நன்றி: கம்ப்யூட்டர் ருடே ஆடி 2011, இதழ் 10.
இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு, தகவல் வளங்களையும் அறிவுச்சேகரங்களையும் ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்துவரும் இலாப நோக்கமற்ற தன்னார்வ முயற்சியான நூலகத்திட்டம் இவ்வருடத்துடன் தனது 7 ஆவது அகவையை பூர்த்தி செய்வது மட்டுமில்லாமல் இலங்கை தமிழ் பேசும் மக்களின் 10,000 ஆவணங்களையும் ஆவணப்படுத்தியுள்ளது என்பது அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு விடயமாகும்.
இனம் ஒன்று, தனது இருப்பை உறுதிசெய்வதும், அதனது செழிப்பான எதிர்காலத்தை உருவாக்குவதும் முக்கியமாக தனது அறிவைப் பாதுகாத்து ஆவணப்படுத்தி பரவலாக்கம் செய்வதும் அவசியமாகும். இன்றைய காலக்கட்டத்தை பொறுத்தமட்டில் அறிவு பாதுகாப்பு, ஆவணப்படுத்தல், பரவலாக்கம் என்ற விடயங்களில் பெருமளவு கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் துரதிஷ்டவசமாக எமது தமிழ் இனம் இது தொடர்பாக பெரிய அளவில் விழிப்புணர்வு அற்று கவலையீனமாக இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். ஏனைய மேற்குலக சமூகங்கள் தற்போது இவ்விடயம் தொடர்பாக அதிகளவு கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. இதற்கு உதாரணமாக பல விடயங்களை எடுத்து காட்டலாம். முக்கியமாக, அதிதுரித வளர்ச்சிகண்டு வரும் நவீன விஞ்ஞான தொழில் நுட்பங்களை பயன்படுத்தி இச்செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன.
இனம் ஒன்று தனது வரலாற்றை தொலைக்கும் போது – அதாவது பேணி பாதுகாக்க தவறும் போது, தனது இருப்பில் பெரும்பகுதியை இழந்து விட்டதாகவே கருத வேண்டும். இன்று பூமியில் காணாமல் போய்விட்ட இனங்கள் அல்லது சமூகங்கள் தக்க சான்றாகின்றன. இந்த வகையில் இனம் அல்லது சமூகம் ஒன்று தனது இருப்பை உறுதிசெய்வதற்கு தனது அறிவு பாதுகாப்பு, ஆவணப்படுத்தல் மற்றும் பரவலாக்கத்தில் ஈடுபடவேண்டியதன் அத்தியாவசியத்தை உணரக்கூடியதாக இருக்கின்றது. முக்கியமாக இன்றைய நவீன விஞ்ஞான தொழில் நுட்ப அறிவைப் பயன்படுத்தும் போதே அறிவு பாதுகாப்பு, ஆவணப்படுத்தல் பரவலாக்கம் என்பது வினைத்திறனாக சாத்தியமாக்கபடுவதுடன் என்றும் எப்போதும் நின்று நிலைக்ககூடிய தன்மையை பெறுகின்றது.
தனித்துவம் எனும் சொல்லும் இங்கேயே முக்கியத்துவம் பெறுகின்றது. ஏனெனில் ஒரு இனம் தனது அறிவு பாதுகாப்பு, ஆவணப்படுத்தல், பரவலாக்கத்தில் ஈடுபடாவிடின் காலப்போக்கில் தனது தனித்துவகத்தை இழக்க வேண்டி நேரிடுகின்றது. அதாவது கால நீரோட்டத்தில் இழுத்து செல்லப்படும் போது சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு தன்னை ஈடு கொடுப்பதற்கும் தன்னை பாதுகாத்து கொள்வதற்கும் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டி ஏற்படுகின்றது. இதனால் அச்சமூகம் தனது அடையாளங்களை இழக்க வேண்டி அல்லது மறக்கவேண்டிய நிலைக்கு உள்ளாகின்றது.
