தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பதினாறாம் ஆண்டு நிறைவையொட்டி யாழில் ஒக்ரோபர் 19, 20 ம் திகதிகளில் சிறப்பான கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. இந்தியாவில் இருந்து 20 மேற்பட்ட பயனர்கள் கலந்து கொண்டது இதன் சிறப்பு ஆகும். தமிழ் விக்கிப்பீடியா உலகத் தமிழ் பேசும் சமூகங்களின் ஒர் இணைப்புத் தளமாக தொடர்ந்து செயற்பட்டு, அந்த உறவுப் பாலத்தை மேலும் பலப்படுத்தி வருகிறது.
2003 காலப் பகுதியில் திறந்த இணையம் (Open Web) பலமாக இருந்தது. தமிழ் வலைப்பதிவுகள், மன்றங்கள், வலை இதழ்கள் ஊடாக உலகம் எல்லாம் இருந்த தமிழ் ஆர்வலர்களிடம் ஒரு பிணைப்பு இருந்தது. அந்தக் காலப்பகுதியிலேயே தமிழ் விக்கிப்பீடியா, நூலகத் திட்டம் ஆகியன தோற்றம் பெற்றன. ஈழத்தில் நூலகச் சமூகமும், தமிழ் விக்கிப்பீடியா சமூகமும் இணைந்து பயணித்த சமூகங்கள் ஆகும்.
பல பயனர்கள் இரண்டு செயற்திட்டங்களிலும் முக்கிய பங்களிப்பினை வழங்கி வருகிறார்கள். நூலக நிறுவன ஆளுகை சபையில் தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகிகள் நான்கு பேர் இருப்பது அதற்கு சான்றாகும். மேலும், நூலகச் செயற்பாடுகளுக்கு இந்தியத் தன்னார்வலர்களின் பங்களிப்பு, உள்ளீடு முக்கியமானதாகும். அது தமிழ் விக்கிப்பீடியா, கட்டற்ற மென்பொருள் இயக்கம், உத்தமம் போன்ற களங்கள் ஊடாகவே சாத்தியமானதாகும்.
விக்கிச் செயற்திட்டங்களான தமிழ் விக்கிப்பீடியா (கலைக்களஞ்சியம்), தமிழ் விக்சனரி (அகரமுதலி), விக்கிமூலம் (ஆவணக் காப்பகம்), விக்கிநூல்கள், விக்கி செய்திகள், விக்கி பொதுவகம் (பல்லூடகங்கள்), விக்கித் தரவுகள் போன்றவற்றில் நூலக நிறுவனம் இணைந்து செயற்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் விக்கிச் சமூகமும், நூலக நிறுவனமும் இணைந்து மேற்கொள்ளும் தொழிற்கலைகள் ஆவணப்படுத்தல் செயற்திட்டம் குறிப்பிடத்தக்கது.
யாழின் கொண்டாட்டங்களின் பங்கேற்ற விக்கியர்கள் நூலக நிறுவன யாழ் அலுவலகத்துக்கு வந்து செயற்பாடுகளைப் பார்வையிட்டு கலந்துரையாடல்களை மேற்கொண்டனர். நாம் தொடர்ந்து இணைந்து பயணிப்போம்.