மனவெளி கலையாற்றுக் குழுவின் “ஒரு பொம்மையின் வீடு”

Published on Author தண்பொழிலன்
ஒரு பொம்மையின் வீடு – மனவெளி கலையாற்றுக் குழுவினர்

 

கனடாவின் முன்னணித் தமிழ் அரங்காற்றுகைக் குழுமங்களில் ஒன்றான “மனவெளி கலையாற்றுக் குழு” ஆனது, எதிர்வரும் யூன் 30 அன்று “ஒரு பொம்மையின் வீடு” நாடகத்தை மேடையேற்ற உள்ளது.

“ஒரு பொம்மையின் வீடு” (A Doll’s House) எனும் நாடகம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைசிறந்த நாடகக் கலைஞர்களில் ஒருவரும், நவீனத்துவ முன்னோடிகளில் ஒருவருமான ஹென்ரிக் இப்சனின்  படைப்பாகும். அந்நாடகம் அரங்கேறிய 1879இலிருந்து தொடர்ச்சியான விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்த நாடகம் அது. நோரா எனும் பாத்திரப் படைப்பின் மூலம், பெண்ணொருத்தி பதுமை அல்ல; மனைவி அல்ல; தாயும் அல்ல; அதற்கெல்லாம் மேல் என்று உரத்த குரலில் கூறும் இந்நாடகம், பெண்ணியம் சார்ந்த முன்னோடிக் குரல்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

உலகின் ஐம்பத்தைந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கப்பட்டுள்ள நாடகம், இம்முறை முதன்முறையாக கனடாவில் அரங்கேற உள்ளது. இந்நாடகத்தை மொழியாக்கியவரும் இயக்குநருமான திரு.எம்.விக்னேஸ்வரன், “தமிழ்ச்சமூகத்தைப் போன்ற ஒரு சமுதாயத்தின் ‘திருமணம் புனிதமானது தூய்மையானது’ என்ற எண்ணக்கருக்களைக் கட்டுடைக்கக் கூடிய இந்நாடகம், அது வெளியான போது சந்தித்த விமர்சனங்களைப் போலவே விரிவான உரையாடல்களுக்குக் களம் அமைக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கனடாவின் றொரன்ரோ நகரைத் தளமாகக் கொண்டு, புலம்பெயர் தமிழர்களால் நடாத்தப்பட்டு வருகின்ற மனவெளி கலையாற்றுக் குழுவானது, வெளிநாட்டு மகத்தான படைப்புகளைத் தமிழ்ப்படுத்தும் தன் அரிய முயற்சிகளில் ஒன்றாக, இப்படைப்பையும் தமிழ் கூறு நல்லுலகுக்கு வழங்கி வைக்கின்றது. எதிர்வரும் யூன் 30ஆம் திகதி சனிக்கிழமை 19ஆவது அரங்காடல் நிகழ்வாக, பிளாற்றோ மார்க்கம் தியேட்டரில் (Flato Markham Theatre), ஒரு பொம்மையின் வீடு அரங்கேற இருக்கிறது. (கனடிய நேரம்) மாலை 1.30 மணி, 6.30 மணி என இரு காட்சிகள் இடம்பெறும்.

தன்னார்வ தொண்டு நிறுவனமான நூலக நிறுவனம் இம்முறையும் நிகழ்வின் இடைவேளையின் போது சிற்றுண்டிகள் விற்று நிதிசேகரிக்கவுள்ளது.மனவெளி கலையாற்றுக் குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள்