Thinakkural Sunday August 05 2012
ஊடகங்களிலே வலையூடகங்களின் வளர்ச்சியும் பயன்பாடும் இன்று அதிகரித்துச் சென்று கொண்டிருக்கின்றது. இதன் மூலம் எதிர்காலத்தில் எமது வரலாற்றை ஆவணப்படுத்துவதிலும் இந்த வலையூடகங்கள் (இணையத்தளங்கள்) பாரிய பங்களிப்பினை வழங்கி நிற்கின்றன. அந்த வகையில் ஈழத்தமிழர்களின் வரலாற்றையும் அவர்களின் தனித்துவத்தையும் பாதுகாத்து நிற்கும் வலையூடகமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றது நூலகம் (www.noolaham.org) இணையத்தளம்.
நூலகம் வலைத்தளம் ஈழம் தொடர்பான எழுத்தாவணங்கள் துண்டுப்பிரசுரங்கள் முதல் நூல்கள் வரை அச்சில் வரும் அனைத்தையும் மின்வடிவாக்கி பாதுகாத்து அவற்றை எவரும் எப்போதும் இணையத்தளத்தில் இலகுவாகப் பெற்றுப் படிப்பதற்கு ஏற்ற வண்ணம் வெளியிடும் ஓர் இலாப நோக்கற்ற சேவையை வழங்கி வருகிறது. 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ் இணையத்தளம் இன்று 7 ஆண்டுகள் கடந்து பல்பரிமாணங்களுடன் தனித்துவமாக மிளிர்ந்து நிற்கின்றது. அறிவுக் களஞ்சியமாக விளங்கும் இந்நூலகத்தை யாரும், எரித்துவிடவோ அழித்துவிடவோ முடியாது என்பதால் காலா காலத்துக்கும் இது பாதுகாப்போடு இருந்து பயனளித்துக் கொண்டிருக்கும்.
இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான எல்லா வகையான அறிவுத் தொகுதிகளையும் ஆவணப்படுத்தி, பாதுகாத்து, அனைவருக்கும் கிடைக்கச் செய்தல் எனும் பணி இலக்குடன் இயங்கும் நூலக நிறுவனத்தின் ஒரு செயற்றிட்டம் தான் நூலகம் இணையத்தளம். இது ஒரு தன்னார்வ கூட்டு முயற்சி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அரிய முயற்சியில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதோடு எம்மிடம் இருக்கக்கூடிய அரிய ஆவணங்களைக் கொடுத்து அவற்றை நூலகத்தில் சேமிப்பதன் மூலம் அவை காலாதி கால பயன்பாட்டினை எம்சந்ததிக்குப் பெற்றுத் தரும்.
நூலகத்தின் ஆரம்ப கால முன் முயற்சியாளர்களில் ஒருவரான தில்லைநாதன் கோபிநாத் அண்மையில் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்திருந்த போது எமது அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார். அவரை தினக்குரலுக்காக நேர்கண்ட போது நூலகம் பற்றி பல விடயங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டார். அவரின் நேர்காணலை உங்களுக்காக இங்கு தருகின்றோம். இதனைப் படித்த பின் நீங்களும் உங்களிடம் இருக்கும் அரிய நூல்களை கொடுத்து நூலகத்தின் சேவைக்கு வலுவூட்டுவீர்கள் என நம்புகின்றோம்.
கேள்வி :- நூலகம் என்னும் இணையத்தளத்தின் அடிப்படைத் தேவை என்ன?
