ஓலைச்சுவடி அறிமுகமும் பாதுகாப்பும்

Published on Author Noolaham Foundation

Christian_prayers_in_tamil_on_palm_leaves

     முனைவர் ஜெ. முத்துச்செல்வன்

 உலகில் மனித இனம் தோன்றி அவற்றின் படிப்படியான வளர்ச்சியின் காரணமாக மொழிகள் உருவாகின.  அம்மொழியானது தொடக்க நிலையில் ஒலிக்குறிப்புகளையும், அதற்கு அடுத்த நிலையில் பேச்சுமொழியையும், வளர்ந்த நிலையில்  இலக்கியங்களையும், வளர்ச்சியின் உச்சநிலையில் இலக்கணங்களையும் உருவாக்கி, தன் நிலையின் வளர்ச்சிப் படிநிலைகளைப் பதிவு செய்கின்றது.  இவ்வாறு உலகில் தோன்றிய பழமையான மொழிகளுள் ஒன்று தமிழ்மொழி.  இம்மொழியின் தோற்றம்,  ஆதிவடிவம் போன்றவற்றை அறியமுடியவில்லை.  ஆனால் கி.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்த தமிழ் எழுத்துகளின் வடிவம் காலத்திற்குக் காலம் மொழியின் வடிவத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்குத் தக்க மாற்றம் பெற்று இன்றைய எழுத்து வடிவத்தை அடைந்துள்ளதைக் கல்வெட்டு களையும், செப்புப் பட்டயங்களையும் ஆதாரமாகக் கொண்டு விளக்கப் பட்டுள்ளதே தவிர ஓலைச்சுவடிகளை ஆதாரமாகக் கொண்டு யாரும் வெளிப்படுத்தவில்லை என்பதை, “கி.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ் எழுத்துக்கள் காலந்தோறும் எப்படி மாறித் தற்போதைய உருவம் பெற்றன என்பதைச் சா. கணேசன் இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டில் வெளியிட்டுள்ள கையேட்டில் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்.  கல்வெட்டுகளில் காணப்பெறும் எழுத்துக்களையே இவர் இவ்வாறு ஆராய்ந்துள்ளார்.  பின்பு செப்புப் பட்டயங்கள் போன்றவற்றிலமைந்துள்ள மொழிவடிவம் அறிஞர்களால் ஆராயப்பெற்றது.  ஆனால் ஓலைச் சுவடிகளிலமைந்து வந்துள்ள வடிவத்தினை ஆராய்ந்து யாரும் வெளிப்படுத்திலர்” (சுவடிப்பதிப்புத்திறன்  – 2, ப.191) என்று மு.கோ. இராமன் குறிப்பிட்டுள்ளார். இதற்குக் காரணம் கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றவை நீண்டகாலம் அழியாமல் இருத்தலும், சுவடிகள் சுமார் 300-400 ஆண்டுகளில் அழிந்து விடுவதால் பழங்காலச் சுவடிகள்  கிடைக்கப் பெறாமையுமாகும்.

மனித இனம் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப்பின் கருத்துப் பரிமாற்றத்திற்காகப் பயன்பட்ட மொழியானது, அவர்கள் குழுவாக வாழத் தொடங்கிய காலத்தில் உணவுத் தேடலுக்காகவும், பிற தேவைகளுக் காகவும் பல இடங்களுக்குச் சென்று திரும்பும்வரை தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைத் தன் குழுவினருடன் பகிர்ந்துகொள்ள முயன்றபோது பேச்சு மொழியாக உருவாகியது.  பேச்சு மொழியின் வளர்ச்சியே பின்னாளில் இலக்கியங்களும், இலக்கணங்களும் தோன்ற அடிப்படையாக அமைந்துள்ளது.

தொடக்க காலத்தில் இலக்கியங்கள் வாய்மொழியாக இருந்ததால் அவற்றை மனப்பாடம் செய்வதற்காகவும், பிறருக்குக் கற்றுக்கொடுப்பதற்கு எளிமையாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் எதுகை, மோனைகளுடன், அந்தாதி அமைப்பிலும் அமைத்திருந்தனர்.

பழங்காலத்தில் ஆசிரியர் தான் இயற்றிய நூலையோ, ஆசிரியரிடம் அவர் கற்ற நூலையோ வாய்மொழியாகப் பாடம் சொல்லுவார்.  பாடம் கேட்கும் மாணவர் அவற்றைத் தம் மனத்தில் நிறுத்தி மனப்பாடம் செய்து அவரின் மாணவருக்கு வாய்மொழியாகப் பாடம் சொல்லிக் கொடுப்பார்.  இவ்வாறு பாடம் சொல்லிக்கொடுத்ததை, “நக்கீரர் செய்த களவியல் உரையைத் தம் மகனார் கீரங்கொற்றனாருக்கு உரைத்தார். கீரம் கொற்றனார் தேனூர் கிழாருக்கு உரைத்தார் … ’’ (கல்வெட்டு ஓர் அறிமுகம், ப.27) என்ற வரிகள் உறுதி செய்கின்றன.

வாய்மொழி இலக்கியங்களின் வகைகள் அதிகமாகப் பெருகியதால் அவற்றை வகைப்படுத்த இலக்கணங்கள் உருவாகின.

தனக்குத் தெரிந்தவற்றை அழியாமல் பதிவுசெய்து பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது தோன்றியதோ அப்போதுதான் எழுத்துவடிவம் தோன்றியது எனலாம். எழுத்துகள் கோடுகளாக, குறியீடுகளாக, படங்களாக இருந்து பின் படிப்படியாக வளர்ந்து தற்போதைய எழுத்து வடிவமாக மாறின என்பதற்குப் பானை ஓடுகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றவை சான்றுகளாக உள்ளன.

