இரண்டாம் உலகப்போருக்கு முன் இலங்கையில் ஒருநாள் – காலக்கண்ணாடி 02

Published on Author தண்பொழிலன்

ஈழகேசரி1

 

உலகின் வல்லரசுகள் பல ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்த இரண்டாம் உலகப்போர் 1939 முதல் 1945 வரை இடம்பெற்றது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். அதற்கும் முன் இலங்கையில் வெளியான ஒரு பத்திரிகையின் செய்தியொன்றை இவ்வாரம் நாம் பார்க்கலாம்.   இந்தப் பத்திரிகை வெளியான ஆண்டு 1935. வெளியிட்ட பத்திரிகையின் பெயர், ஈழகேசரி

ஈழகேசரி, 1930களிலிருந்து சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான ஒரு பத்திரிகை. அதை நிறுவியவர் குறிப்பிடத்தக்க ஈழத்து ஆளுமைகளுள் ஒருவரான நா.பொன்னையா அவர்கள்.அதன் 1935.07.21 திகதியிட்ட பத்திரிகையில் “இலங்கையில் யுத்தவீரர் படை அமைக்க யோசனை” என்ற தலைப்பில் ஒரு செய்திக் கட்டுரை உண்டு.

இலங்கையில் அமைக்கப்படவிருக்கும் யுத்தவீரர் படை, வேறெதற்கும் அல்ல; இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு! பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இருக்கும் இலங்கை இன்னொரு வல்லரசால் கைப்பற்றப்பட்டால் என்ன நடக்கும் என்ற பதகளிப்பும் அச்சமும் ஆர்வமும் இந்தக் கட்டுரையில் ஒருசேரத் தென்படுகின்றது. இலங்கையின் அப்போதைய பொருளாதாரம், யுத்தச்செலவை எதிர்கொள்ளக்கூடிய விதங்கள், உற்பத்தியை அதிகரிப்பதற்கான முறைகள் இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றன.

இப்பத்திரிகையின் இன்னொரு முக்கியமான செய்தி, “நீர்ப்பாசனத்தில் ஏன் காற்றாடிகளை பயன்படுத்தக்கூடாது?” என்பதை வெளிநாடுகளுடன் ஒப்பிட்டு விவரிக்கிறது. ஒரு செய்தி, யாழ் – மலையாளப் புகையிலை வியாபாரம் பற்றிப் பேசுகிறது. “சைவசமயாபிமானிகட்கோர் வேண்டுகோள்” என்ற பெயரில் வந்துள்ள வாசகர் கடிதமொன்று, ஆலயங்கள் தமது வருமானத்தை வீண்செலவு செய்வதையும், அதை பயனுள்ள விதத்தில் சமூகத்துக்குச் செலவழிக்கவேண்டும் என்றும் கோருகிறது. கோவில் திருட்டு, வாள்வெட்டு பற்றிய இரு செய்திகளும் கொட்டை எழுத்தில் வந்திருக்கின்றன. எல்லாமே, காலம் மாறினாலும் கோலம் மாறவில்லை என்பதைச் சொல்லாமல் சொல்பவை.

ஈழகேசரி2
இந்த ஈழகேசரியில் வந்துள்ள பல செய்திகள் சுவையானவை. “பலதும் கலம்பகம்” எனும் பகுதியில் பல துணுக்குச் செய்திகள் வந்துள்ளன. கொழும்பில் பஸ்சால் தாக்கப்பட்ட ஒரு பேபி ஒஸ்ரின் கார் மூன்று தடவை குத்துக்கரணம் அடித்ததும், இலங்கையிலேயே முதன்முதலாக ஒரு நாய்க்கு காய்ச்சல் ஏற்பட்டதை மிருகவைத்தியர் ஒருவர் உறுதிப்படுத்தியதும், விவாகஞ்செய்யாத வாலிப உத்தியோகத்தர்கள் சட்டவிரோத மதுவகைகளைக் கைப்பற்றுவதற்காக, அனுமதி பெறாமல் இரவில் வீடுகளுக்குச் செல்வதை நீர்கொழும்பு நீதிபதி கண்டித்ததும், என்று சுவாரசியத்துக் குறை இல்லை.

இப்படி ஆயிரக்கணக்கான பழம்பெரும் பத்திரிகைகள் நம் நூலகம் வலைத்தளத்தில் கிடைக்கின்றன.  இலங்கையின் மிகப்பழைமையான பத்திரிகையான உதயதாரகையின் 1841 பிரதி முதல், 2018இல் வெளியான வலம்புரி வரை, இந்தப் பத்திரிகைகளின் பட்டியல் நீள்கின்றது.  நீங்களும் நூலகத்துக்கு வந்து பழைய பத்திரிகளை ஆண்டு வாரியாகவும் , தேடிப்பார்த்து வாசிக்கலாம். நம் முப்பாட்டன், முப்பாட்டி பிறந்து வளர்ந்த போது அவர்களைச் சூழ்ந்திருந்த செய்திகள் என்னென்ன என்று அறிந்துகொள்ளும் சுகமே தனி.  முயல்கிறீர்களா?

மேற்படி பத்திரிகையை வாசிக்க: இங்கு அழுத்தவும்.
விரும்பிய ஈழகேசரி பத்திரிகைகளை வாசிக்க: இங்கே அழுத்தவும்.

முடிப்பதற்கு முன்,  மேலே ஈழகேசரியில் வந்த ஒரு நகைச்சுவை

புருஷன்: நீயும் நானும் ஒன்று தானே கண்ணே!
மனைவி: ம், உரத்துப் பேசவேண்டாம் நாதா..
புருஷன்: ஏன் கண்ணே, வெட்கமாயிருக்கிறதா?
மனைவி: இருவரும் ஒன்றானால் வரும் தேர்தலில் ஒரு வோட் மாத்திரம் தானே போடலாம்?