பதில் :- யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது அனைவருக்கும் தெரிந்தது. பாதுகாக்கப்படாமையால் மட்டுமல்லாமல் கவனிக்கப்படாமையாலும் பல ஆவணங்கள் அழிந்து வருகின்றன. யாழ் நூலகத்தைப் போல் வெவ்வேறு நூலகங்களை அமைத்தாலும் அவை குறிப்பிட்ட பிரதேசங்களுக்குள் மட்டும் தான் பயனடையக் கூடியதாக இருக்கும். மேலும் எல்லா ஆவணங்களும் நீண்ட காலங்களுக்கு அவை பாதுகாப்பாக தேசங்களின்றி இருக்கும் என்பதற்கான உத்தரவாதமும் இல்லை. இடவசதியின்மை போன்ற காரணங்களுக்காகக் கூட ஆவணங்கள் நீக்கப்படுவதுண்டு. ஆரம்பத்தில் மைக்ரோபிலிம் ஆவணப்படுத்தல் முறை பயன்பாட்டில் இருந்தது. 1990 களின் பின்னர் ஏற்பட்ட முக்கியமான மாற்றம் எண்ணிம ஆவணப்படுத்தல் (Digital Archiving) முறை. அதாவது கணினி நுட்பத்தினைப் பயன்படுத்துவது. மேற்கு நாடுகளில் 1994 இலிருந்தே பெருமெடுப்பில் எண்ணிம நூலக முயற்சிகள் நடைபெறத் தொடங்கின. அந்த வகையில் 2005 ஆம் ஆண்டு தைத்திருநாளில் தான் நாம் நூலகம் இணையத்தள முயற்சியை ஆரம்பித்தோம். முதலாம் ஆண்டு 100 நூல்களை இணைத்திருந்தோம். 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 10,000 ஆவணங்களைத் தாண்டியுள்ளோம்.
கேள்வி :- எந்த விதங்களில் இணைய நூலகம் பயணுள்ளதாக இருக்கிறது?
பதில் :- முதலாவது நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போலத் தமிழ்ச் சமூகங்களின் வெளியீடுகள் அழிந்து போகாதவண்ணம் ஆவணப்படுத்திப் பாதுகாத்தல். அழிந்து போவதென்றால் எவராலும் எடுத்துப் பாதுகாக்கப்படாததால் மறைந்து போவது ஒரு வகை. அதிகம் பயன்படுத்தல், போதிய கவனிப்பின்மை, இயற்கை – செயற்கைக் காரணங்களால் அழிவது மறுவகை. எண்ணிம ஆவணப்படுத்தல் மூலம் அவற்றையெல்லாம் அடுத்த தலைமுறைகளுக்குக் கிடைக்கச் செய்ய முடியும். இரண்டாவதாக பார்த்தீர்கள் என்றால் அதிகரித்த பயன்பாட்டு வசதி. பாரம்பரிய நூலகம் குறிப்பிட்ட நேரத்துக்குத் தான் திறந்திருக்கும். அந்த நேரத்தில் போய்த் தான் நீங்கள் உங்களுக்கு தேவையான நூல்களைப் பெற்றுக் கொள்ளமுடியும். அதே நேரம் ஒருவர் பயன்படுத்தும் நூலை மற்றவர் அதே நேரத்தில் பயன்படுத்த முடியாது. ஆனால், இணையத்தள நூலகம் இருபத்துநான்கு மணிநேரமும் திறந்திருக்கும். ஒரே நூலை குறித்த நேரத்தில் பலரும் படிக்க முடியும். உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் இணைய வசதி உள்ளவர்கள் இதனைப் பார்வையிட முடியும். ஆகவே ஒரு நூலை நாம் இணையத்தளத்தில் ஏற்றுவதற்கு அதிக செலவு ஏற்பட்டாலும் அதன் பயன்பாடு அதிகமானதாக உள்ளது. இது முக்கிய நன்மை.மூன்றாவதாக தொழில் நுட்பத்தைச் சொல்லலாம். எந்த ஒரு தகவலையும் மிக இலகுவாகத் தேடல் வசதி (Search) மூலம் வேகமாகக் கண்டுபிடிக்கலாம். எந்த வகையான நூல்களை வாசகர்கள் தேடுகிறார்கள் என அறிந்து அவற்றுக்கு ஏற்றாற்போல் தகவல்களைத் திரட்டி வழங்கவும் முடியும். நான் சொன்னவை சில எடுத்துக்காட்டுக்கள் மட்டும் தான். மொத்தத்தில் நுட்பப் பயன்பாடுகள் என்பது பாரம்பரிய ஊடகங்களைவிட இணைய நூலகத்தில் பெருமளவு சாத்தியங்களை உருவாக்குகிறது. ஒலி, ஒளி ஆவணங்களை இணைத்தல், பயனாளரே நேரடியாகப் பங்கெடுத்தல், இடப்பற்றாக்குறை ஏற்படாமை, தரவுத்தளங்கள் உருவாக்கம், அகரமுதலி உருவாக்கம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
கேள்வி:- கல்வெட்டுகள், விழா மடல்கள் போன்றவற்றையும் இணைத்துக் கொள்வதற்கான காரணம் என்ன?
