இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட பல்லூடக ஆவணகம் பல பரிணாமங்களில் வளர்ச்சி பெற்று வருகின்றது.
ஜெயரூபி சிவபாலன், குலசிங்கம் வசீகரன், இ. மயூரநாதன், ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம், பிரபாகர் நடராசா, தமிழினி, ச. சாந்தன் உட்பட்ட பல பங்களிப்பாளர்களின் தன்னார்வப் பங்களிப்பால் நூலக ஒளிப்படச் சேகரம் 1,100 படங்களை தாண்டியுள்ளது. இந்தப் படங்கள் சமூக வரலாற்று கல்வி முக்கியத்துவம் வாந்த படங்கள். பெரும்பாலானவை ஆவணக தரத்தில் (archival quality) அமைந்தவை. இவர்களுக்கு எமது நன்றிகளும் வாழ்த்துகளும்.
இலங்கைத் தமிழ் நூல்களின் முழுமையான நூற்பட்டியல் (bibliography/catalog) எண்ணிமப்படுத்தப்பட்டு இணையம் ஊடாக அணுக்கப்படுத்துவது ஒரு முக்கிய தேவையாக உள்ளது. நூலகத்தின் நூல் விபரப் பட்டியல் செயற்திட்டத்தின் ஊடாக, இலங்கை நூலக முன்னோடி என். செல்வராஜா அவர்களின் உதவியுடனும் அனுமதியுடனும் 10,000 மேற்பட்ட நூல் விபரங்கள் இதுவரை உள்ளிடப்பட்டுள்ளன. தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான அனைத்து நூற்களைப் பற்றிய விபரங்களையும் சேர்ப்பது இந்தச் செயற்திட்டத்தின் தொலைநோக்காகும்.
ஆய்வுப் பொருட் சேகரங்கள் (Thematic Research Collections), தனிநபர் சேகரங்கள் (Personal Collections) உட்பட்டவையும் பல வழிகளில் விரிவடைந்துள்ளன.
ஆவணகத்துக்குத் தேவையான சேமிப்பை (storage) நாம் ஆகஸ்ட் மாதம் விரிவாக்கி உள்ளோம். இந்த விரிவாக்கத்தின் பின்பு பல பங்களிப்பாளர்களை நாம் சேர்த்துக் கொள்ளக் கூடியதாக உள்ளது.
ஆவணகத்தில் சேர்ப்பதற்காக பலர் எம்மிடம் ஆவணங்களைப் பகிர்ந்துள்ளார்கள். நன்றிகள். இவற்றை நாம் ஆவணகத்தில் சேர்ப்பதற்குத் தேவையான பணியோட்ட (workflow) ஒழுங்குபடுத்தல்களைச் செய்து வருகிறோம்.
இந்தச் செயற்திட்டத்துக்கு நீங்கள் பின்வரும் வழிகளில் பங்களிக்க முடியும்:
- பல்லூடகங்களை வழங்கல். – உங்களிடம் அழைப்பிதழ்கள், ஒளிப்படங்கள், காணொளிகள் என்று பல பல்லூடக ஆவணங்கள் ஏற்கனவே இருக்கக் கூடும். அவற்றை noolahamfoundation@gmail.com என்ற முகவரிக்கு அனுமதியுடன் அனுப்பி வையுங்கள்.
- பல்லூடகங்களை பதிவேற்றல் – எம்மிடம் கணிசமான ஆவணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றை தேவையான மீதரவுகளுடன் பதிவேற்ற வேண்டும். அதற்கான பயிற்சிகளை நாங்கள் வழங்க முடியும்.
- பல்லூடகஙக்ளை உருவாக்கல் – வாய்மொழி வரலாறுகள், ஒளிப்படங்கள், வரைகலை என்று ஆக்கங்களை உருவாக்க நீங்கள் உதவ முடியும். அதற்கான பயிற்சிகளை நாங்கள் வழங்க முடியும்.
- பல்லூடக ஆவணகப் பரவலாக்கம் – பல்லூடகச் செயற்திட்டத்தைப் பற்றி உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு அவர்களையும் பயன்படுத்த, பங்களிக்க உந்துங்கள்.
இந்தச் செயற்திட்டத்தை மேலும் வளர்த்துச் செல்வதற்கு உங்கள் பங்களிப்புக்கள் வலுச் சேர்க்கும்.