Virakeasari Sunday Jun 24
இலங்கையில் வாழ்ந்த காலப்பகுதியில் சிறிது காலம் இலங்கை ஒலிப்பரப்புக்கூட்டுத்தாபனத்தில் ‘கலைக்கோலம்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக வாரத்தில் ஒரு தடவை செல்வதுண்டு. அக்காலத்தில் அரசஊடகங்களில் குறிப்பாக இலங்கை வானொலியில் ‘ஈழம்’ என்ற சொல்லை பாவிக்க முடியாதிருந்தது.ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்று தொடங்கும் வசனங்களையெல்லாம் இலங்கை இலக்கிய வளர்ச்சி என்றே திருத்தி வாசிக்க வேண்டும். அத்துடன் சாதி என்ற சொல்லும் வந்துவிடக்கூடாது. எழுத்தாளர் கே.டானியல் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் மறைந்ததையடுத்து கலைக்கோலம் நிகழ்ச்சியில் அவர் பற்றிய ஒரு அஞ்சலிக்கட்டுரையை வாசிக்க வந்தவர் தற்போது தினக்குரல் பிரதம ஆசிரியராக பணியாற்றும் நண்பர் தனபாலசிங்கம். டானியல் யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதிக்கொடுமைகளுக்கு எதிராக போராடிய ஒரு போராளியாகவும் படைப்பிலக்கியவாதியாகவும் வாழ்ந்தவர். அவர் பற்றிய அஞ்சலிக்கட்டுரையில் ‘சாதி’ என்ற சொல் பந்திக்குப் பந்தி இருந்தது. ஒலிப்பதிவு கூடத்தில் கலைகோலம் நிகழ்ச்சியை பதிவு செய்யத் தொடங்கியப் போது மேலிடத்திலிருந்து அவசர உத்தரவு வந்தது. சாதி என்ற சொல்லை நீக்கிவிட்டு வேறு சொல்லை பாவிக்குமாறு அந்த உத்தரவு எம்மை பணித்தது. மின்னலென ஒரு யோசனை உதித்தது. ‘அடிநிலை மக்கள்’ என்று மாற்றினோம். இந்தத் தகவல்களை கடந்த 2011 ஆம் ஆண்டு கொழும்பில் நடந்த முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் இறுதி நாளன்று நடைபெற்ற படைப்பில் செவ்விதாக்கம் என்ற கருத்தரங்கு அமர்வில் உரையாற்றும் போது குறிப்பிட்டேன். அந்த அரங்கில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்த இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தமிழ்ச்சேவை பணிப்பாளராக கடமையாற்றிய நண்பர் திருஞானசுந்தரம் மென்மையான புன்னகையை உதிர்த்தவாறு கேட்டுக்கொண்டிருந்தார்.அவரது காலப்பகுதியில் அவர் அங்கே தமிழ் நிகழ்சிகளைப் பொறுத்தவரையில் கத்தியின் மேல் நடந்துகொண்டிருந்தார்.இலங்கையில் தமிழ் ஊடகங்களில் பணியாற்றும் பலரது நிலைமை அன்றும் அப்படித்தான் என்பதை சுட்டிக்காட்டுவதற்கே இந்தத்தகவல்களை இங்கு பதிவுசெய்கிறேன்.
ஈழம் என்றவுடன் பேரினவாதிகளுக்கு ஏனோ கலக்கம் வந்துவிடுகிறது. இலங்கையின் மற்றுமொரு பெயர் தான் ஈழம் என்பது அவர்களுக்கு ஏனோ புரியவில்லை. இந்த கணினியுகத்தில் ஈழத்தை தணிக்கை செய்ய முடியாது. ஈழத்து இலக்கியம், ஈழத்து எழுத்தாளர், முதலான சொற்பதங்களை தாராளமாகப் பாவிக்கலாம். இந்த ஆக்கத்தில் இணையத்தில் ஈழத்துத் தமிழ் நூலகம் பற்றி பதிவுசெய்ய விரும்புகின்றேன். 2011 ஆம் ஆண்டு மெல்பனில் நடந்த பதினொராவது தமிழ் எழுத்தாளர் விழாவில்கலந்துகொண்டு உரையாற்றுவதற்காக மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்திலிருந்து நண்பர் கோபி வந்திருந்தார். அவரது உரையில் அவரும் அவருடன் வேறு சிலரும் இணைந்து ஆரம்பித்த எண்ணிம ஆவணக் காப்பகமான இணையத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்துத்தமிழ் நூலகம் பற்றி விரிவாக குறிப்பிட்டார். விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு பயனுள்ள தகவல்கள் அடங்கிய பிரசுரங்களையும் விநியோகித்தார். உலகமே ஒவ்வொரு காலடியிலிருந்து தான் இயங்கத் தொடங்கியிருக்கிறது. மக்கள் நலன் சார்ந்த ஒவ்வொரு சமூகப்பணியும் எவராவது ஒருவரது தனிப்பட்ட அல்லது சிலரது கூட்டு முயற்சியில் தான் ஆரம்பமாகியிருக்கிறது. தீர்க்கதரிசனம் மிக்க எந்தவொரு ஆக்கபூர்வமான பணியும் முதலில் பாதகமான விமர்சனங்களை உள்வாங்கிக் கொண்டு தான் தனது காலடிகளை பதிக்கத்தொடங்கும்.
