நூலக நிறுவனம் கடந்த பதினொரு ஆண்டுகளாக இலங்கையின் பல்வேறு எழுத்தாளர்களினதும், நிறுவனங்களினதும் 15,000 க்கும் அதிகமான வெளியீடுகளை ஆவணப்படுத்தியுள்ளது. இச்செயற்பாடுகளின் மேலுமொரு மைல்கல்லாக 2014 ஆம் ஆண்டு “யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறையின் நூறுக்கும் மேற்பட்ட வெளியீடுகளினை மின்வருடி ஆவணப்படுத்தும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டு இவ்வாண்டின் ஆரம்பத்தில் முடிவுக்கு வந்திருந்தது. அவ்வெளியீடுகளை நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலக வலைத்தளத்தில் திறந்த வாசிப்பிற்கு அனுமதிப்பதற்கான உத்தியோக பூர்வ அனுமதியினை 21/06/2015 ஞாயிற்றுக்கிழமை அன்று நூலக நிறுவன யாழ்ப்பாணக் கிளை அலுவலகத்தில் வைத்து துறைத்தலைவர் வைத்திய கலாநிதி. R. சுரேந்திரகுமாரன் வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வில் நூலக நிறுவன இயக்குனர் சிவானந்தமூர்த்தி சேரன், தொழில் நுட்பக்கல்லூரியின் விரிவுரையாளரரும், நூலக நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிகழ்ச்சித்திட்ட அலுவலரும், தன்னார்வலர்களில் ஒருவருமான சி. இலம்போதரன் மற்றும் நூலக நிறுவனத்தின் ஏனைய சில செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த துறைத்தலைவர் சுரேந்திரகுமாரன் மருத்துவத்துறை சார்ந்தவர்கள் பலரும் சமூகம் சார்ந்த செயற்பாடுகள் பலதிலும் ஈடுபட முன்வரவேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை செய்த சேவைகள், சாதனைகள் தொடர்பாக அத்துறையின் இன்று வரையான வெளியீடுகளை ஆய்வு செய்து சமூகத்துக்கு அளிக்கை செய்யும் ஒரு செயற்பாட்டினை நூலக நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுப்பதற்கான உறுதிப்பாட்டினையும் துறைத்தலைவர் வழங்கியிருந்தார். சி. இலம்போதரன் நூலக நிறுவனத்தின் ஆவணமாநாட்டு மலர் ஒன்றினையும் துறைத்தலைவர் சுரேந்திரகுமாரனுக்கு வழங்கி கெளரவித்தார்.
1978ல் ஆரம்பிக்கப்பட்ட சமுதாய மருத்துவத்துறை இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட வெளியீடுகளை சுகாதாரம், போசாக்கு, பாலியல் மற்றும் இதர நோய்கள், முதலுதவி, உளவியல் போன்ற பல அம்சங்கள் சார்ந்து வெளியிட்டு சமூகத்துக்கு அவசியமான முக்கிய பணியினை ஆற்றிவந்துள்ளது. இன்றைய தமிழ் உலகில் கணினி, இணையப் பாவனை மிகக் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்த நிலையில் அந்த நுட்ப வளர்ச்சியிலிருந்து சமூகம் முழுமையான பயன்பெறத் தரமான வெளியீடுகளும் உள்ளடக்கமும் இணையத்தில் கிடைக்க வேண்டியது அவசியமாகும். அந்தவகையில் தமது வெளியீடுகளை இணையத்தினூடாக அனைவருக்கும் கிடைக்கச் செய்யச் சமுதாய-குடும்ப மருத்துவத் துறையினர் முன்வந்தமை பாராட்டப்பட வேண்டியதாகும். இதனூடாக புதியதோர் பரிமாணத்தில் அவ் வெளியீடுகள் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் வாசகர்களை இணையத்தினூடாக சென்றடைவது சாத்தியமாகியுள்ளது. எதிர்காலத்திலும் இத்தகைய இணைச் செயற்பாடுகளூடாக புதிய உள்ளடக்கங்கள் தமிழ் பேசும் சமூகங்களுக்குக் கிடைப்பது அச்சமூகங்களின் வளர்ச்சிக்கான பாரிய பங்களிப்பாக அமையும்.