தொடர்பாடல், தகவல் நுட்ப வளர்ச்சியானது இலங்கை போன்ற நாடுகளிலும் அறிவுசார் அபிவிருத்திக்குச் சாதகமான நிலையைத் தோற்றுவித்துள்ளது. கணினி, இணையம் ஆகியவற்றின் பயன்பாட்டைப் பரவலாக்குவது அனைவருக்கும் சந்தர்ப்பமளிக்கும் சூழலை ஏற்படுத்துகிறது.
ஆயினும் தகவல் நுட்பத்தின் வளர்ச்சியின் பயன்கள் அனைவருக்கும் ஒரேயளவில் கிடைப்பதில்லை. எண்ணிம, தகவல் தொழில்நுட்ப வளங்கள் கிடைப்பதிலுள்ள இந்த ஏற்றத்தாழ்வு எண்ணிம இடைவெளி (Digital divide) எனப்படுகிறது.
காரணங்கள்
சமூகப் பின்னணி, பொருளாதார நிலை, பால், இனம், மொழி, வாழும் பிரதேசம் போன்ற பல்வேறு காரணங்களால் எண்ணிம இடைவெளி அதிகரிக்கின்றது.
கல்வியறிவு, கணினியறிவு, தகவல் அறிதிறன் (Information Literacy) போன்றவையும் கணினி உபகரணங்கள், இணைய இணைப்புப் போன்றவையும் கிடைக்காத பொருளாதாரப் பின்னணி எண்ணிம இடைவெளியில் முக்கிய செல்வாக்குச் செலுத்துகிறது.
பொருளாதார நிலை ஓரளவு முன்னேறிய பின்னணியில் கூட தகவல் நுட்பத்தின் தேவை, கணினியறிவின் முக்கியத்துவம், இணைய இணைப்பின் அவசியம் போன்றவற்றை உணராத சமூக நிலையும் எண்ணிம உலகின் சாத்தியங்களை முழுமையாகப் பயன்படுத்தத் தடையாக உள்ளது.
கணினியும் இணைய இணைப்பும் கிடைத்தாலும் கூட பயனுள்ள எண்ணிம உள்ளடக்கம் அவரவர் மொழிகளில் கிடைக்காமையும், பிற மொழிகளில் கிடைக்கும் உள்ளடக்கம் குறித்த சூழலில் பயனற்றதாக இருக்கின்றமையும் கூட எண்ணிம இடைவெளியினை மேலும் அதிகரிக்கின்றன.
தீர்வுகள்
அனைத்துக் குழந்தைகளும் கல்வி பெறுவதை உறுதிப்படுத்துவது போன்ற மிக அடிப்படையான செயற்பாடுகளுக்கு அப்பால் பொது நூலகங்கள், சனசமூக நிலையங்கள், பாடசாலைகள், ஏனைய சமூக நிறுவனங்கள் ஊடாக அனைவருக்கும் கணினிப் பயன்பாடும் இணைய இணைப்பும் கிடைக்கச் செய்யும் முயற்சிகள் இன்றியமையாதன.
கணினியும் இணையமும் ஆடம்பரப் பொருட்களல்ல தனிப்பட்ட, சமூக, தொழில்ரீதியான, கல்விசார்ந்த இலக்குகளை அடைவதற்கு அவை அத்தியாவசியம் என்ற விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
அத்துடன் போதுமான எண்ணிம உள்ளடக்கத்தை இணையமேற்றுவதில் கல்வியியலாளர்களும், சமூக நிறுவனங்களும் அக்கறை செலுத்த வேண்டும்.
குடியேற்ற நாடுகளின் வளங்களைப் பெற்றுக் கொள்வதற்காக பெருந்தெருக்களையும் புகைவண்டிப் பாதைகளையும் உருவாக்கியது போல இணையமூடான இலாபமீட்டலுக்காக இணையத்தையும் கணினியையும் அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் தேவை வளர்ந்த நாடுகளுக்கும் பெருநிறுவனங்களுக்கும் உள்ளது.
ஆனால் தகவல், தொடர்பாடல் நுட்பங்களின் வளர்ச்சியின் முழுப் பயனைப் பெறுவதற்குப் போதிய எண்ணிம வளங்கள் என்பது முக்கிய முன்நிபந்தனை ஆகும்.
நூலக நிறுவனத்தின் பணிகள்
நூலக நிறுவனமானதுஉலக அறிவுச் சமுதாயத்தின் முழுப்பயனை தமிழ்பேசும் இலங்கையர் அனைவரும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளுடன் இயங்குகிறது.
அவ்வகையில் எண்ணிம உள்ளடக்க வளங்களை அதிகரிப்பதில் மிக அதிக கவனத்தையும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் குறிப்பிடத்தக்க கவனத்தையும் செலுத்துகின்றது.