பழங்காலத்தில் கல், களிமண் பலகை, உலோகத்தகடு, துணி, இலை, பனைஓலை, பூர்ஜ மரப்பட்டை, மரப்பலகை, தோல், மூங்கில் பத்தை போன்றவை எழுதப்படு பொருட்களாகப் பயன்பட்டன.  எகிப்தியர், கிரேக்கர், ரோமர், யூதர் முதலிய இனத்தவர் பண்டைக் காலத்தில் பேபரைஸ்தாளையும் விலங்குகளின் தோல்களையும் எழுதப்படுபொருளாகப் பயன்படுத்திய காலத்தில் நமது நாட்டவர் பனையோலையினால் செய்யப்பட்ட ஓலைச்சுவடிகளில் நூல்களை எழுதி வந்தனர். பனையோலையில் எப்பொழுது முதல் எழுதப்பட்டது என்று கூற இயலாது.  பனை யோலைகளில் எழுதுவதற்கு எளிமையாக இருப்பதாலும் அவற்றைச் சரியான முறையில் பராமரித்து வந்தால் நீண்ட நாட்கள் அழியாமல் இருக்கும் தன்மை கொண்டதாலும் பனையோலைகள் பயன்படுத்தப் பட்டன. தென் கிழக்காசிய நாடுகள் பல ஓலையைப் பயன்படுத்தியிருப்பினும் அவற்றைப் பயன்படுத்தும் முறை தென்னிந்தியாவிலிருந்து பரவியிருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது.

தமிழர் மிகுதியாக ஓலையைப் பயன்படுத்த காரணம்

இலை, மரப்பட்டை, களிமண் பலகை போன்றவை விரைவில் அழியக் கூடியவை. மரப்பலகை, மூங்கில் பத்தை போன்றவற்றில் பெரிய நூல்களை எழுதிக் கையாளுவது கடினம். தோல், துணி, உலோகத்தகடு போன்றவை மிகுந்த பொருட்செலவினை உண்டாக்கும்.  பிற உயிர்களைக் கொன்று அவற்றின் தோலில் நல்ல கருத்துடைய நூல்களை எழுதுவது மனிதத் தன்மைக்கு முரண்பட்டதாகவும் அமைகிறது. அவற்றில் விரைவாக எழுதவும் முடியாது. கருங்கல் போன்ற பிறபொருள்களைப் பிற இடங்களுக்கு எடுத்துச் செல்வது கடினம். ஆனால் ஓலைச் சுவடியோ இரண்டு மூன்று நூற்றாண்டுகள் வரை அழியாத்தன்மை வாய்ந்தது.  மிகுந்த செலவு இல்லாதது, தமிழகத்தில் எல்லா இடங்களிலும் மிகுதியாகவும் எளிமையாகவும் கிடைக்கக் கூடியது. மிகப் பெரிய அளவுடைய நூல் களையும் ஒரு கட்டில் அடக்கக்கூடிய தன்மை வாய்ந்தது. பல இடங் களுக்கும் எடுத்துச் செல்வது எளிது. பாதுகாக்க ஏற்றது.  இக்காரணங்களால் தமிழர் ஓலைச்சுவடிகளைத் தேர்ந்தெடுத்து மிகுதியாகப் பயன்படுத்தினர் என்று சுவடியியல் (பூ. சுப்பிரமணியம்) என்னும் நூல் குறிப்பிடுகிறது.

சுவடி

ஓலைகளில் எழுத்துச் சுவடுப் பதியுமாறு ஆணிகளைக் கொண்டு எழுதப்பெற்ற ஏடுகளின் தொகுப்பு சுவடியாகின்றது. தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ் என்னும் பெயர்கள் புறத்துக் காழுடைய பனை, தெங்கு (தென்னை), கமுகு (பாக்கு) முதலியவற்றின் இலைகளைக் குறிக்கும் மரபுச் சொற்களாகும். இவற்றில் மடல், ஓலை என்ற பெயர்கள் கடிதவடிவில் எழுதப் பட்டவைகளையும், தனித்தனி ஏடாக எழுதப்பட்டவை ஏடு என்றும், ஏடுகளின் தொகுப்பு சுவடி என்றும் அழைக்கப்படுகிறது.

இக்கருத்தை வெளிப்படுத்தும் வகையில், ‘சுவடி’ என்னும் பெயர் காரணப்பெயராம். சுவடு உடையது சுவடியாகும்.  எழுதப்படுதலின் எழுத்து என்றார். அதுபோல எழுத்துச்சுவடு உடையது சுவடி எனப்பெற்றது.  பொதுநிலையில் எழுத்துகள் பதியுமாறு எழுதப்பெற்ற ஏடுகளின் தொகுப்பே ‘சுவடி’ என அழைக்கப்பெற்றது.

தமிழன் தன் கருத்துச் சுவட்டைப் பதித்த பொருளை முதலில்  ‘சுவடி’ என்றே அழைத்திருக்கவேண்டும்.

“பாட்டுப்புறம் எழுதிய கட்டமைச் சுவடி’’

என்பது பெருங்கதை (3 : 1 : 199-20)

“சுவடி என்பது இணை, கற்றை, கட்டு, பொத்தகம் என்னும் பெயர்களையும் பெறுகிறது.  பொருத்தி அழகு படுத்தலைச் ‘சுவடித்தல்’ என்பர். சுவடி-சோடி, சோடனை – அழகுபடுத்துதல் ஆம்.’’ (சுவடிப் பதிப்பியல்)

