மதிப்புக்குரிய தேசிய மொழிகள் மற்றும் இன ஒருமைப்பாடுகள் அமைச்சர் கௌரவ வாசுதேவ நாணயக்கார அவர்களே, மாநகர சபை உறுப்பினர் திரு S. குகவரதன் அவர்களே, கொழும்பு தமிழ்சங்க தலைவர் திரு. மு. கதிர்காமநாதன் அவர்களே, எழுத்தாளர்களே, பத்திரிகையாளர்களே, கல்விமான்களே, நலன்விரும்பிகளே, இத்திட்டத்தின் ஆணிவேர்களான தன்னார்வ தொண்டு நண்பர்களே மற்றும் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.
“ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி” என்ற நூலுடன் தொடங்கிய எமது நூலக திட்டம் இன்று ஏழாண்டுகள் கடந்த நிலையில் ஏராளமான தன்னார்வலர்களின் அளப்பரிய உழைப்பினால் 10000 ஆவணங்கள் எனும் இலக்கை பூர்த்தி செய்து வெற்றிநடை போட்டு கொண்டிருக்கும் இந்நாளில் தனது வரலாறுகளில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படுகின்ற இந் நிகழ்வை நூலக நிறுவன இயக்குனர் என்ற வகையில் தலைமை தாங்கி நடாத்தி செல்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
சோர்ந்த விழியில் ஒளி சேரவைக்க சூரியனாய், அறியாமையை விலக்கி, அசையாமையில் அசைவு காட்ட நாமே விதைத்து நாம் அறுவடை செய்வது மட்டுமல்லாமல் எதிர்கால சந்ததியினருக்காக தொலை நோக்குடனும், ஆழமாகவும், தீரசிந்தித்தும், வெளிப்படையாகவும் இவ் விலைமதிப்பற்ற ஒரு பணியை எமது மக்களுக்காக ஆற்றி வருகின்றோம். இளைஞர்களால் கனவு காணப்பட்டு இளைஞர்களால் செயல் வடிவம் கொடுக்கப்பட்ட ஒரு திட்டம்.
நாம் கடந்து வந்த மைல்கற்கள ஒவ்வொன்றும் எமது பரிணாம வளர்ச்சியின் ஒவ்வொரு தூண்கள். 2005 ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் திகதி தைப்பொங்கள் தினத்தன்று அத்திவாரம் இடப்பட்ட எமது பணி பலமைல்கற்களை தாண்டி அவை அனைத்தையும் நினைவூட்டும் முகமாகவும் மெருகூட்டும் முகமாகவும் இன்று இப்பெருவிழாவில் கலந்து கொண்டிருக்கின்றோம். ஏழு ஆண்டுகளின் பின்னர் தமிழ்ச்சங்க நூலக மூலையில் பணியாற்றி வந்த நாம் இன்று, அதாவது அண்மையில் எமக்கென 4 சுவர்கள் சூழ ஒரு அலுவலகத்தை தமிழ்ச்சங்கத்தில் அமைத்து கொண்டோம். அதுமட்டுமல்ல, இன்னும் ஏராளமான அதிவேக வளர்ச்சிகளை அண்மையில் காட்டியிருந்தோம். இவ்வளவு தூரம் கடந்து வந்த நாம் சந்தித்த சோதனைகள் வேதனைகள் ஏராளம்! இவை அனைத்தையும் நாம் கடந்து வந்த பாதையில் நாம் கற்றுகொண்ட பாடங்களாகவும், அனுபவங்களாகவும் மாற்றி கொண்டோம். சென்றது கருதாது நாளை நடக்க போவதை எண்ணி ஒவ்வொரு தடங்களையும் பதிக்கின்றோம். அந்தவகையில் எமது இந்த பணியில் சோர்வடைந்த ஒவ்வொரு சந்தர்பத்திலும் எமக்கு தோளோடு தோள்நின்று உழைத்த ஒவ்வொருவரும் நினைவு கூறப்பட வேண்டியவர்கள். நாம் ஒவ்வொருவரும் தனிநபர் என்ற புள்ளியை கடந்து ஒரு சமுதாய பேரியக்கமாக மாறி இன்று வெற்றி நடை போடுகின்றோம் என்றால் அதற்கு காரணம் நாம் அனைவரும் ஒரு குடும்பமாக அதாவது நூலக குடும்பமாக இணைந்து செயலாற்றுகின்றோம் என்பதே ஆகும். 19 வயது முதல் 79 வயது வரை எமக்கு முன்னணி பங்களிப்பாளர்கள் உள்ளனர். எம் அனைவரிடமும் எந்தவித அரசியல், இனம், பொருளாதார, பிரதேச ரீதியிலான பேதங்கள் இல்லை. இவை அனைத்தையும் கடந்து எறும்புகள் போல், மனம் சலிப்புறாது சிறுகச் சிறுக சேகரித்து ஓயாத உழைப்பையும் நேரத்தையும் தகவல் புரட்சிக்கும் அறிவு பிரவாகத்துக்கும் விதையாக்குகின்றோம்.