இவ்வகையில் தனித்துவமான அடையாளங்களை, வரலாற்றைப் பேணிபாதுகாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடும் போது சிறப்பான ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு பொறிமுறையை கையாள்வதன் மூலமே திருவுபடுத்தப்பட்ட கற்பனைகள் உருவாவதை தடுப்பதுடன் உண்மைச்சம்பவங்களை உலகுக்கு எடுத்து காட்டுவதுடன் விடயத்தை சரியான முறையில் எதிர்கால சந்ததியினருக்கு எடுத்து செல்லக் கூடியதாகவும் இருக்கும்.
கணனி உலகத்தில் சுருங்கிவிட்ட எமது உலகம் இணையம் என்கின்ற ஒரு விடயத்தினால் தன்னை படம் பிடித்துக் காட்டி கொண்டிருக்கின்றது. இணையற்ற இந்த உலகம் இன்று இணையம் என்ற ஒன்றினுள் சுருங்கிவிட்டது. உலகத்தின் ஒரு முடிவில் இருந்து மற்ற முடிவில் இருக்கும் ஒருவரை தூரநேர வேறுபாடுகளை மறந்து நினைத்தவுடன் தொடர்புகொண்டு உரையாட முடிகின்றது. எமது வாழ்வின் மூலை முடுக்குகளில் எல்லாம் இன்று கணனியும் இணையமும் ஊடுருவி விட்டது. கணனி என்கின்ற யுகத்தில் காலடி வைத்துவிட்ட நாம் அதனை வினைத்திறனாக கொண்டு செல்வதற்கு இணையத்துடன் இணைந்து வாழ வேண்டியுள்ளது. இந்தவகையில் கணனி, இணையம் என்பன உலகெங்கும் பரந்துவாழும் ஒவ்வொரு தனிநபரையும் ஒன்றிணைக்கும் ஒரு சாதனமாகத் நிகழ்கின்றது.
இலங்கை தமிழ் சமூகம் ஏதாவது ஒருவகையில் முற்று முழுதாக பல்வேறுபட்ட காரணங்களால் சிதைக்கப்பட்டுள்ளது. தமது நிலம் தொடர்பான வரலாறு தொடர்பான ஆதாரங்களில் இருந்து பெயர்க்கப்பட்டுள்ளனர். இலங்கையில் வாழும் இலங்கை தமிழரின் எண்ணிக்கைக்கு சற்றும் குறைவில்லாமல் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து இலங்கை தமிழர்கள் சிதறி வாழ்ந்து வருகின்றனர். யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் புலம்பெயர்தல் என்பது இலங்கை தமிழரை பொறுத்தமட்டில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. இவ்வாறு திக்கு திக்காகப் பரந்து வாழும் எமது சமூகத்துக்கு புவியியல் ரீதியியல் ஒரு பெளதிக ஆவணகாப்பகம் ஒன்றை நிறுவுவதற்கான சாத்தியம் எங்கும் காணப்படவில்லை. அவ்வாறு நிறுவுவோமாயின் அது எந்தளவு தூரம் வினைத்திறனானதாக அமையும் என்றும் முழு இலங்கை தமிழ் சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்பதும் கேள்விக்குறியான ஒரு விடயமாகும்.