எழுதப்பெற்ற ஓலைகளின் சுவடிப்பே ‘ஓலைச்சுவடி’ ஆனது. தமிழில் ‘தோடு’, ‘மடல்’, ‘ஓலை’, ‘ஏடு’, ‘இதழ்’ ஆகிய சினைப்பெயர்கள்  ஆகுபெயர்களாய் எழுதப்பெற்ற சுவடிகளைக் குறிக்கின்றன.  இவற்றுள் பெரும்பாலும் கடித வடிவில் எழுதப்பெற்றவை தோடு, மடல், ஓலை என்ற பெயர்களைப் பெறுகின்றன. நூல் வடிவில் அமைந்தவை ‘ஏடு’ என அழைக்கப்பெறுகின்றன. எழுத்துச்சுவடிகளைத் தாங்கியுள்ள அவ்வேடு களின் தொகுதி ‘சுவடி’ எனப்பெற்றது. “கையால் எழுதப்பெற்ற படிவம் ‘சுவடி’ எனப்படும். எந்தப் பொருளிலும் எழுதப்பட்டதாக இருக்கலாம். எளிதாகவும் விரைவாகவும் எழுதக்கூடிய எழுது கருவிகளால் எழுதப் பெற்றதே சுவடியாகும். கல்லில் வெட்டுவது போன்ற கருவிகளைக் கொண்டு செதுக்கப்பெறும் கல்வெட்டுப் படிவங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டக்கூடியதே சுவடியாகும். மிகப் பழங்காலத்தில் அல்லது இடைக் காலத்தில் எழுதப்பெற்ற எழுத்துப் படிவங்களைக் குறிப்பதற்கே சுவடி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது’’ (சுவடியியல், பக்.8-9) என்று ஆங்கிலப் பேரகராதி கூறுவதைப் பூ. சுப்பிரமணியம் குறிப்பிடுகின்றார்.

‘சுவடி’ என்ற சொல்லானது நூல் என்ற பொருளில் வழங்கி வருகிறது என்பதை,

“நூல் என்ற பெயர் பொருட்சிறப்போடு உவமைக்குப் பெயராகவும், காரணக் குறியாகவும் பெருவழக்கில் இருந்து வருகிறது என்பது வெளிப்படை.  இவற்றைப் போலவே ‘சுவடி’ என்னும் சொல் நூலைக்குறித்து நிற்கும் காரணப் பெயராகி வழக்காற்றிலும் இருந்து வருகிறது என்பது தெளிவாகிறது’’ (சுவடியியல், ப.15) என்று பூ. சுப்பிரமணியம் குறிப்பிடுகிறார்.

எழுதப்பட்ட ஓலைகளின் தொகுப்பு ‘ஓலைச்சுவடி’ என்று அழைக்கப்பட்டு நாளடைவில் ‘ஓலை’ என்றும், ‘சுவடி’ என்றும் இரண்டு பெயர்களைப் பெற்று விளங்குகிறது.  பெயர்கள் வேறு வேறாக இருப்பினும் இப்பெயர்கள் குறிப்பிடும் பொருள் ஒன்றேயாகும். பழங்காலம் முதல் கல்வியாளர்கள் ‘ஓலை’ என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளனர்.  ஓலையில் எழுதப்பட்டிருக்கும் செய்திகளுக்குத் தக்கவும், வேறு காரணங்களினாலும் அதன் பெயர்கள் பல  வகைகளாக இருந்தன என்பதை, “ஓலைகள் பட்டோலை, பொன்னோலை, மந்திரஓலை, வெள்ளோலை, படியோலை என்று இலக்கியங்களிலும், அறையோலை, கையோலை, சபையோலை, இறையோலை, கீழ்ஓலை, தூது ஓலை, ஓலை பிடிபாடு என்று கல்வெட்டுகளிலும் பலவகைகளாகச் சொல்லப்பட்டுள்ளன” (சுவடிச் சுடர், ப.456) என்று சு. இராசகோபால் குறிப்பிடுவதிலிருந்து அறியமுடிகிறது.

சுவடி தயாரித்தல்

பனை மரத்தில் உள்ள ஓலைகளில் அதிக முற்றலும், அதிக இளமையதும் இல்லாமல் நடுநிலையில் உள்ளவற்றைத் தேர்ந்தெடுத்து (இவை நீண்ட நாட்கள் அழியாமல் இருக்கக் கூடியவை), அவற்றைத் தனித்தனியாகப் பிரித்து நரம்பு நீக்கித் தனக்குத் தேவையான அளவு நறுக்கி எடுப்பர்.  இதனை ‘ஓலைவாருதல்’ என்பர்.  ஒத்த அளவாக உள்ள ஓலைகளை ஒன்று சேர்த்தலைச் ‘சுவடி சேர்த்தல்’ என்பர். பனை ஓலைகளின் மேற்பரப்பு கடினமானதாக இருப்பதால் பதப்படுத்தாமல் ஓலைகளில் எழுத முடியாது.  அவற்றை எழுதுவதற்குத் தக்க மிருதுவாக்க வேண்டும். அப்போதுதான் எழுதுவதற்கு எளிதாகவும் சேதமுறாமலும் இருக்கும்.  பதப்படுத்துவதால் ஓலைகள் விரைவில் அழியாமலும், பூச்சிகளால் அரிக்கப்படாமலும் பாதுகாக்கப்படுகின்றன. அதனால் எழுதுவதற்காக  வெட்டப்பட்ட ஓலைகளைப் பதப்படுத்த நிழலில் உலர்த்தல், பனியில் போட்டுப் பதப்படுத்தல், வெந்நீரில் போட்டு ஒரு சீராக வெதுப்பி எடுத்தல், சேற்றில் புதைத்தல் போன்ற பல முறைகளைக் கையாண்டுள்ளனர்.