பதில் :- ஒரு வரலாறு எதிர்காலத்தில் எழுதப்படுகையில் எல்லாவிதமான ஆவணங்களும் பயன்படும். எதிர்காலத்தில் இவற்றின் முக்கியத்துவம் உணரப்படும் என நம்புகின்றோம். எமது சமூக, கல்வி, பொருளாதார, சமய, கலாசார, மொழிக் கூறுகள் தொடர்பான தகவல்கள் எல்லாவகையான ஆவணங்களிலும் பொதிந்துள்ளன. எடுத்துக்காட்டுக்குச் சொன்னால் எம்மவர்கள் உலகெங்கும் சிதறி வாழ்கின்றனர். எதிர்காலத்தில் ஒருவர் தமது குடும்ப வரலாறு தேடுவதென்றால் கல்வெட்டுகள் எனப்படும் நினைவு நூல்கள் மிகவும் பயன்படும். ஆனால் அவற்றை எவரும் பாதுகாத்து வைத்திருப்பதில்லை. பாரம்பரிய நூலகங்களில் இடவசதி இல்லாமையால் எல்லாவற்றையும் ஆவணப்படுத்த முடியாது. எண்ணிம நூலகங்கள் தான் ஆவணப்படுத்த வேண்டும்.
கேள்வி :- நூல்களை பதிவேற்றம் செய்வது வரையிலான வேலைகளில் என்ன மாதிரியான சவால்களை எதிர்கொள்கிறீர்கள்?
பதில் :- ஆவணங்களை எண்ணிம வடிவத்தில் பாதுகாப்பது முதல் கட்டவேலை. இரண்டாவது கட்ட வேலை, ஆவணங்கள் பற்றிய விபரத் தரவுகளை (Meta data) இணையத்தில் இணைப்பது. கடந்த ஆண்டிலிருந்து இதற்கென மிகப் பெருமளவு வளங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம். இது அதிகரித்த செலவுடையதாகவும் நேரமெடுப்பதாகவும் உள்ளது. ஆனால் ஓர் எண்ணிம நூலகத்திலிருந்து வாசகர்கள் உச்சப் பயன்பெறக் கட்டாயம் தேவைப்படுகின்றது. கடைசியாகப் பதிவேற்றம் செய்வது. ஆவணப்படுத்திய அனைத்தையும் உடனடியாகப் பதிவேற்றம் செய்வதில்லை. குறிப்பாக விற்பனையில் உள்ள புதிய நூல்களைப் பதிவேற்றுவதில்லை. ஏனையவற்றைப் பதிவேற்ற எழுத்தாளர்களின் அனுமதி தேவை. ஆனால், உரியவர்களைத் தேடிக் கண்டுபிடித்துத் தொடர்புகொள்வது இலகுவானதில்லை. பலருக்கும் இணைய நூலகம் என்பது இப்பொழுது தான் அறிமுகமாகிறது. இன்னொரு சவால் முழுமையான ஆவணப்படுத்துதல். ஏனென்றால் ஒவ்வொரு துறை சார்ந்தும் வெளியான எல்லா வெளியீடுகளையும் ஆவணப்படுத்தினால் தான் வாசகர்கள் உச்சப் பயன் பெற முடியும்; முழுமையான ஆய்வுகள் செய்ய முடியும். பெண்ணியம், முஸ்லிம்கள், தலித்தியம், மலையகம் சார்ந்த ஆவணப்படுத்தல்களையும் நாம் தனித்தனியாக பிரித்து மேற்கொள்கிறோம். பறவையியல், விலங்கியல், மொழிபெயர்ப்பியல் என்ற தனித்தனி விடயங்களைத் தேடி ஆவணப்படுத்துகின்றோம். நூறு சதவீதம் நாம் ஆவணப்படுத்தலில் முழுமை பெறாவிட்டாலும் முடிந்தவரை செய்கிறோம்.இவையெல்லாம் வாசகர், எழுத்தாளர், ஆய்வாளர்கள் எனப் பலரும் இணைந்து பங்களித்தால் மட்டுமே முழுமை பெற முடியும். மேலும் வாசிகசாலை, இதழகம் எனும் செயற்றிட்டங்கள் ஊடாக சமகாலத்தில் வெளிவரும் பத்திரிகைகள், இதழ்களை ஆவணப்படுத்துகிறோம். பழைய இதழ்களையும் முழுமையாக ஆவணப்படுத்த வேண்டியுள்ளது.