யாழ். பொது நூலக எரிப்பு ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் அறிவுலகத்திற்கும் மறக்க முடியாத பேரிழப்புத் தான். வெட்ட வெட்ட தழைக்கும் வாழை போன்று எந்த அழிவு வந்தாலும் வாழ்ந்து காட்டுவோம் என்று புகலிட நாடுகளிலெல்லாம் தமிழுக்காக பணி செய்துவருபவர்கள் ஈழத்தமிழர்கள் தான் என்று தமிழகத்தவர்களால் வியந்து போற்றுப்படுபவர்கள் மத்தியில் வாழும் கோபி உட்பட மேலும் சிலர் தொடரும் அயராத முயற்சியே இந்த எண்ணிம ஆவணக்காப்பகம். சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் தனது ஏழாவது ஆண்டு நிறைவை இந்த காப்பகம் சிறப்பான முறையில் கொண்டாடியிருக்கிறது. இலங்கை தேசிய சிறுபான்மையினத்தவர்களின் நண்பராகத் திகழும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்ட நிகழ்விற்கு வருகைதந்து இந்த இணைய நூலகத்தின் பணிகளையும் முயற்சிகளையும் மனந்திறந்து பாராட்டியுள்ளார்.
1887 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையில் வெளியான அரிய பல வெளியீடுகள் இந்த இணைய ஆவண காப்பகத்தில் பதிவாகியுள்ளன. உலகில் எந்தப்பகுதியிலும் வாழும் ஒரு தமிழ் வாசகன் தனது கணினிக்கு முன்னமர்ந்து. www.noolaham.org என்ற எழுத்துக்களைத் தட்டினால் சகல விபரங்களும் உயிர்பெற்று வரும். உலகெங்கும் பரந்து வாழும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களின் கூட்டு முயற்சியே இந்த நூலக வலைத்தளம். நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், சிறுபிரசுரங்கள், நினைவுமலர்கள், விழா மலர்கள், ஆய்விதழ்கள், பாடசாலை மலர்கள், கல்வெட்டுக்கள் உள்ளிட்ட சகலவிதமான தமிழ் எழுத்தாவணங்களும் இந்த வலைத்தளத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
இந்த வலைத்தளம் பற்றிய சிறு பிரசுரம் பின்வரும் தகவல்களைத் தரிவிக்கின்றது:-
1. தமிழில் சமகால அறிவு பகிரப்படும் மிக முக்கிய வலைத்தளங்களில் ஒன்று.
2. தமிழின் மிகப் பெரும் இணைய எண்ணிம நூலகம்.
3. எதுவித இலாப நோக்கங்களும் இல்லாத கூட்டு முயற்சி.
4. 2005 தைப்பொங்கலன்று தொடங்கப்பட்டது.
5. நூலக நிறுவனத்தின் (www.noolaham foundation.org) ஒரு செயற்றிட்டம்.
பயன்கள்:
1. எமது வரலாறு, இலக்கியம், மொழி, பண்பாடு, சமயங்கள், கலைகள், நாட்டார் வழக்காறுகள் உள்ளிட்ட அனைத்தும் ஆவணப்படுத்தப்படுகின்றன.
2. அழியும் நிலையிலுள்ள எழுத்தாவணங்கள் அடுத்த தலைமுறைகளுக்கு கிடைக்கும் வண்ணம் பாதுகாக்கப்படுகின்றன.
3. ஆய்வாளர்களும் ஆய்வு மாணவர்களும் வினைத்திறனுடன் ஆய்வு முயற்சிகளை மேற்கொள்ள முடிகிறது.
4. பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள் கல்விசார் வளங்களைப் பெற்றுகொள்ளமுடிகிறது.
5. சமூக முன்னேற்றத்துக்கான செயற்பாட்டாளர்களுக்குத் தேவையான தகவல்களை இலகுவில் திரட்ட முடிகிறது. தேவையான தகவல்களை அடையாளங்காண முடிகிறது.
6. ஈழத்து எழுத்தாளர்களும் அவர் தம் படைப்புக்களும் உலகளாவிய அளவில் அறிமுகம் பெறுகின்றனர்.
7. கிடைத்தற்கரிய ஆவணங்களை உலகின் எந்த இடத்தில் வாழ்வோரும் எந்நேரமும் பெற்றுப் பயன்பெற முடிகிறது.
பங்களிப்பது எப்படி?
1. இது ஒரு தன்னார்வக் கூட்டு முயற்சி. ஆர்வமுள்ள எவரும் பங்குபெறலாம்.
2. எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், இதழாசிரியர்கள் தமது வெளியீடுகளை எண்ணிமமாக்கும் அனுமதியுடன் அனுப்பலாம்,
3. நூலக வலைத்தளத்தில் நேரடியாக எழுத்தாவணங்கள் தொடர்பான தகவல்களைச் சரிபார்த்தும் இணைத்தும் தளத்தின் உள்ளடக்கத்தை விரிவாக்கலாம்.
4. இணையத்தில் கிடைக்கும் மின்னூல்களுக்கான புதிய விபரப்பக்கங்களைத் தொடங்கலாம்.
5. நூலக வலைத்தளத்தை பரவலாக அறிமுகப்படுத்தி அதன் பயன்பாட்டை அனைவருக்கும் கிடைக்கச்செய்யலாம்.
6. நூலகத்தளம் தொடர்பான உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளைத் தெரியப்படுத்தலாம்.
7. நூலக நிறுவனச்செயற்பாடுகளுக்கு நிதியுதவி வழங்கலாம்.
மேலும் சில குறிப்புகள்.
ஒரு சமூகத்தின் முன்னேற்றத்துக்குத் தேவையான அறிவினையும் தகவல்களையும் கிடைக்கச் செய்வதில் நூலகங்களின் பங்கு மிக முக்கியமானது. ஒரு நூலகம் அதன் வாசகர்களுக்குத் தேவையான போதிய தகவல் வளங்களைக்கொண்டிருக்கும் போதே அதிலிருந்து உச்சப்பயனைப் பெறமுடியும். பொருத்தமான விதத்தில் ஆவணப்படுத்தப்படாத பெருமளவு நூல்களும் சிறுவெளியீடுகளும் ஏட்டுச்சுவடிகளும் என்றென்றைக்கும் மீண்டும் பெறமுடியாதவையாக அழிந்து போய்விட்டன. எஞ்சியுள்ள பலவும் பலவும் அழிவாபத்தை எதிர்நோக்குகின்றன. எண்ணிமமாக்கல் நுட்பம் இத்தகைய அழிவுகளிலிருந்து ஆவணங்களைப் பாதுகாப்பதைச் சாத்தியமாக்குகிறது. நீங்கள் ஒவ்வொருவரும் மனம் வைத்தால் நூலக முயற்சி மென்மேலும் பயன்மிக்கதாகும். நீங்கள் வழங்கும் ஒவ்வொரு ஆவணமும் ஆலோசனையும் பங்களிப்பும் அவ்வகையில் மிக மிக முக்கியமானது.
எண்ணிம நூலகங்கள்.
1. ஏதாவது ஓரிடத்தில் நிறுவப்படும் நூலகத்தினை அப்பிரதேசத்திலோ அந்நாட்டிலோ வாழ்பவர்களால் அந்நூலகம் திறந்திருக்கும் நாட்களில் மட்டுமே பயன்படுத்த முடியும் ஆனால், ஓர் இணைய எண்ணிம நூலகத்தை எந்நாட்டிலிருந்தும் எந்நேரமும் பயன்படுத்த முடியும்.
2. ஓர் எண்ணிம நூலகத்தில் தேவையான தகவல்களை இலகுவாகவும் வேகமாகவும் தேடி உடனடியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
3. அழிவாபத்தை எதிர்நோக்கும் அரிய வெளியீடுகளைப் பாதுகாத்து அடுத்த தலை முறைகளுக்கும் கிடைக்கச் செய்யச் சிறந்த வழி அவற்றை மின்னூல்களாக்கிப் பாதுகாப்பதே ஆகும்.