சுவடிகள் எவ்வாறு தயாரித்துப் பதப்படுத்தப்பட்டன என்பதை, “சுவடிகள் தயாரிப்பதற்கு முதலில் பனையோலைகளைத் தேவையான அளவில் கத்தரித்துக் கொள்வர். இவ்வாறு அளவு செய்து கொள்ளப்பட்ட ஏடுகள் மிக நன்றாக உலர்த்தப்படும்.   சற்றும் ஈரமின்றி நன்றாகக் காய்ந்த பிறகு இவ்வோலைகள் தண்ணீரில் இட்டு வேகவைக்கப்படும்.  இவ்வாறு இவை கொதிக்க வைக்கப்படுவதால் ஏடுகளில் ஒரு துவள்வு ஏற்படுகிறது. பிறகு ஓலைகள் மறுபடியும் நன்கு காயவைக்கப்படும், காய்ந்த பிறகு கனமான சங்கு  அல்லது மழுமழுப்பான கல்கொண்டு ஓலைகளை நன்றாகத் தேய்ப்பார்கள்.   இப்படிச் செய்வதால்  ஏட்டிற்கு ஒரு பளபளப்பு ஏற்படும். மேலும் நேராகத் தகடுபோல ஆகிவிடும். இப்போது ஏடு எழுதுவதற்கு ஏற்ற நிலையை அடைந்து விட்டது.   இம்முறைக்கு ஏட்டைப்பாடம் செய்தல் அல்லது பதப்படுத்துதல் என்று பெயர்’’ (சுவடிப் பதிப்புத் திறன்,2, ப.172) என்று தி. வே. கோபாலய்யரும்,

“ஓலையைப் பதப்படுத்த பலமுறைகள் பயன்படுத்தப்பட்டன.  அவற்றுள் சில முறைகள்,

அ.   ஓலைகளைத் தண்ணீர் அல்லது பாலில் வேகவைத்தல்,

ஆ.   நீராவியில் வேகவைத்தல்,

இ.   ஈரமணலில் புதைத்து வைத்தல்

ஈ.   நல்லெண்ணெய் பூசி ஊறவைத்தல்

உ.   ஈரமான வைக்கோற் போரில் வைத்திருத்தல்

சில முறைகளில் ஓலைகளின் மேல்பரப்பு மிருதுவானதுடன் அதில் உள்ள லிக்னின் என்ற பொருள் வெளியேற்றப்படுகிறது.  இதனால் ஓலைகள் விரைவில் சிதலமடைவதில்லை.  ஒரிசாவில் பாதுகாப்பிற்காக மஞ்சள்நீர் அல்லது அரிசிக்கஞ்சியில் அரைமணி நேரம் ஊறவைத்துப் பதப்படுத்தினர்’’ (சுவடிச்சுடர், ப.429) என்று ப. பெருமாளும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பதப்படுத்திய சுவடிகளில் ஒன்று அல்லது இரண்டு துளைகளிடுவர்.  இதனை ‘ஓலைக்கண்’ என்பர். ஒரு துளையில் கயிற்றை நுழைப்பர். கயிறு உருவாமலிருக்க ஈர்க்குடன் உள்ள ஓலையில் இரண்டு முக்கோணங்கள் உள்ளதாக கிளிமூக்குப் போலக் கத்தரித்துக் கட்டியிருப்பர்.  இதற்கு ‘கிளிமூக்கு’ என்று பெயர்.  மற்றொரு துளையில் ஒரு குச்சி அல்லது ஆணியைச் செருகியிருப்பர்.  இதற்குச் ‘சுள்ளாணி’ என்று பெயர்.  சுவடிகளுக்கு மேலும் கீழும் மரத்தாலான சட்டங்களை வைத்துக் கிளிமூக்குக் கட்டப்பட்ட கயிற்றினால் சுவடியை இறுக்கிக் கட்டி வைப்பர்.  இவ்வாறு சுவடி தயாரித்துப் பதப்படுத்தப்படுகிறது.

சட்டங்களின் அமைப்பு

மருத்துவச் சுவடிகள் பலவற்றின் சட்டங்களில் இலைச்சாறு, மஞ்சள், சுண்ணாம்பு போன்ற பொருள்களால் ஆக்கப்பட்ட பலவகை வண்ணங்களால் மூலிகைகளின் படங்கள் வரையப் பெற்றுள்ளன.  இராமாயணம் எழுதப்பட்ட சுவடியின் சட்டத்தில் நாமம், சங்கு, சக்கரம் ஆகிய உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.  சட்டங்கள் மரம், தந்தம் போன்ற பொருள்களில் செய்யப்பட்டுள்ளன.

சுவடிக் கட்டின் அமைப்பு

சுவடியின் முன்னும் பின்னும்  முதுகுநரம்பு நீக்கப்படாத சட்டங்கள் சிலவற்றை அமைத்துச் சுவடிக் கட்டினை உருவாக்குவர்.  மரம்  மற்றும் தந்தத்தால் சட்டங்களை அமைப்பதும்  தொடர்ந்து இருந்து வந்துள்ளது.  ஓலைச் சட்டம், மரம்,  தந்தங்களின் சட்டங்களிட்டுக் கட்டிய சுவடியினை அழகிய துணியில் சுற்றிவைக்கும் முறையும் இருந்துள்ளது.  அழகான நூல்கயிறு அல்லது பட்டுக்கயிறு போன்றவை சுவடியின் ஏடுகளைச் சிதறாமல் பாதுகாத்து நிற்கும். ஒரு துளையில் கயிறு இருப்பதுபோல் மற்றொரு துளையில் குச்சியோ, ஆணியோ நின்று மேலும்  அக்காவலைப் பலப்படுத்தும், இரு முக்கோணங்கள் இணைந்தாற்போல வெட்டப்பட்ட, நரம்போடு கூடிய, கிளிமூக்கு என்னும் ஓலைத்துண்டு கயிற்றின் நுனியில் கட்டப்பெற்றுக் கயிறு கழன்று வராதபடி பாதுகாக்கும்.  துளையிடப்பெற்ற செப்புக்காசு, உலோகத்தகடு ஆகியவை கிளிமூக்கிற்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டன.