டச்சுகாரர்கள் 1470 முதல் இன்றுவரையான தமது அச்சுப்பிரதிகளை எண்ணிமபடுத்துகிறார்கள். பிரான்சு அரசாங்கம் பல மில்லியன் யூரோக்கள் செலவில் எண்ணிமபடுத்தி கொண்டிருக்கிறார்கள். ஜப்பான் அரசாங்கம் தீவிர வெறியுடன் இரண்டே ஆண்டுகளில் சாதித்து காட்டுகின்றோம் என்று செயற்படுகிறார்கள். National Digital Library of America என்ற திட்டம் அமெரிக்க அரசாங்கத்தால் நினைத்து பார்க்க முடியாதளவு பெருமெடுப்பில் துவக்கப்பட்டுள்ளது. எமது அண்டை நாடான இந்தியாவும் Indian institute of Science என்ற அமைப்பினூடாக மேற்கொண்டு வருகின்றது. அதுமட்டுமல்ல அவுஸ்திரேலியா, நோர்வே என பல நாடுகளின் அரசாங்கங்களும் முழுமூச்சுடன் களம் இறங்கியுள்ளன. இணையத்தின் இளவரசன் கூகிள் நிறுவனமும் இதற்கு விதிவிலக்காகவில்லை. இவை எல்லாவற்றையும் வைத்து நோக்கும்வோம் ஆயின் நாமும் இன்று இவை அனைத்துக்கும் ஈடாக எமது மக்களிற்காக எமது சமூகத்திற்காக இப்பணியை ஆற்றிவருகின்றோம் என நாம் பெருமை அடைகின்றோம்.
இன்று எமது மரபின் வேர்களை தேடும் பணியில் பலர் முனைப்புக் கொண்டுள்ளனர். எமது சமூகம் பற்றிய பூர்வீகத்தை அறியமுற்படுவர்கட்கு எந்தளவு முதுசத்தை நாம் சொத்தாக வைத்திருந்தோம் என்பதை எல்லோரும் அறிவதற்கு நாம் ஒரு வெளியை அமைத்து கொன்டு இருக்கிறோம். விஞ்ஞான பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் வசதி அமைத்து ண்டிருக்கின்றோம். தாயகத்திலும் உலகின் பல்வேறு மூலைமுடுக்குகளிலும் சிதைந்துவாழும் எம்மவர்கள் தங்கள் பூர்வீகத்தை அறியவும் இனிவரும் சந்ததியினருக்கு எடுத்தியம்பவும் நாம் வழிசமைக்கின்றோம்.
இணையவழியே எமது சமூகத்தின் மொழியின் இருப்பை உறிதி செய்வதற்கு ஆவணப்படுத்தல் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. எனினும் நாம் இதுவரை புத்தகவடிவில் வந்த ஆவணங்களையே ஆவணப்படுத்திவருகின்றோம். அதையும் தாண்டி நாம் தொழிற்படவேண்டிய பல தளங்கள் உள்ளன. எமது சமூகங்களின் காணப்பட்ட காணப்படுகின்ற பேச்சு மொழிகள், நம்பிக்கைகள், தொன்மங்கள், சடங்குகள், நாட்டாரியல்கள், விளையாட்டுகள், நிர்வாகமுறைகள், தொழிற்கலைகள், கலைகள் போன்ற வெவ்வேறு தளங்களில் உள்ள பரிணாமங்களை நாம் ஆவணப்படுத்த வேண்டியுள்ளது. இது தொடர்பாக நாம் ஆழ யோசித்து பல்வேறுபட்ட ஆய்வு முயற்சிகளையும் ஆரம்பித்து வைத்துள்ளோம். இவற்றை ஆவணப்படுத்த வேண்டிய பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த முறைகள் பற்றியும் எமது தொழில்நுட்பகுழு ஆய்வு செய்து வருகின்றது. இவை அனைத்தும் வெகுவிரைவில் எம்மால் சாத்தியப்படுத்த முடியும் என நம்புகின்றோம். அதுமட்டுமல்லாமல் அறிவு, தகவற் சேகரங்களை கட்டற்ற திறந்த முறையில் வழங்கி இலங்கை தமிழ் பேசும் சமூகங்களின் கல்வி, ஆய்வு, மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு புத்துயிரளிப்போம்.
இலங்கை தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான எல்லாவகையான அறிவு தொகுதிகளையும் ஆவணப்படுத்தி பாதுகாத்து அனைவருக்கும் கிடைக்கச் செய்தல் எனும் எமது பணி இலக்கு நோக்கிய பயணம் இன்றும் வேகத்துடன் தொடர தங்கள் அனைவரினதும் பூரண ஆதரவை வேண்டி நிற்கின்றோம்.
இவ் அரிய வரலாற்று திட்டத்தின் 7 வது ஆண்டு நிறைவு விழாவில் இன்று 10000 எனும் இலக்குடன் வெற்றிவிழா கொண்டாடிடும் நாம் எமது 10 வது ஆண்டு நிறைவு விழாவில் ஒரு இலட்சம் எனும் இலக்கை அடைவோம் என உறுதிபூணுகின்றோம். இறுதியாக இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து எம்மை மகிழ்வித்த உங்கள் அனைவரிற்கும் நன்றி கூறி எமது நூலக குடும்பத்தில் இணைந்து கொண்ட நீங்கள் இவ் அரிய பணியில் முழுமூச்சுடன் ஈடுபட வாழ்த்தி விடைபெறுகின்றேன்.