நூல்களால் கட்டும் தேசம்

Published on Author Safna Iqbal

 

nool-iyer

‘நூல்களால் கட்டும் தேசம்’ எனும் தலைப்பில் அமையும் இக் கட்டுரை கனடாவிலிருந்து வெளிவரும் தாய்வீடு பத்திரிகையின் 2020, ஏப்ரல் வெளியீட்டில் (பக்கங்கள் 92-96) பிரசுரமாகியுள்ளது. எழுத்தாளர்களையும் அவர்களது எழுத்துக்களையும் மதிப்பிட்டு எழுதும் கட்டுரைகளுக்கு மாறாக இலக்கியச் செயற்பாட்டாளர்களின் வரலாற்று வகிபாகத்தைப் பத்மநாப ஐயரை முன்நிறுத்தி ஆராய்கிறது. பண்பாட்டு விடுதலைக்கான தேசிய விடுதலைப் போராட்டத்தில் எழுத்தரசியலின் முக்கியத்துவத்துவத்தினை உலக விடுதலைப் போராட்ட வரலாறுகளின் பின்னணியில் நோக்கி, யாழ்ப்பாணம் பொதுநூலக எரிப்புக்குப் பின்னர் நூலகப் பண்பாட்டு மேலெழுகையிலும் தமிழ்த் தேசியத்துக்கான வாசிப்பு வெளியை உருவாக்குவதிலும் பத்மநாப ஐயரின் வினைத்திறனுடன் கூடிய செயற்பாட்டை ஆராய்கிறது. அந்தவகையில் ஈழத்தில் இலக்கிய மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களை எவ்வாறு சூழமைவுப்படுத்தலாம் என்பதற்கான ஒரு திறப்பினைத் தமிழ்ச் சூழலில் முதன்முதலாக இக்கட்டுரை நிகழ்த்தியுள்ளது.

இக்கட்டுரை இருவிதமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. முதல்பகுதி எழுத்தரசியல், அதன் முக்கியத்துவம், நூலகப் பண்பாடு, அப்பண்பாட்டிற்கு ஏற்பட்ட வரலாற்று நெருக்கடிகள், யாழ்ப்பாணம் பொது நூலக எரிப்பு, அதன் பின்னர் முகிழ்த்த, பிரத்தியேக மற்றும் கூட்டு மனநிலைசார் நூலக உருவாக்கப் பிரக்ஞை, இனவாதக் கருத்தியல்சார் வாசிப்பு வெளிக்கு எதிரானதும் மாற்றானதுமான தமிழ்த் தேசியத்தின்பாற்பட்ட வாசிப்பு வெளியின் உருவாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய கோட்பாட்டு உருவாக்கமாக அமைந்துள்ளது. கட்டுரையின் இரண்டாவது பகுதியானது, முதல் பகுதியில் உருவாக்கிய கோட்பாட்டுச் சூழமைவை அடிப்படையாகக் கொண்டு பத்மநாப ஐயரின் நூலகச் செயற்பாடு, சமூக மற்றும் கலை இலக்கியச் செயற்பாடுகளின் மிக நீண்ட, வரலாற்றின் நெருக்கடிப் பாறை பிளந்து பயன் விளைத்த செல்வழித் தடங்களையும் அவற்றின் முக்கியத்துவத்தினையும் மதிப்பிடுகிறது.

பத்மநாப ஐயர் கலை இலக்கிய மற்றும் சமூகச் செயற்பாட்டாளராகத் தம்மையும் தம்வாழ்வையும் தமிழ் உலகுக்குத் தியாகத்துடன் அர்ப்பணித்து உருவாகிய விதம், முக்கியமான பணிகள் பலவற்றைப் புரிந்தும் தம்மை முன்னிலைப்படுத்தாத அவர்தம் சான்றாண்மை, ஈழத்துக்கு வளமும் வலுவும் சேர்க்கும் வகையில் எழுத்துலகில் அவர் உருவாக்கிய புலமைசார் வலைப்பின்னல், நூலக உருவாக்கப் போராளியாக எழுத்துலகோடு சமராடி ஈழத்து இணைய நூலக உருவாக்கத்தில் அவர் குவித்த வெற்றிகள், இலாப நோக்கமற்ற அவரது புத்தகப் பரிவர்த்தனை, ஈழத்தைத் தமிழக எழுத்துக்கள் ஆக்கிரமித்திருந்த காலத்தில் தமிழகத்தில் ஈழத்து எழுத்துக்கான வாசிப்புச் சமூகத்தை உருவாக்கல், நூலகத்தின் ஸ்தாபகத் தவிசாளராய் இருந்தும் ஆரவாரமின்றி அயராது சேவகனாய் ஆற்றிவரும் அரும்பெரும் ஊழியம், ஈழத்துப் புலமைக்கும் புனைவிற்கும் அங்கீகாரம் ஏற்படுத்தும் வகையிலான வெளியீடுகள் மற்றும் பதிப்பு முயற்சிகள், ஈழத்துக் கலை வரலாற்றில் பதித்த சுவடுகள், புத்தகப் பரிவர்த்தனை மற்றும் நூல்வெளியீடுகளின்வழி புலம்பெயர் தமிழ் இலக்கியத்துக்கான முன்னோடியானதும் முக்கியமானதுமான செயற்பாடுகள், ஈழத்து எழுத்துக்களை உலக மொழிகளில் கொணரும் பிறமொழியாக்க முயற்சிகள், கருத்தியல் பகிர்வுக்காக ஒழுங்கமைத்த பன்னாட்டு ஒன்று கூடல்கள் மற்றும் எழுத்தாளர் சந்திப்புக்கள், மதுரை மின்நூல் திட்டத்தில் ஈழத்து நூல்களை இணைத்த முயற்சிகள் மற்றும் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் உள்ள நூலகங்களில் ஈழத்துத் தமிழ் நூல்களின் சேகரிப்பு அலுமாரிகளை உருவாக்கிய முயற்சிகள், ஆவணப்படங்களின் உருவாக்கத்தில் அவரின் தன்னலமற்ற உழைப்பு, ஈழத்தின் காண்பியக் கலைப் படைப்புகளை உலக வெளிக்குக் கொண்டு சென்று கவனப்படுத்தல் முதலாய பல்வேறு பணிகளைக் கோட்பாட்டுப் பின்புலத்தில் ஆதாரங்களுடன் விபரித்துச் செல்கிறது, இக் கட்டுரை.

கோட்பாட்டு நூல்களையும் விம்பம் – காலச்சுவடு வெளியீடான ‘நூலை ஆராதித்தல் – பத்மநாப ஐயர் 75’ என்ற பெருநூலையும் ஐயர் நிகழ்த்திய ‘தமிழியல் விருது ஏற்புரை’யையும் முதன்மை ஆதாரங்களாகக் கொண்டு இந்த ஆய்வு எழுத்து அமைந்துள்ளது. இக் கட்டுரையின் ஆசிரியர் கவிஞரும் விமர்சகரும் ஆய்வாளரும் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்துறை விரிவுரையாளருமான கலாநிதி செல்லத்துரை சுதர்சன் ஆவார்.