எழுத்தாணி

ஓலைகளில் எழுதுவதற்குப் பயன்பட்ட எழுதுபொருள் எழுத்தாணி எனப்பட்டது.  ஓலைகளில் எழுத்தாணி கொண்டு கீறி எழுதும் முறை மிகப்பழமையானது.  இதற்குப் பயன்பட்ட எழுத்தாணிகள் எலும்பு, தந்தம், பித்தளை, செம்பு, இரும்பு, தங்கம் போன்றவற்றினால் செய்யப் பட்டிருந்தன. தந்தத்தை எழுத்தாணியாகப் பயன்படுத்தி எழுதினர் என்பதை, “மகாபாரதத்தை வியாசமுனிவர் சொல்ல விநாயகப் பெருமான் எழுதியதாகப் புராணங்கள் கூறுகின்றன.  இதில் அவர் எழுதிய எழுத்தாணி தேய்ந்து போனதால் தன்னுடைய கூரிய தந்தத்தை ஒடித்து எழுதியதாகக் கூறப்படுகிறது.  இதிலிருந்து தந்தங்களின் கூரிய முனையால் எழுதப்பட்டது என அறியமுடிகிறது’’ (சுவடிச்சுடர், ப.430) என்று ப. பெருமாள் குறிப்பிட்டுள்ளார்.

சுவடிகளில் எழுதப் பயன்பட்ட எழுத்தாணிகளை மூன்று வகைகளில் அடக்கலாம். அவை, 1. குண்டெழுத்தாணி, 2. வாரெழுத்தாணி, 3. மடக்கெழுத்தாணி என்பனவாகும்.

குண்டெழுத்தாணி

குண்டெழுத்தாணி என்பது அதிக நீளம் இல்லாமல் கொண்டை கனமாகவும் குண்டாகவும் அமைந்திருக்கும்.  இதைத் தொடக்க நிலையில் எழுதுபவர்கள் பயன்படுத்துவர். இதன் கூர்மை குறைவாக இருக்கும். இதனைக் கொண்டு பெரிய எழுத்துகளைத்தான் எழுதமுடியும்.

வாரெழுத்தாணி

வாரெழுத்தாணி என்பது குண்டெழுத்தாணியைவிட நீளமானது.  மேற்புரத்தில் கொண்டைக்குப் பதிலாகச் சிறிய கத்தி அமைந்திருக்கும்.  இக்கத்தி தனியாக இணைக்கப்படாமல் ஒரே இரும்பில் நுனிப்பக்கம் கூர்மையாகவும், மேற்பக்கம் தட்டையாகக் கத்தி வடிவிலும் அமைந்திருக்கும். நுனிப்பக்கம் எழுதவும் மேற்பக்கம் ஓலைவாரவும் பயன்படுவதால் இது வாரெழுத்தாணி என்று அழைக்கப்படுகிறது. நன்றாக ஓலையில் எழுதும் பழக்கமுடையவர்கள் தாங்களே அவ்வப்போது ஓலையினை நறுக்கி, வாரி ஒழுங்குபடுத்தி ஏடுகளாக அமைத்துக் கொள்ளும் நிலையில் இவ்வெழுத்தாணியினைப் பயன்படுத்தினர்.  இவ்வெழுத்தாணியே பலராலும் பயன்படுத்தப்பட்டது. இவ்வெழுத்தாணியைப் பனையோலையினால் செய்த உரையில் செருகி வைத்திருந்தனர்.

மடக்கெழுத்தாணி

மடக்கெழுத்தாணி என்பது வாரெழுத்தாணியைப் போன்று ஒரு முனையில் எழுத்தாணியும், மறுமுனையில் கத்தியும் அமைந்திருக்கும்.  ஆனால் இரண்டு பகுதிகளையும் மடக்கி இடையில் உள்ள கைப்பிடியில் அடக்கிக் கொள்ளுமாறு அமைந்திருக்கும். மடக்கிவைக்கும் தன்மை கொண்டதால் இது மடக்கெழுத்தாணி என்று அழைக்கப்படுகிறது. இதன் கைப்பிடி மரம், மாட்டுக்கொம்பு, தந்தம், இரும்பு, பித்தளை போன்றவற்றால் செய்யப்பட்டிருக்கும். இவ்வெழுத்தாணியைப் பயன்படுத்தாதபோது மடக்கிவைப்பதால் பாதுகாப்புடையதாக இருந்தது.

சுவடியில் எழுதும் முறை

பழங்காலத்தில் தற்காலத்தில் உள்ளதுபோன்று கல்விக் கூடங்களில் கல்வி கற்பிக்கப்படவில்லை. மாணவர்கள் ஆசிரியரைத் தேடிச் சென்று கல்வி கற்கும் முறை இருந்தது. அக்காலத்தில் காகிதமும் எழுதுகோலும் வழக்கிற்கு வரவில்லை.  ஓலைகளில் எழுத்தாணியால் எழுதித் தொகுத்த சுவடிகளே நூல்களாக இருந்தன. அப்போதைய மாணவர்களுக்கு மணல் கரும்பலகை (சிலேட்) யாகவும், பனைஓலை புத்தகமாகவும், விரலும் எழுத்தாணியும் எழுதுகோலாகவும் (பேனா) இருந்தன.

ஆசிரியர் முதலில் மாணவரின் வலக்கை ஆள்காட்டி விரலைப் பிடித்து தட்டில்  பரப்பி வைத்துள்ள அரிசி (அ) சர்கரை (அ) தானியங்களில் எழுத்தை எழுதிக்காட்டுவார். பின்னர் மணலில் எழுத்தின் வரிவடிவை எழுதிக்காட்டுவார்.  பிறகு அவர் சொல்லிய தமிழ் எழுத்துக்களைத் தவறின்றிச் சரியாக உச்சரிக்கவேண்டும்.  தமிழின் ஒலி வடிவை நன்றாகச் சொல்லத் தெரிந்த பின்புதான் ஆசிரியர் எழுத்தின் வரிவடிவை  ஓலையில் வரைந்து காட்டுவார்.  வரிவடிவை மாணவர் நன்றாக எழுத அறிந்து கொண்டதன் பின் ஓலை வாரவும், சுவடி சேர்க்கவும், நன்றாக எழுதவும் முற்படுவர்.

