நூலகத்தின் தொழிற்கலை ஆவணப்படுத்தல் திட்டம் – தும்புக்கைத்தொழில்

Published on Author தண்பொழிலன்
கயிறு திரித்தல்

நூலக நிறுவனமும் தமிழ் விக்கிப்பீடியாவும் இணைந்து, இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் தொழிற்கலைகளை ஆவணப்படுத்தும் திட்டத்தை தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றது. அருகிவரும் தொழிற்கலைகளை பல்லூடகங்களைப் பயன்படுத்தி ஆவணப்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும். புகைப்படங்கள், காணொளிகள், வாய்மொழி வரலாறுகள் என்பன பெறப்பட்டு, அவை நூலகத்தின் ஆவணகம் வலைத்தளத்தில் தனிச்சேகரங்கள் திறக்கப்பட்டு அங்கு சேகரிக்கப்படுகின்றன.

 

இதுவரை ஏழுக்கும் மேற்பட்ட தொழிற்கலைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் தும்புக்கைத்தொழிலானது, கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி கிராமத்தை மையமாகக் கொண்டு ஆவணப்படுத்தப்பட்டது. தென்னம்மட்டையை பெற்றுக்கொள்ளல், நீரில் ஊறவைத்தல், தென்னம்நாரைப் பிரித்தல், கயிறுதிரித்தல் உள்ளிட்ட படிமுறைகள் படங்களாக சேமிக்கப்பட்டுள்ளதுடன், இன்றும் உற்சாகத்துடன் அத்தொழிலை மேற்கொண்டு வரும் அருளம்மா, மற்றும் மயில்வாகனம் சிவபாக்கியம் ஆகியோரின் வாய்மொழி வரலாறுகள் பதிவேற்றப்பட்டுள்ளன. தும்புக்கைத்தொழில் தொடர்பான ஆவணங்கள் சிலவும் அங்கு சேமிக்கப்பட்டுள்ளன.

 

தும்புக்கைத்தொழில் தொடர்பான திருமதி சிவபாக்கியம் மயில்வாகனம் அவர்களின் வாய்மொழி வரலாற்றைக் கீழே  கேட்கலாம்.


ஒருவேளை இலங்கைத்தமிழரின் சகல தொழிற்கலைகளும் நடைமுறைக்காரணங்களால் வழக்கொழிந்து போனாலும், அவற்றை காலம் கடந்தும் பேணும் என்பதே நூலகத்தின் வெற்றி. தொழிற்கலை ஆவணப்படுத்தல் தொடர்பான ஆவணங்களைப் பார்வையிட இங்கும் தும்புக்கைத்தொழில் சேகரம் தொடர்பான ஆவணங்களைப் பார்வையிட இங்கும் அழுத்துங்கள்.