மலரின் தாய் – மலரன்னை வாய்மொழி வரலாறு


தூரத்தே கிறீச்சிடும் பறவைகள். மெல்ல ஓலமிடும் நாய். படுவேகமாகக் கடந்து செல்லும் வாகனங்கள். அவற்றின் இடையே தீனமான ஆனால் உறுதியான குரலில், “இப்ப உடல்நிலை சரியில்ல. தொடர்ந்து எழுதேலாமக் கிடக்கு. ஆனா தொடர்ந்து எழுதோணும் எண்டு ஆசையா இருக்கு.” என்று மலரன்னை சொல்லும் போது, அக்குரல் நம்மையும் ஏதோ செய்வதைக் உணரலாம்.

பழைய எழுத்தாளர்களில் ஒருவரான கச்சாய் இரத்தினத்தின் மூத்த மகளாகப் பிறந்த “அற்புதராணி காசிலிங்கம்” அம்மையாரின் புனைபெயர் தான் மலரன்னை. தற்போது யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் வசித்து வரும் இவர், 1993இலிருந்து தொடர்ச்சியாக இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருபவர். பரணிதரனால் 2017இல் அவர் வீட்டில் எடுக்கப்பட்ட வாய்மொழி வரலாறு தான் இது.

கணவர் மருத்துவர். நான்கு மகன்கள் என்று அழகான குடும்பம். நான்காவது மகன் மலரவன், உயர்தரம் படிக்கும் போது விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்துகொள்கிறார். அங்கும் இலக்கியம் மூண்டெழ பல கவிதைகளும் நாவல்களும் அவரால் எழுதப்படுகின்றன. 1992இல் அவர் மரித்தபின்னர், அந்த இழப்பிலிருந்து மீளவும், மூத்த மகனது ஊக்கத்தாலும், ஈழத்து இலக்கிய உலகுக்குக் கிடைத்தவர் தான் “மலரன்னை”.

மலரவனின் “போருலா” எனும் நாவல், உலக அளவில் பரவலாகக் கவனிக்கப்பட்ட ஒன்று. ஆங்கிலத்தில் “War Journey” என்ற பெயரிலும் அது வெளியாகியுள்ளது. அவரது துயரப்பறவை எனும் நாவல், வடகிழக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றிருக்கிறது. இவையும் மலரவனின் ஏனைய ஆக்கங்களும், போரில் காயமுற்று வீட்டில் தங்கியிருந்த காலத்தில் தன் மகனால் எழுதப்பட்டவை என்ற தகவலைத் தருகிறார் மலரன்னை.

மலரவன் பற்றிப் பேசும் போது அவரது குரலில் இழையோடும் தாய்மையையும் சோகத்தையும் நம்மாலும் உணர்ந்துகொள்ளமுடிகிறது. வாய்மொழி வரலாற்றைக் கேட்பதன் வெற்றிகளில் ஒன்று அது. அற்புதராணி மலரன்னையாக மாறுகின்ற அரிதான தருணங்கள்.

1993இல் மலரன்னை எழுதிய முதலாவது சிறுகதை ஈழநாதத்தில் வந்தது. ” கனவுகள் நனவாகும் ” என்ற தொடர்நாடகம் நாற்பத்தி மூன்று அங்கங்களாக இலங்கை வானொலியில் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்றது. “பாலைவனத்துப்புஷ்பங்கள்” என்ற நாவல் தேசிய கலாச்சாரப்பேரவையின் தேர்வில் இரண்டாம் பரிசுபெற்றது. முன்பு எழுதிய நாவல்கள், குறுநாவல்கள் பல யுத்தகாலத்தில் தொலைந்துபோயிற்று என்ற தகவலும் குறுநாவல்கள் சில அச்சிடப்படவில்லை என்ற தகவலும் ஊடே சொல்லப்படுகின்றன.

தன் எழுபத்தைந்தாவது பிறந்தநாளில், தான் எழுதிக்கொண்டிருக்கும் “குயிலி” எனும் நாவலை வெளியிடவேண்டும் என்பது அவரது ஆசை. அம்மையாரின் கனவு நிறைவேற வாழ்த்துக்கள்.

 

வாய்மொழி வரலாற்றைக் கேட்க: இங்கு அழுத்தவும்.