பனை ஓலைகளில் எவ்வாறு எழுதப்பட்டது என்பதை, “இளமை முதலே ஓலையை இடக்கையில் பிடித்து,  வலக்கையால் எழுத்தாணியைக் கொண்டு எழுதிப் பழகுவர்.  எழுத்தாணியைப் பிடித்து எழுதும்போது ஓலையைத் தான் நகர்த்துவர்.  எழுத்தாணி பிடித்த இடத்திலிருந்தே வரையும், தற்போது தட்டச்சு முறையிலும் தாள்மீது அச்செழுத்துப் படிந்து, தாள்தான் நகர்ந்து போகிறது. அச்செழுத்து மையத்தில் மட்டும் அழுந்துகிறது. வேறு இடங்களுக்கு அது அசைவதில்லை என்ற நுட்பம் இச் சந்தர்ப்பத்தில் அறிந்து ஒப்புநோக்கத் தக்கதாகும். ஏடு எழுதப்பழகிக் கொண்டோர் தமது இடக்கைப் பெருவிரல் நகத்தை வளர்த்து, அதில் பிறைவடிவில் துளையிட்டு, அப்பள்ளப் பகுதியில் எழுத்தாணியை வைத்து, ஓலையில் வரிவரியாக எழுத்தின் மீது மற்றோர் எழுத்துப் படாமலும் ஒரு வரியின் மீது மற்றோர் வரி இணையாமலும் போதிய இடம்விட்டு எழுதுவர்.  ஒருபக்கத்தில் மிக நுண்ணிய எழுத்துகளாக இருபது, முப்பது  வரிவரையில் எழுதுவதற்குரிய மெல்லிய எழுத்தாணியையும் பயன்படுத்துவதுண்டு.  இக்காலத்தில் தாளில் எழுதுவதைப் போன்ற வேகத்துடன் முற்காலத்தில் ஏட்டில் எழுதுவதும் உண்டு. இப்படி வேகமாய் எழுதுபவர்க்கு ‘எழுத்தாளர்’ என்று பெயர்’’ (அச்சும் பதிப்பும், பக்.95-96) என்று மா.சு. சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு ஓலைகளில் எழுதப்பட்ட எழுத்துகள் சரியாகத் தெரிவதற்காக ஓலையின் மீது மஞ்சள் அரைத்துப் பூசுதல், வசம்பு, மணித்தக்காளி இலைச்சாறு, கோவை இலைச் சாறு, ஊமத்தை இலைச்சாறு, மாவிலைக்கரி, அருகம்புல்கரி, விளக்குக்கரி போன்றவற்றைப் பூசி எழுத்துகளை வாசித்துள்ளனர். இதற்கு ‘மையாடல்’ என்று பெயர்.

இம் மையாடலைப் பற்றி,

‘‘மஞ்சற் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்

மிஞ்சப் புகட்ட மிக வளர்ந்தாய்’’  (கண்ணி – 25)

என்று ‘தமிழ் விடுதூது’ என்ற நூல் குறிப்பிட்டுள்ளது. இம் மையாடலினால் ஓலையில் உள்ள எழுத்து தெளிவாகத் தெரிவதோடு கண்ணிற்குக் குளிர்ச்சியை உண்டாக்கி, ஓலைகளைப் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கிறது.

மேற்கண்டவற்றின் மூலம் சுவடிகளில் எழுதப் பயிற்சியெடுத்தல், சுவடிகளில் எழுதுதல், அவற்றிற்கு மையிடுதல் போன்றவை மூலம் சுவடிகளில் எழுதி வாசித்து வந்தனர் என்பதை அறியமுடிகிறது.

சுவடியின் எழுத்து முறை

சுவடிகளில் எழுதப்பட்டிருக்கும் முறைகள் தற்காலத்தில் எழுதுவது போன்று இல்லாமல் மாறுபட்டுக் காணப்படுகின்றன.  காலங்காலமாகச் சுவடிகளைக் கற்றும், எழுதியும் வந்தவர்கள் தாள்கள் வந்த பின்னும் சுவடியில் எழுதுவது போன்றே எழுதியுள்ளனர் என்பதை தி.வே. கோபலய்யர் கீழ்க்காணுமாறு குறிப்பிடுகிறார். “பாடலடிகள் ஏட்டுச் சுவடிகளில் தனித்தனியே பிரித்துணரும் வகையில் பொறிக்கப்படமாட்டா.  சிக்கனம் கருதி முழுப்பாடலும் ஒரே தொடராக மடக்கிப் பொறிக்கப்பட்டுப் பாடல் முடிந்தவுடன் அப்பாடலின் எண் குறிக்கப்பட்டிருக்கும்.  தமிழ்மொழிக்கே சிறப்பாக உள்ள எதுகையே அப்பாடலின் அடிகளைப் பகுத்துணர உதவி செய்யும்.  சுவடிகளில் மெய்யெழுத்துக்கள் புள்ளியிடப் பெறமாட்டா. ரகரமும்  உயிர்மெய் ஆகாரம் ஓகாரம் இவற்றைக் குறிக்க இணைக்கப்படும் கால்களும் ஒன்று போலவே இருக்கும்.  எகர ஒகரங்களுக்குரிய  ஒற்றைக் கொம்பே ஏகார ஓகாரங்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும். ஏட்டுச் சுவடியில் எழுதிப் பழகியவர்கள் இந்தச் செய்திகளைத் தாமேயும் பின்பற்றியதனால் ஏனைய ஏட்டுச் சுவடிகளை வாசிப்பதிலும் படியெடுப்பதிலும் அவர்களுக்கு அதிகத் தொல்லை ஏற்படவில்லை.  ஏட்டுச் சுவடிகளையே வாசித்தும் படியெடுத்தும் வந்த செந்திநாதய்யர் காகிதத்திலும் ஏட்டுச் சுவடிகளில் வரைவது போலவே வரைந் துள்ளமையின், அக்காகிதங்களை வாசிப்பதன்கண், ஏட்டுச் சுவடியை வாசிப்பதன் கண் உள்ள சிரமத்தின் பெரும்பாகம் உண்டாகிறது’’ (சுவடிப்பதிப்புதிறன் – 2, பக்.159-160)

சுவடிகளில் எழுதும்போது பொருண்மைக்குத்தக்க சில மாற்றங்களுடன் காணப்பட்டன என்பதை சு. இராசகோபால் கீழ்க்காணுமாறு குறிப்பிடுகிறார்.

