2017 வழிகாட்டுநர் சபை பங்கேற்பு அழைப்பு

Published on Author Noolaham Foundation

ad_boad_2017நூலக நிறுவனத்தின் முதன்மை முடிவெடுக்கும் சபை வழிகாட்டுநர் சபை (Regulatory Board) ஆகும். இந்தச் சபை

  • ஆண்டுத் திட்டமிடல் மற்றும் வரவுசெலவு (Annual Plan and Budget)
  • நிறுவனச் செயற்பாடுகள் தொடர்பான முடிவெடுத்தல் (Decision Making)
  • வளந் திரட்டுதல் (Resource Mobilization)
  • வியூகத் திட்டமிடல் (Strategic Planning)
  • செயற்திட்டங்கள்/செயலாக்கங்கள் மேற்பார்வை (Process Oversight)

உட்பட்ட பணிகளுக்குப் பொறுப்பானது. இந்தச் சபை சுமார் மாதம் இருமுறை அல்லது ஆண்டுக்கு 20-25 வரையான சந்திப்புக்களை மேற்கொள்ளும். இந்தச் சந்திப்புக்கள் நடைபெறும் நாள், நேரம் என்பன முன் அறிவிக்கப்பட்ட ஒரு கால அட்டவணைப் படி நடைபெறும். இந்தச் சந்திப்புக்களின் கூட்டுநர் (Convener) பொறுப்பு சுழற்சி முறையில் வழங்கப்படும். நூலகத்தின் தலைமை அலுவலர்களில் ஒருவர் செயலாராக, குறிப்பு எடுப்பவராகச் செயற்படுவார்கள். இந்தச் சபை தொடர்பான மேலதிக விபரங்களை இங்கே பார்க்கலாம்:http://noolahamfoundation.org/documents/RBTOR.pdf

இந்தச் சபையில் பங்கேற்க ஆவணப்படுத்தலில் ஆர்வம் உள்ளவர்கள், நூலக நிறுவனத்தின் தொலைநோக்கு, நோக்கங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் அனைவரும் அழைக்கப்படுகிறார்கள். தயந்துசெய்து சந்திப்புக்களில் கலந்து கொள்ள, மேற்குறிப்பிட்ட பணிகளில் ஈடுபட நேர ஒதுக்கீடு செய்யமுடியும் என்பதை உறுதிசெய்து கொள்ளவும். உங்களுக்கு இவ்வாறு பங்களிப்புச் செய்ய ஆர்வம் இருப்பின் தயந்து எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரிந்த ஒருவர் இவ்வாறு பங்களிப்புச் செய்ய சிறந்தவர் என்று நீங்கள் கருதினால், அவரது அனுமதி பெற்று அவரது விபரங்களை எமக்கு அனுப்பி வையுங்கள். அவர் எம்மைத் தொடர்பு கொள்ளலாம், அல்லது அவரை நாம் தொடர்பு கொள்வோம்.

2017 வழிகாட்டுநர் சபைக்கான முன்மொழிவுகள் டிசம்பர் 18, 2016 அளவு இறுதிசெய்யப்படும். 2017 வழிகாட்டுநர் சபை உறுப்பினர்கள் 2016 வழிகாட்டுநர் சபை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார்கள். சனவரி 2017 இல் தெரிவுகள் அறிவிக்கப்படும்.

வழிகாட்டுநர் சபையில் ஓர் அவதானியாக (Observer) யாரும் இணைந்து கொள்ளலாம். அதற்கு நீங்கள் வழிகாட்டுநர் சபை உறுப்பினராக இணைய வேண்டியதில்லை. இது நூலகத்தில் பங்களிக்க ஒரு வழி மட்டுமே. வேறு பல வழிகளில் பங்களிக்க முடியும் என்பதை இங்கு சிறப்பாகச் சுட்டிக் காட்ட வேண்டும். எ.கா எமது பல பணிக் குழுக்களில் இணைந்து செயற்படலாம். உள்ளடக்கப் பங்களிப்பு, துறைசார் பங்களிப்புக்களை, உள்ளீடுகளை வழங்கலாம். நிதி, கருவி, வளப் பங்களிப்புக்களை வழங்கலாம்.

நூலக நிறுவனம் ஒரு சம வாய்ப்பு (equal opportunity) நிறுவனம் ஆகும். பால் (gender), பாலியல் அடையாளம் (gender identity), பாலியல் ஈடுபாடு (sexual orientation), இனம் (race), சமயம் (religion), பிரதேசம் (region), வயது (age), மொழி (language), சமூக-பொருளாதாரப் பின்புலம் (socio-economic background) உட்பட்ட எந்த வகைகளிலும் நாம் பாகுபாடுகள் பார்க்காமல் அனைவருக்கும் சம வாய்ப்பை வழங்க உறுதி பூண்டுள்ளோம். அனைவரையும் வரவேற்கிறோம்.

தொடர்புகள்:
noolahamfoundation@gmail.com