இவ்வாறு சிதைந்து போயுள்ள எமது இலங்கை தமிழ் பேசும் இணையம் மூலமாக மாத்திரமே ஏதாவது ஒரு வகையில் ஒருங்கிணைந்து கொள்ள முடியும். இந்தவகையில் நூலக நிறுவனம் எனும் தன்னார்வ நிறுவனம் மேற்கொள்ளும் எண்ணிம நூலக திட்டம் எமது இலங்கை தமிழ் பேசும் சமூகங்களின் அறிவைப் பாதுகாத்து ஆவணப்படுத்தி பரவலாக்கத்தில் ஈடுபடும் ஒரு விலைமதிப்பற்ற பணியை செய்து வருகின்றது. எதிர்காலத்தில் எழுத்தாவணங்களையும் தாண்டி இதர ஆவணங்களையும் உள்ளடக்கி ஒரு வினைத்திறனான ஆவணகாப்பமாக மாற்ற, அதைச் செயற்படுத்துவதற்கான தொழில் நுட்ப சாத்தியங்கள் குறித்தும் ஆய்வு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது மிகவும் மகிழ்ச்சி தருகின்ற ஒரு விடயமாகும். அவ்வகையில் ஒலிகோப்பு (Audio) நிகழ்படம் (Video) இயங்குபடம் (Animation) படங்கள் (Images) தரவுகள் (Data) போன்றவற்றையும் இணைப்பார்களாயின் அது எமது இலங்கை தமிழ் பேசும் சமூகத்திற்கு ஒரு விலை மதிப்பற்ற வரபிரசாதமாகும்.
நூலக திட்டம் மூலம் தற்போது இலங்கையினுள் மட்டுமல்லாது புலம் பெயர்ந்து வாழும் இலங்கை தமிழ்பேசும் சமூகமும், ஏனைய தமிழர்களும் ஏராளமாக பயன்பெற்றுவருகின்றனர். இதற்கு சான்றாக இன்று புலம்பெயர் நாடுகளில் இத்திட்டத்திற்கான ஆதரவு மேலும் மேலும் அதிகரித்து செல்வதைக் குறிப்பிட முடியும். அந்தந்த நாடுகளில் இலங்கையில் நடைபெறுவது போன்று ஆவணப்படுத்தல் – அதாவது எண்ணிமமாக்கும் பணிகளும் பரவலாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றது. இதன் மூலம் எதிர்காலத்தில் இலங்கைஅ தமிழ்பேசும் சமூகத்தில் நடைபெறும் முக்கியத்துவமிக்க அத்தனை சம்பவங்களும் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இயலுமானவரை பூரணமாக பெற்று கொள்ளமுடியும்.
புவியியல் ரீதியில் பேணப்படும் பெளதிக ஆவணகாப்பகத்துக்கும் இணையம் மூலம் பேணப்படும் ஆவண காப்பகத்துக்கும் இடையில் பயன் ரீதியில் பாரிய வேறுபாடுகள் உண்டு. பெளதிக ஆவணகாப்பகத்தில் குறிப்பிட்ட ஒரு ஆவணத்தை பார்வையிடுவதாயின் உலகில் எப்பாகத்தில் இருந்தாலும் அவ்விடத்திற்கு வருகை தந்தே அதனை பார்வையிட வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஆவணம் ஒன்றை வழங்க வேண்டுமாயின் கூட அந்த பொறிமுறையை கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் நூலக திட்டம் போன்ற இணைய ஆவணகாப்பகத்தில் ஒருவர் எந்நேரத்தில் எங்கிருந்தும் தனக்கு தேவையான ஆவணத்தை பார்வையிட முடியும் என்பது மட்டுமல்லாமல் தன்னிடம் உள்ள ஆவணகாப்பகத்துக்கு அளிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் இருபத்து நான்கு மணி நேரத்தில் பயன்படுத்த முடிவதோடு, ஒரே நேரத்தில் பலர் ஒரு ஆவணத்தை பார்வையிட முடியும், எல்லாவற்றுக்கு மேலாக எந்த ஒரு காரணிகளாலும் அழிக்க முடியாது.