“தமிழகத்தில் கிடைக்கும் ஓலைச் சுவடிகள், இலக்கியம், மருத்துவம், மாந்திரியம், சோதிடம், சமயம், வணிகம், ஆவணங்கள், பள்ளி மாணவர்களுக்கான அரிச்சுவடி, எண் சுவடி என்ற வகைகளில் அடங்கிவிடக் கூடியவை. பொதுவாக எல்லாச் சுவடிகளும் ஒரேமாதிரியாக இருந்தாலும் ஒவ்வொரு வகை ஓலைச் சுவடியிலும் ஒவ்வொருவகையில் எழுதும் முறை தனித்துவம் பெற்றிருக்கும்.  இலக்கியச் சுவடிகளில் பாடல்களின் முடிவில் எண்களைக் காணலாம்.  இடதுபுற ஓரங்களில் அத்தியாயத் தலைப்புப் பெயர்களைக் காணலாம்.  மாந்திரிகச் சுவடிகளில் பலவகைச் சக்கரங்களின் (இயந்திரம்) படங்களைக் காணலாம். சோதிடச் சுவடிகளில் ராசி சக்கரங்களைக் காணலாம். வணிகச் சுவடிகளில் பல்வேறு எண்களையும், குறியீடுகளையும் காணலாம். பள்ளிச் சுவடிகளில் பக்கவாட்டில் மூன்று நான்கு பத்திகள் பிரித்து எழுதப்பட்டுள்ளதைப் பார்க்கலாம்’’ (சுவடிச் சுடர், ப.458).

தொடக்க காலம் முதல் சுவடிகளில் செய்யுள் வடிவிலேயே எழுதி வந்தனர். செய்யுள் வடிவிலுள்ளவற்றை அனைவராலும் படிக்க இயலாது. அதனால் பல சுவடிகள் படிப்பாரற்றுக் கிடந்தன. இந்நிலை மாறவேண்டும் என்று நினைத்து எழுதத் தொடங்கியதன் விளைவாக கி.பி.15ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு உரைநடையில்  எழுதும் பழக்கமும், உரைநடை யுடன் ஓவியத்தை இணைத்து எழுதும் பழக்கமும் தோன்றியது என்பதை, “பாடல் வடிவில் எழுதப்பெற்ற புராணச் சுவடி நூல்களைப் பாமரரும் அறியும் வகையில் வசனமாக (உரைநடையில்) எழுதும் முறையை கி.பி.15ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு கைக் கொண்டனர்.  வசன நடையில் மட்டும் சுவடியில் எழுதுவதைத் தவிர்த்து, எழுத்தோடு ஓவியத்தையும் இணைத்துப் புதுமை படைத்தனர்” (சுவடிச் சுடர், ப.378) என்று குடவாயில் பாலசுப்பிரமணியன் குறிப்பிடுவதால் அறியமுடிகிறது.

சுவடிகளில் ஓவியம்

பனை ஓலைகளில் எழுதுவது கடினமான பணியாகும்.  அதைவிடக் கடினமானது பனை ஓலைகளில் எழுத்தாணிகளைக் கொண்டு ஓவியம் வரைவது. ஓலைகளில் ஓவியம் வரையும் பழக்கம் இருந்தது என்பதற்கு, “பனை ஓலைகளில் அரிதின் முயன்று எழுத்தாணி கொண்டு சில கோட்டோவியங்களை வரைந்துள்ளனர்.  இத்தகைய ஓவிய ஏடுகளில் சில தஞ்சை அரண்மனை நூலகத்திலுள்ளன.  திருவாய்மொழி வாசகமாலை எனும் சுவடி நூலில் கிடந்தகோலத்திருமாலின் வரைகோட்டோவியம் காணப் பெறுகின்றது. அதுபோன்றே வடமொழிச் சுவடிகளில் பலவகை யான பூ வேலைப் பாட்டோவியங்கள் காணப்பெறுகின்றன’’ (சுவடிச் சுடர், ப.382) என்ற வரிகள் சான்றுகளாக அமைந்துள்ளன.  இதுபோன்று பலவகையான சுவடிகளில் ஓவியங்கள் காணப்படுகின்றன.

