ஈழத்தமிழர்களின் நூலகம் வலைத்தளம் பற்றிய சிறு அறிமுகம்
– தனபால் சே
அச்சு ஊடக வருகை என்பது வரலாற்றில் இணையற்ற மாபெரும் நிகழ்வாகக் கொண்டாடப்படுகின்றது. ஏனென்றால் அச்சு ஊடகம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுடன் ஐரோப்பியர்களுக்கு வந்துசேர்ந்தது. ஆனால் மற்றவர்களுக்கு (ஏதோ வகையில் இன்றுவரையிலும் தொடரும்) கொடிய காலனிய அடிமைத்தனத்துடன் தான் வந்து சேர்ந்தது. சகிக்கவொண்ணா அடிமைத்தனத்தை எதிர்த்து அளப்பரிய தியாகத்துடன் விடுதலைக்குப் போராடிவரும் மக்களுக்கு வலையூடகம் புதிய வாய்ப்புகளைத் திறந்து விட்டுள்ளது. தெற்காசியாவில் தேசிய விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தில் அளப்பரிய தியாகங்கள் செய்த ஈழத்தமிழர்களின் “நூலகம்” வலைத்தள முயற்சியை அவர்களின் தேசவிடுதலைக்கான போராட்ட முயற்சிகளில் ஒன்றாகவே காணவேண்டும்.
“நூலகம்” வலைத்தளம் ‘ஈழம் தொடர்பான எழுத்தாவணங்களை மின்வடிவாக்கிப் பாதுகாத்து அவற்றை எவரும், எப்போதும் இணையத்தில் இலகுவாகப் பெற்றுப் படிப்பதற்கு ஏற்றவண்ணம் வெளியிடும் ஓர் இலாப நோக்கற்ற நன்னார்வக்கூட்டுமுயற்சி’ ஆகும். இவ்வலைத்தளம் 2005 ஜனவரியில் தொடங்கப்பட்டது. நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் 5000 எழுத்தாவணக்கோப்புகளைக் கொண்டுள்ளது. சுமார் 400 இதழ்த்தொகுப்புகள் உள்ளிட்டு 4000 க்கும் மேலான நூல்கள் உள்ளன். இக்கோப்புகளைப் பார்வையிடுவதற்கும், பதிவிறக்கம் செய்வதற்கும் எவ்விதக் கட்டணமுமில்லை. முதன்முறை பார்வையிடும் ஒருவர் வியப்பில் முழ்கிப் போவார். எண்ணற்ற அரிய நூல்களை இதழ்களைப் பயன்படுத்த வாய்ப்புக் கிட்டியதற்காக மகிழ்ச்சியில் திளைப்பார்.
ஈழம் தொடர்பான சுவரொட்டிகள் உள்ளிட்டு எல்லாவகை எழுத்தாவணங்களையும் மட்டுமல்ல எல்லா மொழி ஆவணங்களையும் (ஏற்கனவே எண்ணற்ற அரிய ஆங்கில நூல் கோப்புகள் உள்ளன) மின்வடிவாக்க உள்ளனர். இவை அவர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் வரலாற்றுத் தொடர்பான விவாதத்திற்கான அடிப்படைகளை நிறுவும் உணர்வினைத் தெளிவாகக் காட்டும்.
இந்நூலகத் திட்டம் தன்னார்வக் கூட்டுமுயற்சி என்பதுதான் இங்கே கவனத்திற்குரியது. இ. பத்மநாபஐயர், மு. மயூரன், திரு. கோபிநாத், பிரதீபா தில்லைநாதன், பு. ஈழநாதன் ஆகிய ஆரம்பக்கால முன்முயற்சியாளர்கள் உள்ளிட்டு எழுபதிற்கும் வரையிலான தன்னார்வலர்கள் இதில் பங்களித்துள்ளனர்.
ஈழம் தொடர்பான கருத்து விவாதங்களுக்குப் பெரும் அறிவுக்களஞ்சியமாக இந்நூலகம் பயன்படும் என்பதோடு, தமிழ்மொழி, இலக்கியம், வரலாறு, சமூக ஆய்வுகளுக்கும் அரியதோர் அறிவுக்களஞ்சியமாகவும் விளங்கும். ஈழத்தமிழர்கள் ஒரு யாழ்ப்பாண நூலகத்தைத்தான் சிங்கள இனவெறிக்குப் பலியாகப் பறிகொடுத்துவிட்டனர். ஆனால் ‘நூலகம்’ போன்ற இணைய நூலகத்தின் வழியாக யாழ் நூலகத்தின் பயனளிப்பைப் போன்று பன்மடங்கு பயனளிப்பை வழங்குகிறார்கள். தொடர்ந்தும் வழங்குவார்கள். இது வெறும் அறிவுசார் முயற்சி என்று மட்டும் குறுக்கிப் பார்த்துவிட முடியாது. அவர்கள் முயற்சியை, “தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் வன்முறையைக் கையாளும் மக்கள் தங்களுக்கு ‘விடுதலை வாங்கித்தருபவர்கள்’ என்று கூறிக்கொள்ள யாரையும் அனுமதிப்பதில்லை. தங்கள் செயல்களின் விளைவுகள் குறித்து அவர்களே பெருமைகொள்வார்கள். எதிர்காலத்தை தங்கள் தலைவிதியை, தங்கள் நாட்டின் தலைவிதியை ஒரு ‘வாழும் கடவுளின்’ கைகளில் ஒப்படைக்கக் கூடாது என்பதில் கவனம் செலுத்துகிறார்கள்” என்ற ஃபிரான்ஸ் ஃபனாஸின் சொற்கள் தெளிவுபடுத்தும் விடுதலைக்காக ஆயுதம் தாங்கி போராடிய ஈழ தேசிய இனம் அறிவுத்தளத்தில் சுயாதினத்தை நிறுவிக்கொள்ளும் முயற்சி இம்முயற்சி சுததிரமாகச் சுதந்திரத்தை அடைவதற்கான கருத்துருக்களை உருவாக்குவதற்கும், செயல்படுத்துவதற்கும் மதிப்பிட்டுக் கொள்வதற்குமான செயல்பாட்டின் தொடக்கமே!
ஆவணங்களை ஆவணப்படுத்தும், எளிதாகப் பகிர்ந்துகொள்ளும் ‘நூலகம்’ முன்முயற்சி தமிழ்நாட்டின் கவனத்தை ஈர்க்குமா? தமிழ்நாட்டில் உள்ள அரசுசார் கல்வி நிறுவனங்கள், பொதுநலம்சார் முன்முயற்சியாளர்கள் இத்திசைவழியில் செல்வார்களா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
(இது உங்கள் நூலகம் பெப்ரவரி 2010 இதழில் வெளியானதாகும். கருத்துக்கள் கட்டுரையாளருடையவை)