மட்டக்களப்பின் முதல் தினசரி | காலக்கண்ணாடி 03

Published on Author தண்பொழிலன்

கிழக்கைத் தளமாகக் கொண்டு வெளியான பத்திரிகைகளில் சில பத்திரிகைகளே தொடர்ச்சியாக வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது தினக்கதிர். 1990களின் நடுப்பகுதியில் மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்ட தினக்கதிர், பல்சுவைத் தகவல்களைத் தாங்கிய தினசரிப் பத்திரிகையாக வெளிவந்துகொண்டிருந்தது. அதன் சில இதழ்கள் இருவார இதழ்களாக வெளியாயின. அவற்றில்  1998 ஜூன் 14- 20  திகதியிட்ட “தினக்கதிர்” பத்திரிகை ஒன்றேயே நாம் இன்று பார்க்கவுள்ளோம்.

Capture

இவ்விதழின் தலைப்புச் செய்தியாக “திட்டமிட்டபடி யூலை மாதம் சார்க் மாநாடு. சார்க் தலைவர்கள் இனப்பிரச்சினைத் தீர்வினை வலியுறுத்துவார்களா? தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு” என்பது கொட்டை எழுத்துக்களில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

அதன் கீழேயே “பத்திரிகை தணிக்கையை நீக்கக் கோரிக்கை” எனும் தலைப்பில் பெட்டிச் செய்தி கீழ்வருமாறு வெளியாகியுள்ளது.

“யுத்தம் சம்பந்தமான செய்திகளை வெளியிட பத்திரிகைகளுக்கு த் தடை விதித்ததைத் தொடர்ந்து,  வடக்குக் கிழக்கில் இடம்பெறும் எந்த ஒரு உண்மை நிலைவரங்களையும் அறிய முடியாத அவல நிலை தோன்றியுள்ளது. இந்தத் தணிக்கையை நிறுத்துமாறு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆயினும் இது தற்காலிக முடிவேயன்றி நிரந்தரமான தடை அல்ல என அரசப்பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.”

இவ்வாண்டு ஆரம்பத்தில் இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டதை நாம் அனைவரும் அறிவோம். அதே போல் ஒரு நிலைமை இருபது ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட போது, செய்திகள் தணிக்கை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தை இந்தச் செய்தித் துணுக்கின் மூலம் நம்மால் அறிய முடிகின்றது.

யுத்தம் தொடர்பான செய்தித் தணிக்கைக்கு நாகரிகமான முறையில் பதியப்பட்டுள்ள எதிர்ப்பும் கவனிக்கத்தக்கது. மூன்றாம் பக்கத்தில் “வன்னியில் மீண்டும் உக்கிரமான போர்!” எனும் தலைப்பின் கீழ் “தணிக்கை” எனும் எழுத்துகள் பொறிக்கப்பட்டு, “வாழ்க இலங்கையின் செய்திச் சுதந்திரம்” எனும் வரிகள் எழுதப்பட்டுள்ளன.

222

இரத்தவங்கியின்றி இயங்கும் முல்லைத்தீவு வைத்தியசாலை, தீர்வை வலியுறுத்த அஷ்ரப்பும் தமிழ்க்கட்சிகளும் இணைந்து புதிய கட்சி, யாழ் புதிய மேயருக்கு எதிராக நம்பிக்கையிலாத்தீர்மானம்,கொக்கட்டிச்சோலை தாந்தோன்றீச்சரம் தொடர்பான கட்டுரை, புளியந்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா சிறப்புமலர், அந்தக்கால சினிமா செய்திகள், கவிதைகள், ஈழத்துக் கலைஞர் தொடர் முதலான பல சுவையான செய்திகளும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.

16 பக்கங்களைக் கொண்ட இந்தத் தினக்கதிர் இதழில், நம்மைக் கனவுலகில் ஆழ்த்தி மெல்லிய புன்னகையை இதழ்களில் தவழவிடும் செய்தி ஒன்று  உண்டு. இரண்டாம் பக்கத்தில் வெளியாகியுள்ள “விண்டோஸ் 95 தொடர் அடுத்த இதழிலிருந்து வெளியாகும்” என்ற பெட்டிச் செய்தி.

மேற்படி தினக்கதிர் இதழை வாசிக்க: இங்கு அழுத்தவும்.

ஏனைய தினக்கதிர் இதழ்களை வாசிக்க: இங்கு அழுத்தவும்.