4. ஓரிரு பிரதிகளே எஞ்சியுள்ள ஆவணங்களையும் மிகப்பழைய ஆவணங்களையும் மூலப்பிரதி மேலும் பாதிப்படையாத விதத்தில் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்கான சிறந்த வழி எண்ணிம ஆவணப்படுத்தலாகும்.
நூலக நிறுவனம்.
1. சமூக மட்டத்தில் எண்ணிம ஆவணப்படுத்தல், தகவல் அறிதிறன், எண்ணிம நூலகங்கள் போன்றவை தொடர்பில் விழிப்புணர்வூட்டும் செயற்றிட்டங்களை முன்னெடுக்கிறோம்.
2. எண்ணிமமாக்க முயற்சிகளுக்கும் ஆவணப்படுத்தல் முயற்சிகளுக்கும் நிதியுதவி, ஆலோசனை வழங்குகிறோம்.
3. தமிழில் வெளிவந்த தமிழரால் எழுதப்பட்ட தமிழ் – தமிழர் தொடர்பான வெளியீடுகளில் இணையத்தில் கிடைக்கும் அனைத்தையும் ஓரிடத்தில் தேடியடையக்கூடிய வகையில் பதிவுசெய்கிறோம்.
4. மாணவர், ஆய்வாளர், சமூகச் செயற்பாட்டாளர், எழுத்தாளர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் ஆவணப்படுத்தல் முயற்சிகளில் ஈடுபடுகிறோம்.
நூலகம் 10,000 நிகழ்வு.
இணையத்தில் ஓர் ஈழத்துத்தமிழ் நூலகத்தை உருவாக்கியவர்கள் மேற்கொண்ட அரிய முயற்சிகளை மேலே பதிவுசெய்யப்பட்ட சிறு பிரசுரத்தகவல் தெளிவுபடுத்துகிறது. நூலகம் வலைத்தளம் தொடங்கப்பட்டு ஏழு ஆண்டுகள் நிறைவடைந்து எட்டாவது ஆண்டில் தொடர்ந்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது என் போன்ற படைப்பாளிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் வரப்பிரசாதமாகும்.சுமார் ஏழு ஆண்டு காலத்துள் நூலகம் வலைத்தளத்தில் பத்தாயிரத்துக்கும் அதிகமான ஆவணங்கள் இணைக்கப்பட்டிருப்பதானது மிகப் பெரிய சாதனை தான். இதற்காக கடுமையாக இரவு பகலாக உழைத்தவர்களின் பணி வியந்து போற்றுதலுக்குரியது.வாசிப்பு மனிதர்களை முழுமையாக்கும் இயந்திரகதியில் இயங்கும் எம்மவர்கள் வாசிப்பதற்கு நேரத்தை தேடுவதற்கும் ஒதுக்குவதற்கும் போராடிக் கொண்டிருக்கும் இக்காலப்பகுதியில் நூலகம் வலைத்தளம் அரிய சேவையை மேற்கொண்டு வருகிறது. தமிழர்கள் பூமிப்பந்தெங்கும் சிதறுண்டு வாழும் இக்காலத்தில் அவர்களுக்குத் தேவைப்படும் அரிய சில நூல்களையாவது இலகுவாக பார்வையிடவும் படிக்கவும் நூலகம் வலைத்தளம் சிறப்பாக வழிவகை செய்திருப்பதானது மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகின்றது.ஆய்வாளர்கள், விமர்சகர்கள் தமது படைப்புகளுக்கு தேவைப்படும் உசாத்துணை நூல்களை இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்கு எவரது தயவையும் எதிர்பார்க்காமல் நேரடியாக தொடர்புகொள்ளவும் நூலகம் வலைத்தளம் உதவுகின்றது. நூலகம் கொழும்பு அணியினர் ‘நூலகம் 10,000’ எனும் நிகழ்வினை கொழும்பில் சமீபத்தில் சிறப்பாக நடத்தினார்கள்.தமிழ்கூறும் நல்லுலகம் இந்த தன்னார்வத்தொண்டர்களை கவனத்தில் கொள்வதானது தமிழுக்கு மட்டுமல்ல அறிவுலுகத்திற்கும் கனதியான பெருமதியை வழங்கும்.


