இலங்கையின் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான ஆவணப்படுத்தலில் ஈடுபட்டுவரும் நூலக நிறுவனம் அது சார்ந்த பதிப்பு முயற்சிகளையும் தொடங்கியுள்ளது என்பதனை அறியத் தருவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
பின்வரும் வகையான பதிப்புச் செயற்பாடுகளில் ஈடுபட நூலக நிறுவனம் தீர்மானித்துள்ளது.
1. பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நுற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதிகளிலும் வெளியாகிய நுல்களை ஆவணப்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் சில மீள்பதிப்புக்களைக் வெளிகொண்டு வருவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
2. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அதற்கு முன்னரும் வாழ்ந்த முக்கிய எழுத்தாளுமைகளுடைய தொகுப்புக்களை செம்பதிப்புக்களாக வெளிக்கொணர்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஈழத்து ஆளுமைகள் பலருடைய ஆக்கங்கள் பல தொகுக்கப்படாமல் அழிந்து போனமையைக் கருத்திற் கொண்டு அவ்வாறானவற்றைத் தொகுத்து வெளியிடும் முயற்சிகளும் இந்நிகழ்ச்சித்திட்டத்தினூடாக மேற்கொள்ளப்படும்.
3. பழைய அரிதான கையெழுத்துப் பிரதிகள் பல இன்னும் அச்சுக்குப் போகாமல் அழிந்து போகும் நிலையில் உள்ளன. அவற்றை அச்சில் கொண்டுவருவது ஆவணப்படுத்தல் சார்ந்து மிக முக்கியமாகின்ற நிலையில் அம்முயற்சியையும் செயற்படுத்துகிறோம்.
4. நூலகத்தின் ஆவணப்படுத்தற் செயற்பாடுகள் சார்ந்த நூல்கள், மாநாட்டு மலர்கள் போன்றனவும் வெளியிடப்படவுள்ளன.
இப்பதிப்பு முயற்சிகள் முற்று முழுதாக இலாப நோக்கற்ற முறையில் மேற்கொள்ளப்படவுள்ளன. பதிப்பு முயற்சிகளுக்கான விரிவான உள்ளகக் கட்டமைப்புக்களை ஏற்படுத்துதல், சந்தைப்படுத்துதல், விற்பனைச் செயற்பாடுகள் போன்றவை நூலக நிறுவனத்தின் ஏனைய செயற்பாடுகளைப் பாதிக்கும் என்பதால் முடிந்தவரை நூலகத்துக்கு வெளியேயான கட்டமைப்புக்களைப் பயன்படுத்தியே இந்த நிகழ்ச்சித் திட்டம் செயற்படுத்தப்படும். அவ்வகையில் பிற வெளியீட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயற்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நூலக நிறுவன நிதியினைப் பயன்படுத்துவதும் முடிந்தவரை தவிர்க்கப்படவுள்ளது. ஆவணப்படுத்தல், வளங்கள் சார்ந்த ஊடாடலுடன் நூலக நிறுவனச் செயற்பாடுகள் மட்டுப்பாடுத்தப்படும். விதிவிலக்காக நூலக நிறுவனத்தின் மாநாட்டு மலர்கள் போன்ற செயற்பாடுகள் சார்ந்த வெளியீடுகளுக்கு மட்டும் நூலக நிறுவன நிதி வளங்கள் பயன்படுத்தப்படும்.
இந்த நிகழ்ச்சித் திட்டம் சார்ந்து சேர்ந்தியங்க விரும்புவோர் noolahamfoundation@gmail.com ஊடாகத் தொடர்பு கொள்ளுங்கள்.