கேள்வி :- நீங்கள் இதழ்களை ஆவணப்படுத்தும் போது அதன் ஆரம்பகால இதழ்கள் தொடர்ச்சியாக கிடைப்பதில் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும் அல்லவா?
பதில் :- நாம் எதிர்கொண்ட பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. நாம் ஆரம்பத்தில் எது கிடைத்ததோ அதை ஆவணப்படுத்தினோம். ஒரு கட்டத்தின் பின் நீங்கள் சொன்னது போல எல்லா இதழ்களையும் ஆவணப்படுத்தத் தேடத் தொடங்கினோம். சரிநிகர் போன்ற அண்மைக்கால வெளியீடுகளின் சில இதழ்கள் கூடக் கிடைக்கவில்லை. அந்த இடத்தில் தெளிவத்தை ஜோசப் முதல் நிறைய எழுத்தாளர்கள் எமக்கு உதவி புரிந்தார்கள். அவர்களிடம் இருந்து பல இதழ்களைப் பெற்றுக் கொண்டோம். இதழாசிரியர்களே தந்துதவியதால் ஞானம் போன்றவற்றை முழுக்க ஆவணப்படுத்த முடிந்தது.
கேள்வி:- அச்சில் வந்த வெளியீடுகளை ஆவணப்படுத்துவது தவிர வேறு எவ்வாறான செயற்பாடுகளை நூலக நிறுவனம் முன்னெடுக்கிறது?
பதில் :- தரவுத்தளங்களையும் உருவாக்கிக் கொண்டு வருகின்றோம். அதாவது, இலங்கையிலிருக்கக்கூடிய தமிழ் சார்ந்த பாடசாலைகள், கோயில்கள், சமூக நிறுவனங்கள், சன சமூக நிலையங்கள் போன்ற தரவுகளுடன் பாடசாலை விழா மலர்கள், பாடசாலை அறிக்கைகள் என்பவற்றையும் சேகரித்து வெளியிட இருக்கின்றோம். எதிர்காலத்தில் ஒவ்வொரு பிரதேசங்கள் பற்றியும் முக்கிய மனிதர்கள் பற்றிய தகவல்களையும் வெளியிட எண்ணியிருக்கின்றோம். தரவுத் தளங்களை இப்பொழுது செயற்படுத்திக் கொண்டிருக்கின்றோம். இதனை விரிவுபடுத்தும் போது மூன்று வகையாக அதாவது நிறுவனங்கள், ஆட்கள், இடங்கள் எனப் பிரித்து செயற்படுத்த எண்ணியுள்ளோம். இவைதவிர நூலக நிறுவனம் இதுவரை ஆவணப்படுத்தாத விடயங்களைத் தேடி அது தொடர்பான தரவுகளை ஆவணப்படுத்துதல், ஆவணப்படுத்திய விடயங்களை மக்களுக்கு பயன்படுத்தக் கொடுத்தல், பயனாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலனுப்பி உதவுதல் போன்றவற்றையும் செய்து வருகின்றது. ஆவணப்படுத்துவதன் பயன் என்ன? ஏன் ஆவணப்படுத்த வேண்டும்? ஏன் இதனை அவசரமாகச் செய்ய வேண்டும்? இதன் முக்கியத்துவம் என்ன? என்பது பற்றிய விடயங்களை மக்களுக்கு கொண்டு சென்று விளங்கப்படுத்தும் முயற்சிகளையும் செய்து வருகின்றோம். முக்கியமாக பாடசாலைகளில் இது தொடர்பான கூட்டங்களை நடத்தி வருகின்றோம். பல்கலைக்கழக மாணவர்கள் பலர் எங்களோடு இணைந்து பணியாற்றுகிறார்கள். அவர்கள் தங்களுடைய செயற்திட்டங்களுடன் இதனை இணைத்து செயற்படுகிறார்கள். சமூக வலைத்தளங்களில் கேளிக்கைகளான பகுதிகளில் மட்டும் மாணவர்கள் தங்கிவிடாமல் இணைய வசதி வாய்ப்பை கல்வி, சமூக அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை சமூகங்களின் மத்தியில் விளங்கப்படுத்த முயற்சித்து வருகின்றோம். ஆவணப்படுத்தலின் முக்கியத்தை அவசியத்தை புரிய வைப்பதற்காக நூலகங்கள் பாடசாலைகள் மட்டத்தில் இவ்வாறான கருத்தரங்குகளை நிகழ்த்துவதோடு இது தொடர்பான நூல்களையும் வெளியிட்டுள்ளோம்.நூலக நிறுவனத்துக்கென தனியான இணையத்தளம் ஒன்றையும் நாம் ஆரம்பித்துள்ளோம். அங்கே எமது செயற்பாடுகள் தொடர்பான விபரங்களைப் பார்வையிட முடியும்.
