யாழ்ப்பாணத் தமிழ் நாடக அரங்கு – கந்தையா ஸ்ரீகணேசன்

Published on Author தண்பொழிலன்

yaal

இலங்கை தொன்றுதொட்டே பல நிகழ்த்துகலைகளுக்கு நிலைக்களனாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. அவற்றில் சிங்கள மரபு சார்ந்த அரங்காற்றுகைகளும் கலைகளும் பெருமளவு ஆவணப்படுத்தப்பட்டு பரவலான அங்கீகாரத்தைப் பெற்று இன்றும் அரங்கேற்றப்படுகின்றன.ஆனால் ஈழத்தமிழ் சார்ந்த நிகழ்த்துகலைகளுக்கு , போதிய சமூக அங்கீகாரமோ, பரவலாக்கமோ அவை காணவில்லை. அதிலும் சில நிகழ்த்துகலைகள் குறிப்பிட்ட பிரதேசத்துக்கும் குறிப்பிட்ட சமூக அந்தஸ்து கொண்டோருக்கும் வரையறுக்கப்பட்டனவாக உள்ளன. காலவோட்டத்தில் மிக வேகமாக அருகிவரும் இவை, இன்னும் முறைப்படி ஆவணப்படுத்தப்படவோ அங்கீகரிக்கப்படவோ இல்லை எனலாம்.

அந்த வகையில், அரங்கியல் சார்ந்த அரிய நூல்களை உரையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும். இந்த முறை நாம் பார்க்க இருப்பது, “யாழ்ப்பாணத் தமிழ் நாடக அரங்கு” நூல்.

வவுனியா கலை இலக்கிய வட்டத்தின் வெளியீடான இந்நூல், யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் கந்தையா ஸ்ரீகணேசனால் தொகுக்கப்பட்டிருப்பதுடன், பதினைந்துக்கும் மேற்பட்ட ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு தொடர்பான விமர்சனக்கட்டுரைகளுடன் 1997இல் வெளியான நூல்.

பேராசிரியர். மௌனகுருவின் “விடிவு” நாடகம், குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களின் “மண் சுமந்த மேனியர்” முதலானவை தொடர்பான பயனுள்ள விமர்சனங்கள் இதில் உண்டு. கிளிநொச்சியில் தண்ணீர்ப்பிரச்சினையை மையமாக வைத்து இடம்பெற்ற அரங்காற்றுகைகள், நாடக நெறியாளர் அரசு அவர்களுடனான நேர்காணல், ஈழத்தமிழரும் இசைநடனமும், இலங்கையின் சிறுவர் நாடக அரங்கு, நாடகத்துறையில் நவீனத்துவ சிந்தனைகள் முதலியவற்றை ஆராயும் பல கட்டுரைகள் உள்ளன. இவற்றில் பல, ஈழநாதம், மல்லிகை, முரசொலி, முதலான இதழ்களில் வெளியானவை. இலங்கைத் தமிழ் அரங்கின் நவீன உத்திகள் தொடர்பான ஆங்கிலக் கட்டுரையொன்றும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இன்று இந்த நூலுக்கு வயது 20. ஆனால், ஈழத்து நாடக அரங்கை காலத்துக்கேற்ப மீட்டுருவாக்கம் செய்யவும், அது தொடர்பான மறுமலர்ச்சியை நிகழ்த்தவும் அவசியமான ஆரம்பகட்ட சிந்தனைகள் பல இந்நூலில் உள்ளன. இது, எதிர்காலத்தில் இலங்கையின் அரங்காற்றுகை, நிகழ்த்துகலைகள் சர்வதேச தரத்தை எட்டும் போது, அதற்கு கால்கோளிட்ட சாதனங்களில் நிச்சயம் இந்நூலும் ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

வாசிக்க