உதாரணமாக அண்மையில் பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்று தமிழ் மொழியின் தலைவர் இறைபதம் அடைந்தார். இதனை வாசித்த ஓர் இளம் சமுதாயத்தினருக்கு இவர் பற்றி அறிய ஆவல் தூண்டும். உடனடியாக அவர்கள் தமது கணனியில் www.noolaham.org எனும் இணைய முகவரிக்கு செல்வாராயின் இவர் பற்றியும் இவரது தமிழ் பணிகள் பற்றியும் பல ஆய்வாளர்கள் எழுதிய நூல்கள் காணப்படுகின்றன. ஆய்வு முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு இவ்வாறான ஒரு வசதி இருத்தல் ஒரு பெரும் வரப்பிரசாதமாகும். அதாவது ஒரு தகவலை தேடி செல்லும் போது அது தொடர்பிலான மேலதிக தகவல்கள் அல்லது அது தொடர்பான இணையான தகவல்கள் என்பவற்றை பெறக்கூடியதாக இருக்கும்.
நூலக திட்டம் தனக்கேயென சில சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. அதாவது எந்தவொரு எழுத்தாவணங்களிலும் ஒரு சிறு மாற்றங்கள் கூட ஏற்படாதவாறு பார்த்து கொள்கின்றனர். ஒரு ஆவணத்தை எண்ணிமபடுத்தும் போது அந்த ஆவணத்தின் முழுமையான பகுதியும் – அதாவது அங்கு காணப்படும் வெற்றுத்தாள் முதல் அச்சிடப்பட்ட தாள்கள் வரை முழுவதுமாக ஆவணப்படுத்தப்படுகின்றது. ஆரம்பகாலத்தில் தட்டெழுதப்பட்ட ஆவணங்கள் மட்டுமே இணைக்கப்பட்டிருந்தன. ஆனால் எண்ணிம நூலகம் என்ற கருத்தியலை தாண்டி ஆவணகாப்பமாக அது உருவெடுத்த போது மின்பிரதியாக்கம் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலமே சஞ்சிகைகள், பத்திரிகைகள் போன்றவையும் ஆவணப்படுத்தல் சாத்தியமானது. அதனைவிட தட்டெழுதுவதிலும் பார்க்க மின்பிரதியாக்கம் செய்வதிலும் துல்லியம், வேகமான ஆவணப்படுத்தல், எழுத்துப் பிழைகளற்ற மாற்றமின்றிய ஆவணம் போன்ற அனுகூலங்களை பெற முடிகின்றது.
தரமான அல்லது தரமற்றது, பயனுள்ளது அல்லது பயனற்றது போன்ற தணிக்கைகள் நூலக திட்டத்தில் மேற்கொள்ளப்படுவதில்லை. விமர்சகர்களால் அல்லது பயனர்களால் அவை தீர்மானிக்கப்படுகின்றன. இலங்கை போன்ற தமிழ் பேசும் சமூகம் சார்ந்த அச்சில் வெளிவந்த எந்த ஓர் ஆவணமாக இருந்தாலும் எம்மால் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றது. எதிர்கால சந்ததியினருக்கு இன்றைய காலப் பகுதியிலும் கடந்தகாலப் பகுதியிலும் அச்சில் வெளிவந்த ஆவணங்களை அழியாது விட்டு செல்வதே நூலக திட்டத்தின் மிகமுக்கிய நோக்கமாக இருக்கின்றது.
நூலக திட்டம் தற்போது மிகவும் மெதுவாகவே பயணித்து கொண்டிருக்கின்றது. இதற்கு தேவையான மூலங்கள் அதாவது ஆவணங்களில் பெரும் பாலனவை நீண்டகாலமாக கொழும்பு தமிழ்ச்சங்க நூலகத்தில் இருந்தே பெறப்பட்டு வந்தன. தற்போது யாழ்ப்பாண பொது நூலகத்தில் இருந்தும் ஆவணங்கள் பெறப்படுகின்றன. ஆனால் இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில் கிடைத்தற்கரிய பல முக்கியமான ஆவணங்களை, மேற்கூறிய இரண்டு இடங்களில் இருந்தும் பெறக் கூடியதாக இருந்தாலும் இன்னும் ஏராளமான ஆவணங்கள் பல்வேறுபட்ட இடங்களில் சிதறி காணப்படுகின்றன. இவற்றை தேடி அடைய வேண்டிய கட்டாயத்தில் நூலக திட்டம் உள்ளது. எனினும் சில பத்திரிகைகள் மற்றும் சில சஞ்சிகைகள் தாமாக முன்வந்து நூலக திட்டத்துக்கு பழைய புதிய ஆவணங்களை வழங்கி ஆவணப்படுத்திப் பொறுப்புணர்வுடன் செய்றபடுகின்றனர். இதேபோல் அனைவரும் முன்வந்தால் இத்திட்டம் வெகு விரைவாக வினைத்திறனுடன் முன்னேற்றம் கண்டுவிடும். தனிநபர்கள் சிலர் ஆரம்பகாலங்களில் வெளிவந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல்கள் என்பவற்றை சேகரித்து வைத்துள்ளனர். இதற்கு உதாரணமாக கண்டியை சேர்ந்த இரா.கனகரத்தினம் அவர்களை குறிப்பிடலாம். இப்படியானவர்களையும் நூலக திட்டம் மிகவிரைவாக அணுகவேண்டியுள்ளது. ஏனெனில் தனிப்பட்ட நபர்கள் சார்ந்த சேகரிப்புகள் அவர்களுடைய ஆயுட்காலத்துடன் தொடர்புடையவை. அதாவது அழியும் ஆபத்து கூடியவை.
நிதி என்பது இவ்வாறான செயற்பாடுகளுக்கு எப்போதும் மிகவும் சவாலான ஒரு விடயம் என்பது யாவரும் அறிந்த உண்மை. இத்திட்டம் பெருமளவான தன்னார்வலர்களின் பணியினால் வளர்க்கப்பட்டு வருவதால் உண்மையில் இதன் நிதி தேவை பெருமளவு குறைக்கப்படுகின்றது. இத்திட்டம் இன்று பெறுமதி சம்பந்தமாக கணிப்பீடு செய்த போது உண்மையில் இதுவரை இதற்கு செலவான தொகையின் 10மடங்கு தொகைக்கு மதிப்பீடு செய்யப்பட்டது. எனவே அந்த ஒன்பது பங்குகளும் தன்னார்வலர்களது உழைப்பால் மீதமாக்கப்பட்டது. எனினும் இதற்கான செலவுகளை செய்வதில் பெரும்பாலான ஏறத்தாழ 99 சதவீத அனுசரணை நூலக நிறுவனத்தாலேயே மேற்கொள்ளப்படுகின்றது. அதாவது மாதாந்த செலவுகளை ஈடுசெய்வதற்கு நூலக நிறுவனம் பங்களிபாளர்களை கண்டடைந்து அவர்களிடமிருந்து நிதியை பெற்று வழங்கிவருகின்றது. இந்த விடயத்தில் மிகவும் சிறப்பானதொரு அணுகுமுறையை கடைப்பிடிக்கப்படுகின்றது, யாதெனில் தனிநபர்கள் மூலமான மிகச்சிறிய பங்களிப்பாயினும் அதனை நிறுவனங்கள் மூலம் பெறப்படும் பெரியளவான பணங்களிலும் மேலானதாக கருதப்படுகின்றது. ஏனெனில் ஒவ்வொரு சின்னஞ்சிறிய அன்பளிப்புத் தொகை மூலம் திட்டம் மீது அக்கறையுள்ள பல பங்காளர்களை சம்பாதிக்க முடியும் என்பதாலேயே. இதனைவிட இதற்கான வரவு செலவுகளை இயலுமானவரை விரைவாக வலைத்தளத்தில் வெளிப்படையாக வெளியிட்டு வருவதும் பல பங்களிப்பாளர்கள் தாமாக முன்வந்து நிதி பங்களிப்பு செய்வதற்கு முக்கியமான காரணமாகும்.
