்றிய “போட்டோ” அழகுப்போட்டி ஒன்றுக்கான அழைப்பும் விடுக்கப்பட்டிருக்கிறது. இன்றைய டிஜிட்டல் கமராக்கள் இல்லாத காலம் என்பதை நினைவுகூருங்கள். வெல்லும் மூவருக்குள் ஒருவராக வந்தால், 50, 25 அல்லது 15 ரூபா காசு உங்களுக்குக் கிடைத்திருக்கும்.

நாகேஸ்வரராவ், ஜமுனா ரேலங்கி நடித்த “கண் நிறைந்த கணவன்”, வைஜயந்திமாலாவின் “அதிசயப்பெண்”, ஜெமினி கணேசன், எம்.என்.ராஜம், எம்.என்.நம்பியார் நடித்த “பெண்குலத்தின் பொன் விளக்கு” முதலிய பல படங்களுக்கான விளம்பரங்கள் வெளிவந்துள்ளன. பெண்குலத்தின் பொன் விளக்கு விளம்பரத்தின் கீழே இடப்பட்டுள்ள வாசகம்.

விளம்பரங்கள் வழமை போலவே சுவையானவை. ஹார்லிக்சுக்காக  எழுதப்பட்டுள்ள கலாசாலைக் கடமைகள் எனும் கோட்டுச்சித்திர விளம்பரம் “ஜெயிஸ் பிளுயிட்” நெருப்புத்தண்ணீருக்கான விளம்பரம் அவற்றில் முக்கியமானது. நெருப்புத்தண்ணீர் இன்றும் நம் பாட்டிமாரின் பேச்சுவழக்கில் இருப்பது தான். டெற்றோல் முதலான கிருமிநீக்கிகளுக்கான அன்றைய பெயர் தான் நெருப்புத்தண்ணீர்.  பூச்சிநாசினி பொலிடோலுக்கான விளம்பரமும், நெக்கி தையல் மெஷினுக்கான விளம்பரமும் அடுத்து கண்ணைக் கவர்பவை.  1960 தினக்குறிப்பு அப்போது 75 சதத்துக்கு விற்கப்பட்டிருக்கிறது. வேறொன்றுமில்லை; நாட்குறிப்பேடு  –  டயரி தான்!ஏக்ஷ்ஹனடு02

புத்தாண்டுகள் எல்லாமே புதிய நம்பிக்கைகளுடனும் கடந்த கால ரணங்களை ஆறச்செய்யும் எதிர்பார்ப்புகளுடனுமே பிறக்கின்றன். போர், இயற்கை இடர்கள் என்று சொல்லொண்ணாத் துயரங்களை எதிர்கொண்ட நாம், வழக்கம் போலவே மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுடன் தான் இந்த 2019இலும் காலடி எடுத்து வைத்திருக்கிறோம். சரியாக அறுபதாண்டுகளுக்கு முன் நம் நாட்டில் ஒரு புத்தாண்டு எப்படிப் பிறந்தது, அது பிறந்தபோது மக்களுக்கிருந்த முக்கியமான பிரச்சினைகள் என்னென்ன ? அவ்வாறான பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விட்டனவா?  இன்னும் தொடர்கின்றனவா ? இல்லையெனில் புதிய வடிவம் பெற்றுள்ளனவா ? என்றெல்லாம் எம்மை சிந்திக்க வைக்கிறது இந்த ஈழநாடு பத்திரிகை.

 

பத்திரிகையை வாசிக்க:  இங்கு அழுத்தவும்.

ஈழநாடு ஏனைய இதழ்களை வாசிக்க: இங்கு அழுத்தவும்