நூலகத் திட்டம் ஏழாம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடுவதையும் பத்தாயிரம் நூல்களை ஆவணப்படுத்தியுள்ளமையையும் அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இரண்டு காரணங்கள்: 1. இத்திட்டத்தில் பணியாற்றும் பலருடன் மற்ற திட்டங்களிலும் பங்களித்து வருவதால், ஒரு நண்பனாக நூலகம் குழுவினரின் சாதனையைக் கண்டு மகிழ்கிறேன்.
2. சங்கத் தமிழர் காலத்துக்குப் பிறகு, தமிழர்கள் – அதுவும் இளைஞர்கள் – அதுவும் அரசு சாராமல் – அதுவும் இலங்கையின் தற்கால அரசியற் சூழலில் – மொழிக்காக ஒன்றிணைந்து ஏதாவது உருப்பபடியாகச் செய்திருக்கிறார்கள் என்று எண்ணி மகிழ்கிறேன்.
இலங்கைத் தமிழரின் அறிவை ஆவணப்படுத்துவதற்காக அப்பால், நூலகம் திட்டம் பல முக்கியமான விசயங்களுக்காக குறிப்பிடத்தக்க ஒரு முயற்சி.
* நமது சமூகத்தில் இனம், சமயம், பொருளாதாரம், சுற்றுச் சூழலை முன்னிட்டுத் தன்னார்வமாகவும் அமைப்பாகவும் செயல்படும் வழக்கம் இருக்கிறதே தவிர, வரலாற்றை ஆவணப்படுத்தல், மொழி வளர்ச்சி ஆகியவை குறித்துத் தன்னார்வமாகவும் தொழில் நேர்த்தியோடும் செயல்படுவது குறைவு.
* இலங்கைத் தமிழர் தொடர்பான முயற்சியாக இருந்தாலும் உலக அளவில் பரந்தும் தகுந்த இடங்களில் பிற நாடுகளில் வாழும் தமிழரின் பங்களிப்பையும் ஏற்றுச் செயற்படுவது பாராட்டத்தக்கது; முன்மாதிரியானது.
* அரசு சார்ந்தும் மூத்தவர்களாலும் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு இடையே, நூலகம் திட்டம் முற்று முழுதாக இளைஞர்களால் கனவு காணப்பட்டு செயல்வடிவம் பெற்றிருக்கிறது. நூலகம் திட்டத்தின் வியூகத் திட்டமிடல் சந்திப்புகள் சிலவற்றில் கலந்து கொண்டிக்கிறேன் என்ற முறையில், அவர்கள் எவ்வளவு தொலை நோக்குடனும் ஆழமாகவும் தீர சிந்தித்தும், அனைவரையும் கலந்துரையாடி வெளிப்படையாகவும் தங்கள் செயல் திட்டங்களை வகுக்கிறார்கள் என்பதை அறிவேன். இந்தச் செயற்பாடு தமிழ்ச் சூழலுக்கு மிகவும் புதியது. பாராட்டத்தக்கது. ஒரு சிலரின் படிப்பறையில் தொடங்கிய இத்திட்டம் ஒரு முறையான இலாப நோக்கற்ற நிறுவனமாக வளர்ந்து நிற்பதற்கு இதுவே காரணம்.
* இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள பலரை நேரடியாகவே அறிவேன் என்ற முறையில், அவர்கள் எவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கள் வாழ்வின் கணிசமான நேரத்தை இதற்கு ஒதுக்குகிறார்கள், இத்திட்டம் குறித்த சிந்தனையோடே செயல்படுகிறார்கள் என்பதைக் கண்கூடாகக் கண்டுள்ளேன். இந்த அர்ப்பணிப்பு உணர்வு மிக மிக அரிது.
* இதே திட்டத்தைத் தமிழகத்துக்கும் விரிவு படுத்தலாமே என்று கோரிய போது, தங்கள் வளங்களுக்கு நோக்கங்களுக்கு உட்பட்டு இலங்கைத் தமிழரின் அறிவை ஆவணப்படுத்துவதே இயலும் என்று உறுதியாக இருந்தார்கள். எல்லாவற்றையும் செய்யப் போய் போதிய வளமும் குவியமும் இல்லாமல் தேக்கமடையும் திட்டங்கள் பல உள்ளன என்பதால், இந்த உறுதியும் தெளிவும் நன்று.
* தமிழ் என்றாலே தமிழ்நாடு என்றில்லாமல், இலங்கைத் தமிழரின் அறிவை ஆவணப்படுத்துவதன் மூலம் தமிழ் மொழிக்கு உள்ள பன்முகத் தன்மையை வெளிப்படுத்துவதாகவும் இலங்கைத் தமிழரின் அறிவை உலகில் எங்கிருந்தும் அணுகத்தக்கதாகச் செய்கிறது. தவிர, நூற்றாண்டுக்கு முன்பிருந்தே அங்கு தனித்து வளர்ந்த தமிழறிவு மரபை உணரச் செய்கிறது.
* நூலகம் திட்டத்தால் உந்தப்பட்டும் வழிகாட்டப்பட்டும் இன்னும் ஒரு சில திட்டங்களாவது தோன்றும். தோன்றியுள்ளன.
எழுதிக் கொண்டே போகலாம்… ஆனால், வெறும் வாழ்த்து சொல்வதோடு நிறுத்த விரும்பவில்லை. இந்தத் திட்டத்துக்கு எப்படி அனைவரும் பங்களிக்கலாம்?
* நூல்களின் மின்னாக்கத்தில் உதவலாம்.
* தளத்தின் தொழில்நுட்பப் பராமரிப்புக்கு உதவலாம்.
* இயன்ற பணத்தை நன்கொடையாக அளிக்கலாம்.
* நண்பர்களுக்கு இத்திட்டம் குறித்து தெரிவிக்கலாம்.
ஏதாவது ஒன்றைச் செய்வோமே?
வாழ்த்துகளுடன்,
இரவி
சென்னை, இந்தியா