நூல நிறுவனம் 2010ம் ஆண்டு மே மாதம் இலங்கை சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு சட்ட ரீதியான நிறுவனமாக இயங்கிவருகின்றது. இது 2008ம் ஆண்டிலிருந்து நூலக திட்டத்துக்கு பங்களிப்பு செய்த முக்கிய பங்களிப்பாளர்களை இணைத்து கொண்டு செயற்படுகின்றது. அவ்வகையில் நூலக வலைத்தளத்தை வினைத்திறனான ஒன்றாக வளர்த்தெடுக்க அரும்பாடுபட்டு வருகின்றது. நிறுவணத்தில் நான்கு இயக்குனர்களை கொண்ட அறங்காவலர் சபை மிகவும் பொறுப்புவாய்ந்த ஒரு சபையாகவும் மேலும் நிறுவன பொறுப்புகள் சார்ந்து அதாவது நூலகவியல், சட்டம், நிதி, தொழில்நுட்பம், விரிவாக்கம் போன்றவற்கு பொறுப்பாக சிலரை நியமித்து துணை ஆளணியாக பிரதேசம் சார்ந்து ஒருங்கிணைப்பாளர்கள், குழுக்கள் அமைத்து தன்னார்வ வெளியை இயலுமான வரை குறுக்காதவகையில் விரிவாகவே வைத்துள்ளது. நிறுவனமாக செயற்படுவதன் மூலம் நூலகத்திட்டம் சார்ந்து மட்டுமல்லாமல் இது சார்ந்த பல் தளங்களிலும் செயற்பட முனைந்து வருகின்றது.
எமது சமூகத்தின் அறிவு பாதுகாப்பு, ஆவணப்படுத்தல், பரவலாக்கம் சார்ந்து நேரடியான அளவீடுகளுக்கு சாத்தியமில்லை. எனினும் பலவகைப் பதிவுக்கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள், தமிழ் விக்கி பீடியாக் கட்டுரைகள் போன்றவற்றிலும் நூலக திட்டம் பெருமளவு உசாத்துணையாக பயன்படுகின்றது. இலங்கை, இந்தியா மட்டுமன்றி தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து நாடுகளிலும் இதன் பயன்பாடு காணப்படுவது மட்டுமன்றி அதிகரித்தும் செல்வது வரவேற்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். அதுமட்டுமன்றி எண்ணிம ஆவணப்படுத்தல் தொடர்பில் தமிழ்ச்சூழலில் முன்மாதிரிச் செயற்திட்டமாக காணப்படுகின்றது. இதற்கு உதாரணமாக பொள்ளாச்சி நசனின் ஒரு நாள் ஒரு நூல் திட்டம். தமிழரங்கத்தினர்கள் ஆகியோரால் மேற்கொள்ளப்படும் எண்ணிம ஆவணப்படுத்தல் செயற்திட்டங்களுக்கு நூலக திட்டம் முன்மாதிரியாக இருத்தல் மகிழ்ச்சி தருகின்ற ஒரு விடயமாகும்.
நூலக நிறுவனம் நிறுவனமாக இன்னும் சாதிக்க நிறைய இருக்கின்றது என்றே கருத வேண்டியுள்ளது. வெறும் ஆவணப்படுத்தல் என்ற புள்ளியுடன் தன்னை மட்டுப்படுத்தி கொள்ளாமல் அதையும் தாண்டி இன்னும் பல செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாடு நூலக நிறுவனத்தின் முன் இன்றுள்ளது. அறிவு பாதுகாப்பு, தகவல் அறிதிறன், அறிவுபரம்பல், கல்வி மேம்பாடு என பல தளங்கள் கண்முன்னே இன்று காணப்படுகின்றன. இப்புள்ளிகளில் பரந்து பட்டு செயற்படுவதன் மூலம் இன்னும் பல தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து சமுதாய பேரியக்கமாக செயற்படுவதன் மூலம் மேற்கூரிய இலக்குகளை வெற்றி கொள்ள முடியும் என்பதில் ஐயமில்லை