திறந்த அணுக்க வாரம் என்பது வருடாந்திர உலகளாவிய நிகழ்வாகும். இது கல்வி மற்றும் ஆராய்ச்சி சமூகத்தில் திறந்த அணுகலை ஊக்குவிக்கும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. திறந்த அணுக்கம் என்பது ஆய்வுகள், வெளியீடுகள் மற்றும் கல்வி சார் வளங்கள் என்பவற்றினை நிதி, சட்ட அல்லது தொழில்நுட்ப ரீதியிலான தடைகள் இல்லாமல் பொதுமக்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் நடைமுறையைக் குறிக்கிறது.
திறந்த அணுக்க வாரம் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் கடைசி வாரத்தில் நடைபெறுவதுடன் திறந்த அணுக்கத்தின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆய்வு மற்றும் கல்வியில் அதிக வெளிப்படைத்தன்மையினை தோற்றுவிக்கவும், மேலும் துறைசார் ரீதியில் ஏற்படக்கூடிய சாதனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை முன்னிலைப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த திறந்த அணுக்க வாரத்தின் முக்கிய செயற்பாடுகளாக:
- பத்திரிகைகள், கட்டுரைகள், ஆய்வறிக்கைகள், இதழ்கள் மற்றும் தரவு போன்ற பல்வேறு வெளியீடுகளின் திறந்த பகிர்வை ஊக்குவித்தல்.
- ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் என்பவற்றுக்கு உலக அளவில் திறந்த அணுகல் கொள்கைகளை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என விழிப்புணர்வூட்டல்.
- பெரும்பாலும் நிகழ்வுகள், பயிற்சிப் பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகள் ஒழுங்கு செய்து திறந்த அணுகல், பதிப்புரிமை, திறந்த தரவு மற்றும் இதனோடு தொடர்புடைய தலைப்புகள் குறித்து ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குதல்.
- திறந்த அணுக்கத்தில் காணப்படக்கூடிய ஆவணங்கள் மற்றும் அறிவைப் பரப்புவதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய தளங்கள் போன்றனவற்றின் சாதனைகளை கொண்டாடுதல்.
- திறந்த அணுகல் கொள்கைகளுக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள், நூலகர்கள், வெளியீட்டாளர்கள் மற்றும் ஏனையவர்கள் மத்தியில் சமூக உணர்வை மேம்படுத்தல்.
இவை தவிர இவ்வாரமானது, ஆய்வின் பார்வை மற்றும் தாக்கத்தை அதிகரிப்பது, ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கான அணுகலுக்கான தடைகளை குறைப்பது மற்றும் அறிவியல் மற்றும் கல்விசார் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவது என்பவற்றுக்கு வாய்ப்பளிக்கின்றது.
அதனடிப்படையில் “வணிகமயமாக்கலுக்கு மேல் சமூகம்” என்பது இந்த ஆண்டின் சர்வதேச திறந்த அணுகல் வாரத்தின் (அக்டோபர் 23-29) கருப்பொருளாகும். இது அறிவார்ந்த வெளியீடு மற்றும் ஆய்வுகளுக்கான அணுகல் துறையில் லாபம் சார்ந்த நலன்களைக் காட்டிலும், கல்வி, ஆராய்ச்சி சமூகம் மற்றும் பரந்த பொதுமக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. குறிப்பாக அறிவு மற்றும் ஆராய்ச்சி வெளியீடுகளை பரப்புவதற்கு சமூகம் சார்ந்த அணுகுமுறைகளை உருவாக்கி வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த ஊக்குவிப்பதாய் அமைகிறது.
அந்தவகையில் திறந்த அணுக்கம் என்பது நூலக நிறுவனத்தின் அடிப்படை கொள்கைகளில் ஒன்றாகும். நூலகத்தில் எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தப்படுகின்ற அனைத்து படைப்புகளும் பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி பெறப்பட்ட பின்னர் அவர்களின் பூரண ஒத்துழைப்புடன் நூலக வலைத்தளத்தினூடாக வெளியடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இந்தத் திறந்த அணுக்க வாரத்தில்,
- நூலகத்தில் இருக்கும் உங்களது ஆக்கங்களை திறந்த அணுக்கத்தில் பகிர இன்னும் அனுமதி வழங்கவில்லை எனில், தயந்து வழங்குகள்.
- திறந்த அணுக்கத்தில் கானப்படக்கூடிய சக படைப்பாளிகளின் ஆக்கங்களை மனிதச் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளக்கோருங்கள்.
- திறந்த அணுக்க விழுமியங்களை முன்னெடுத்துச் செல்லும் கொள்கை அறிமுகப் பணிகளில் ஈடுபடுங்கள்.
- நூலக வலைத்தளத்தில் திறந்த அணுக்கமின்றி, படைப்பாளரின் அனுமதி தேவையாக இருக்கின்ற படைப்புகளுக்கு அனுமதி பெற்றுக்கொடுக்க முன்வாருங்கள்.
- திறந்த அணுக்கத்தை பெற்றுக்கொடுப்பதில் நூலகத்துடன் தன்னார்வலர்களாக கைகோருங்கள்
தொடர்புகளுக்கு: www.noolahamfoundation.org