எரிக்க முடியாத நூலகம் | அந்தனி ஜீவா

Published on Author Noolaham Foundation

THINAKKURAL Sunday 08 April 2012.

நமது யாழ். நூலகம் எரிக்கப்பட்ட பின்னர் நம்மவர்கள் எரிக்க முடியாத நூலகம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆம் எரிக்க முடியாத நூலகத்திற்கு ஏழு ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன. ஏழு ஆண்டுகள் நிறைவு விழாவின் பொழுது நூலக நிறுவனம் ஒரு சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டது. அது மாத்திரமல்ல சிறப்பான ஆண்டு விழாவையும் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடத்தியது. கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் ஒரு அறையில் வாடகை செலுத்தி அலுவலகமாக நூலக நிறுவனம் இயங்குகிறது. நூலக நிறுவனத்தின் ஏழு ஆண்டு நிறைவின் போது சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டது. அந்த மலரில் ‘சுவர்கள் இல்லாத நூலகம்’ என்ற தலைப்பில் ரவிக்குமார் என்பவரின் கட்டுரை ஒன்று இடம் பெற்றிருந்தது. பின்னர் அந்தக் கட்டுரையின் கருத்துக்களை கொண்ட கட்டுரை ஒன்று தமிழகத்திலிருந்து வெளிவரும் ‘தீராநதி’ என்ற சஞ்சிகையிலும் இடம் பெற்றிருந்தது. அந்தக் கட்டுரை நமது சிந்தனையை தூண்டுகிறது.

” எனது தந்தையர் நாடு இறந்துவிட்டது

அவர்கள் புதைத்தார்கள் அதை

நெருப்பில்

நான் வாழ்கிறேன்

வார்த்தை

என்ற என் தாய் நாட்டில் “

ஜேர்மனியைச் சேர்ந்த ரோஸ் ஆஸ்லெண்டர் என்ற கவிஞர் எழுதிய இந்தக் கவிதை, யுத்தத்தால் சிதைக்கப்படும் எந்த ஒரு நாட்டுக்கும் பொருந்தக் கூடிய, வீடு தகர்க்கப்படும் போது, சொந்த நிகலும் எரிந்து போய்விடும் போது நாடொன்று உரிமை பாராட்ட எதுவும் இல்லாமல் ஆகிவிடும் போது ஒரு மனிதனிடம் எஞ்சியிருப்பது சொல் மட்டும் தான். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் யாழ். நூலகம் எரிக்கப்பட்டது. ஆசியாவின் மிகப் பெரிய நூலகங்களில் ஒன்றாக இருந்த யாழ். நூலகத்தில் சுமார் ஒரு இலட்சம் புத்தகங்கள் சேகரிக்கப்பட்டு வைக்கப்ட்டிருந்தன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓலைச் சுவடிகளும் அங்கு பாதுகாக்கப்பட்டிருந்தன. இவ்வாறு ரவிக்குமார் தனது கட்டுரையில் தெரிவிக்கின்றார்.
எரிக்க முடியாத நூலகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எமது இளைஞர்களின் எண்ணத்தில் உதித்தது. அதனை முன்னின்று செயல்படுத்தியவர்கள், மிகப் பெரிய சாதனையை செய்து விட்டார்கள். ஒரு நாட்டின் அரசோ அல்லது பல்கலைக்கழகமோ முன்னின்று செய்ய வேண்டிய செயல்படுத்த வேண்டிய பணியினை இலட்சிய வேட்கை கொண்ட ஓரிரு இளைய தலைமுறையினரின் நூலக திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்குப் புலம் பெயர்ந்து வாழும் நம்மவர்களும் நம் நாட்டு சில நல்ல மனம் கொண்டவர்களும் துணை நின்றார்கள். இந்த நூலகம் உருவாக்கத்தில் மிக முக்கியமானவர்கள் இலண்டனில் வாழும் பத்மநாப அய்யர், மற்றவர்கள் சசீவன், கோபி, பிரதீபன், மயூரன், ஈழநாதன் இவர்கள் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். இவர்கள் நமது மரியாதைக்குரியவர்கள்.இன்று நாம் பத்தாயிரத்திற்கும் அதிகமான நூல்களையும் ஆரம்பகால சிறு சஞ்சிகைகளான மறுமலர்ச்சி இன்று வெளிவந்து கொண்டிருக்கும் மல்லிகை வரை நூலகத்தில் பார்வையிடலாம்.
நூலக வலைதளத்தில் (www.noolaham.org) நூல் விபரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2011 ஜனவரி வரை பதிவு செய்யப்பட்டுள்ள ஈழத்து வெளியீடுகளின் விபரம் பின்வருமாறு,
மொத்தப் பதிவுகள் 10,113
நூல்கள் 3538
இதழ்கள் 3615
பத்திரிகைகள் 1738
ஏனையவை 1227
இலங்கைத் தமிழ் ஆவணங்கள் அல்லாத சுமார் 500 க்கும் அதிகமான மின் நூல்கள் பற்றிய விபரங்கள் அயலகம் என்னும் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எரிக்க முடியாத இந்த நூலகத்தை இனி எவராலும் அழிக்க முடியாது. ஈழத்துப் படைப்பாளிகள் தங்கள் நூல்களையும் சஞ்சிகைகளையும் நூலகத்திற்கு கொடுத்து உதவ வேண்டும்.