நூலகவியல் அறிமுக நூல்கள்

Published on Author Noolaham Foundation

கோபி

பிரசுரம் : நூல் தேட்டம் தகவல் கையேடு

ஆண்டு : 2005

பதிப்பாளர் : அயோத்தி நூலக சேவைகள்

நூலகவியலாளர் ந. செல்வராஜாவின் நூல் தேட்டம் என்ற ஈழத்துத் தமிழ் நூல் விபரப்பட்டியல் முயற்சியைப் பற்றிய அறிமுகக் கையேடு இதுவாகும். தமிழிலும் ஆங்கிலத்திலும் அமைந்துள்ள இப்பிரசுரத்தில் நூல் தேட்டம் முயற்சி பற்றியும் அயோத்தி நூலக சேவைகள் பற்றியும் செல்வராஜாவின் நூலகவியற் பணிகள் பற்றியும் தகவல்களும் விபரங்களும் உள்ளன. நூல் விபரப்பட்டியலுக்கான பதிவுத் தாளும் பின்னிணைப்பாகக் கொடுக்கப் பட்டுள்ளது.

பிரசுரம் : உலகத் தமிழர் ஆவணக் காப்பகம் ஓர் அறிமுகம்

ஆண்டு : 1996

பதிப்பாளர் : நூலாசிரியர்கள்

குரும்பசிட்டி இரா. கனகரத்தினம், திருமதி பவளராணி கனகரத்தினம் ஆகியோரின் முயற்சியான உலகத் தமிழர் ஆவணக் காப்பகம் என்ற ஆவணப்படுத்தல் முயற்சி பற்றிய அறிமுக வெளியீடு இது. இணைப்பாக அவர்களது நன்றிச் செய்தியையும் பல்வேறு இதழ்களில் வெளியான செய்திகள், தகவல்கள், அறிஞர்களின் பாராட்டுச் செய்திகளையும் படங்களையும் கொண்டுள்ளது.

பிரசுரம் : உங்கள் பனையோலைகள் மின்வெளிக்கு வந்துவிட்டனவா?

ஆண்டு : 2007

பதிப்பாளர் : நூலகத் திட்டம்

காகித நூல்கள் மின்னூல்களாக்கப்பட வேண்டிய தேவை குறித்த சிறு உரையாடல் எனும் உப தலைப்புடன் வெளியான இந்த வெளியீடு நூலகத் திட்டம் பற்றிய ஓர் அறிமுகப் பிரசுரம் ஆகும். மின்னூலாக்கத்தின் தேவையை வலியுறுத்தும் இது எழுத்தாளர்களுக்கான அறிமுகமாக எழுதப் பட்டதாக உள்ளது. நூலகத் திட்டம் பற்றிய குறிப்புக்களையும் பின்னிணைப்பாகக் கொண்டுள்ளது.

பிரசுரம் : தமிழ்ப் புத்தக தகவல் திரட்டு

பதிப்பாளர் : விருபா

இணையத் தரவுத் தளமான viruba.com பற்றிய அறிமுகப் பிரசுரம் இதுவாகும். “தமிழ்ப் புத்தகங்களைப் பற்றிய முழுமையான/ ஒருங்கிணைக்கப்பட்ட தகவல் தரவுத் தளம் இதுவரை இல்லை. அக்குறையைப் போக்கவே விருபா டாட் காம் உருவாக்கப்பட்டதுஎனும் அறிமுகத்துடன் தொடங்கும் இவ்வெளியீடு வலைத்தளத்தின் நோக்கம், உள்ளடக்கம் போன்ற விபரங்களுடன் தொடர்பு கொள்வதற்கான விபரங்கள், விருபா தொடர்பில் வேறு ஊடகங்களில் வெளியான குறிப்புக்களையும் கொண்டுள்ளது.

இந்த வெளியீடுகளையும் நூலகவியல், நூல்விபரப்பட்டியல்கள் தொடர்பான தகவல்கள், செய்திகளைக் கொண்ட பல்வேறு வெளியீடுகளையும் நூலக வலைத்தளத்தில் (www.noolaham.org) தேடிப் பெறலாம்.