கேள்வி :- நூலகத்தின் எதிர்காலத்திட்டம்?
பதில் :- எங்கள் பாரம்பரிய கலைகள், பாரம்பரிய மருத்துவ முறைகள், நாட்டார் பாடல்கள், சடங்கு முறைகள், பாரம்பரிய விளையாட்டுகள், பாரம்பரிய கட்டிட முறைகள் என்பன எமக்கு தனித்துவமானவையாக இருக்கின்றன. காலப் போக்கில் இவை காணாமல் போய்விடும் அபாயம் உள்ளது. இவற்றைத் தேடித்தேடி ஆவணப்படுத்த வேண்டிய தேவையுள்ளன. பாட்டிமார் சொல்லும் கதைகள் கூட காலப்போக்கில் மறைந்து வருகிறது எதிர்காலத்தில் கிடுகு பின்னுதல் கூட எப்படி என்பது எமது சந்ததியினருக்குத் தெரியாமல் போகலாம். அந்த விடயங்களைக் கூட ஆவணப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
நூலகத்தின் ஒட்டுமொத்த பத்தாண்டு இருபதாண்டுத் திட்டங்கள் என்று பார்த்தீர்களேயானால் எங்களுடைய தமிழ்ச் சமூகங்கள் சார்ந்து இருக்கக்கூடிய ஓட்டுமொத்த அறிவையும் ஏதோ ஒரு விதத்தில் பதிவு செய்து அதனூடாக குறித்த சமூகங்களின் எதிர்கால கல்வி,சமூக, பொருளாதார அபிவிருத்திக்கு உதவ வேண்டும். அவர்கள் தாங்கள் சார்ந்த விடயங்களை தொடர்ந்து முன்னெடுக்கவும் முடிவுகள் எடுக்கவும் போதுமான தகவல்கள் உடனடியாக, முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்பதுதான் எமது எண்ணமாகும்.
கேள்வி :- நூலகம் எங்கிருந்து இயங்குகின்றது? பயனாளர்கள் நூலக நிறுவனத்தோடு எவ்வாறு தொடர்பு கொள்ள முடியும்?
பதில் :- இலங்கையில் பதிவு செய்யப்பட்டு நூலக நிறுவனம் இயங்குகின்றது. யாழ்ப்பாணம் கொழும்பு ஆகிய இடங்களில் அலுவலகங்கள் உள்ளன. வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை உட்பட ஏனைய பகுதிகளிருந்தும் பங்களிப்புக்கள் கிடைக்கின்றன. கிழக்கு மாகாணத்தில் இருந்தும் நேரடியாகச் செயற்படுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். கனடா, ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, அமெரிக்கா என வெளிநாடுகளிலும் செயற்பாடுகள் நடைபெறுகின்றன. பல இடங்களில் இருந்து கொண்டுவரும் விடயங்களை இணையத்தில் தான் போடுகின்றோம். ஆகையால் பயனாளர்கள் எங்கிருந்தும் நூலகத்தினைப் பயன்படுத்தலாம்.
எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் தமது நூல்களையும் பதிவேற்ற வேண்டும் என்றால் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் எமது அலுவலகம் இயங்குகின்றது அங்கு கொடுக்கலாம். யாழ்ப்பாண பொது நூலகத்திலும் எமது அலுவலகம் இயக்குகிறது. அங்கும் தொடர்பு கொள்ளலாம். +94 112363261 எனும் தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.எமது நூலகம் வலைத்தளத்தைப் பயன்படுத்துபவர்கள் தமக்கு தேவையான நூல்கள் பற்றி அறிந்து கொள்ளவோ குறிப்பிட்ட தகவல்கள் தேவை போன்ற ஏதாவது உதவிகளுக்கு உசாத்துணைப் பகுதி ஒன்று இருக்கிறது. அங்கு போய் குறித்த தேவையை குறிப்பிட்டு மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்தால் அதற்கான பதிலை அவர்கள் அனுப்புவார்கள். நூலகச் செயற்பாடுகளில் இணைந்து கொள்ள விரும்புவோரும் நேரிலோ மின்னஞ்சலூடாகவோ தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம். நூலக நிறுவனமே இவ்வாறு விரும்ப இணையும் தன்னார்வலர்களாலேயே முன்னெடுக்கப்படுகிறது.
கேள்வி :- நீங்கள் முக்கியமாக சொல்ல விரும்புவது?
பதில் :- வரலாறு என்பது பல ஆண்டுகளுக்கு முற்பட்டதல்ல. நேற்று நடந்ததும் இப்ப நடந்து கொண்டிருப்பதும் வரலாறு தான். ஆவணப்படுத்தும் தேவை இன்று மிக முக்கியமானது. நிறைய விடயங்கள் குறுகிய காலத்தில் அழிந்து போகக்கூடியதாக இருப்பதால் ஆவணப்படுத்தலில் அனைவரும் அக்கறை காட்ட வேண்டியவர்களாக இருக்கின்றோம். குடும்பப் புகைப்படங்கள், வீட்டுப் பத்திரங்கள், பழைய திருமண அழைப்பிதழ்கள் கூட எதிர்காலத்தில் ஆவணமாகி விடுகின்றது. கூத்துப் போன்ற கலைகளை நாம் ஆவணப்படுத்துவதை இவற்றைத் தொடர்ந்து செய்வதில் தான் இருக்கிறது வீடியோ எடுத்துவைப்பதால் ஆவணப்படுத்திவிட முடியாது என்று சொல்லித் தவிர்க்க முடியாது. ஏனென்றால் பாதுகாப்பது வேறு ஆவணப்படுத்துவது வேறு. நீங்கள் அன்று ஆடியகூத்தை இன்று ஆட முடியாது. திருமண நாளில் முன்பு வேட்டி கட்டிய மாப்பிள்ளைகள் இப்போது குர்தா போடுகிறார்கள். சமூகம் மாறிக் கொண்டேயிருக்கிறது. நாம் இன்றைக்கு பயனில்லை என்று தூக்கி எறிகின்ற விடயங்கள் நாளைக்குத் தேவையாகப் போகின்றது. சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பட்ட காலத்தில் நிறைய இலக்கியங்கள் தேவையில்லை எனவிட்டுவிட்டு குறிப்பிட்ட சில பாடல்களையே தொகுத்தார்கள். இன்று பார்த்தால் நாம் எவ்வளவற்றை இழந்து நிற்கின்றோம் எனத் தெரியும். ஒவ்வொருவரும் தங்கள் விடயங்கள் தொடர்பாக ஆவணப்படுத்தலின் முக்கியத்துவத்தை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். நாம் தொடர்ந்து எப்படி ஆவணப்படுத்த வேண்டும் என்பதில் கவனம் எடுக்க வேண்டும். நூலகத்தை அணுகினால் முடிந்தவரை ஆவணப்படுத்தலைச் செய்து தர முடியும். உங்களுக்கு இந்தத்துறையில் ஆர்வம் இருந்தால் உங்களுக்கு உதவ முடியும். நூலகத்துடன் இணைந்தும் கூடச் செயற்படலாம். ஆவணப்படுத்தியதும் அவர்களுக்கு பிரதிகளை கொடுப்போம். இதற்காக எழுத்தாளர்கள் எதுவித பணமும் தரத்தேவையில்லை. நண்பர்கள் சிலர் நிதியுதவி தருகிறார்கள். வேறு சிலர் நிதியுதவி தருகிறார்கள். வேறு சிலர் நேரத்தைக் கொடுக்கிறார்கள். எழுத்தாளர்கள் தம் படைப்புகளைக் கொடுக்கிறார்கள். இதனால் எல்லோரும் பயனடைகிறார்கள். உலகமொழிகள் எல்லாம் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில் நாம் பின் தங்கி நிற்கக்கூடாது.