பொன்னோலை

பொன்னோலை என்பது தங்கத்தினால் செய்யப்பட்ட ஓலையாகும். பனை ஓலையில் எழுதுவது போன்றே இவ்வோலையிலும் எழுதியுள்ளனர் என்பதை, “பனை  ஓலை எவ்வாறுள்ளதோ அதேபோன்று தங்கத் தகட்டை நீட்டி அதில் ஏடுகளில் எழுதுவது போன்று எழுதி அனுப்பப்பெற்ற மூன்று அரிய தமிழ் மடல்கள் ஹாலந்து நாட்டுக் கோபன்ஹேகன் அருங்காட்சியகத்தில் உள்ளன.  தஞ்சை மன்னன் இரகுநாத நாயக்கர் டென்மார்க் அரசர் ஐந்தாம் கிருஸ்டியனுக்கும், தரங்கம்பாடி ராமநாயக்கன் மற்றும் அவ்வூர் மக்கள் ஆறாம் கிருஸ்டியனுக்கு எழுதிய கடிதங்களே இப்பொன்னோலைகளாகும்.  இரகுநாத நாயக்கரின் கடிதம் தமிழில் எழுதப்பெற்று இறுதியில் அவரது கையொப்பம் தெலுங்கில் காணப்பெறுகின்றது.  இவ்வேட்டில் ஹாலந்து நாட்டை உலந்தீசு என்றும், ரோலண்ட்கிரேப்  என்பான் பெயரை ரூலங்கலப்பை என்றும், ஜெனரல் என்பதை சென்னரல் என்றும் தமிழில் எழுதியுள்ளது சுவை பயப்பதாகும்’’ (சுவடிச்சுடர், பக்.381-392) என்று குடவாயில் பாலசுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார். மேலும் இக்குறிப்பின் மூலம் இவ்வோலை எழுதும் காலத்தில் பிறமொழிச் சொல்லைத் தமிழ்ப் படுத்தி எழுதும் வழக்கம் இருந்தது என்பதையும் அறியமுடிகிறது.

சுவடிகளின் வடிவமைப்பு

சுவடிகளின் வடிவமைப்பு என்பது சுவடிகளின் புறவடிவங்களைச் சுட்டிக் கூறுவதாக அமைந்துள்ளது.  நமக்குக் கிடைக்கக்கூடிய சுவடிகள் பல வடிவங்களில் காணப்படுகின்றன.  அவற்றில் சிறிய, பெரிய சுவடிகள், பம்பர வடிவச் சுவடி, சிவலிங்க வடிவச் சுவடி ஆகியவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.  அரசினர்க் கீழ்த்திசைச் சுவடிநூலகச் சுவடிகள் இதற்கு எடுத்துக் காட்டாக கையாளப்பட்டுள்ளன.

சிறிய சுவடி

சுவடிகளில் நீள, அகல, எண்ணிக்கைகளில் குறைந்த அளவுகளை உடையனவற்றைச் சிறிய சுவடி என்று அழைக்கலாம்.  இதற்குச் சான்றாக சென்னை அரசினர்க் கீழ்த்திசைச் சுவடி நூலகத்திலுள்ள ‘கரிநாள் விளக்கம்’ என்னும் சுவடியைக் கொள்ளலாம். இச்சுவடி எட்டு செ.மீ. நீளமும், முக்கால் செ.மீ. அகலமும் உடையது. பதினாறு ஏடுகளை உடைய அச்சுவடியில் பக்கத்திற்கு இரண்டுவரிகள் மட்டும் எழுதப்பட்டுள்ளன. வேறு இடங்களில் இதைவிடச் சிறிய சுவடி கிடைப்பதற்கான வாய்ப்புண்டு.

பெரிய சுவடி

சுவடிகளின் நீள, அகல, எண்ணிக்கைகளில் அதிக அளவுகளை யுடையனவற்றைப் பெரிய சுவடி என்று அழைக்கலாம். இதற்குச் சான்றாகச் சென்னை அரசினர்க் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் உள்ள கந்தபுராணச் சுவடியைக் கொள்ளலாம். இச்சுவடி ஐம்பது செ.மீ. நீளமும், நான்கு செ.மீ. அகலமும் கொண்டது. இச்சுவடி ஆயிரத்து நூற்று எண்பத்திரண்டு பக்கங்களைக் கொண்டுள்ளது. இதில் ஒரு பக்கத்திற்கு பத்து வரிகள் காணப்படுகின்றன. வேறுஇடங்களில் இதைவிடப் பெரிய சுவடிகள் இருப்பதற்கான வாய்ப்புள்ளது.

பம்பர வடிவச் சுவடி

ஓலைகளை வட்டவடிவமாக நறுக்கி இடையே துளையிட்டுக் கோர்க்கப்படும் அவ்வட்டவடிவமான ஓலைகளின் குறுக்களவில் (விட்டம்) ஒன்றற்கொன்று  ஒரு ஓலையின் கன அளவு குறைவாக வெட்டப்பட்டுக் கோர்க்கப்படுவதால் அதன் முழுவடிவம் ஒரு ‘பம்பரம்’ போலக் காட்சியளிக்கும். இதற்குச் சான்றாக சுமார் நான்கு செ.மீ. விட்டத்தில் வட்டவடிவமாக நறுக்கி எழுதப்பட்டுள்ள  ‘திருமுருகாற்றுப்படை’  சுவடியைக் கொள்ளலாம்.

சிவலிங்க வடிவச் சுவடி

ஒரே அளவுடைய வட்டமாக ஓலைகளை நறுக்கி இடையில் துளையிட்டு இணைக்கப்பட்ட சிவலிங்க வடிவமானது,  நீண்ட சதுரத்தில் பல ஏடுகளால் ஆன பீடத்தின் மேல் பொருந்துமாறு துளையிட்டுக் கோர்க்கப்பட்ட சுவடியும் உண்டு. பீடமாக அமைந்த ஏடுகளிலும், சிவலிங்க வடிவிலான ஏடுகளிலும் திருவாசகம் எழுதிவைப்பதுண்டு.  திருமுருகாற்றுப்படை, திருவாசகம் ஆகிய பாடல்கள் எழுதப்பட்ட இச்சுவடிகளைப் பூசையில் வைத்து வழிபட்டனர்.

மேற்கண்டவற்றின் மூலம் சுவடிகளில் எழுதப்பட்டிருக்கும் பொருண்மைக்குத் தகவும், நூலின் அளவினைப் பொறுத்தும், ஏடெழுதுபவரின் கலை ஆர்வத்தைப் பொறுத்தும் சுவடிகளின் வடிவங்கள் மாறுபட்டுக் காணப்பட்டன என்பதை அறியமுடிகிறது.

சுவடிகளின் அழிவு

பழங்காலத்தில் உருவாக்கப்பட்ட சுவடிகள் ஒரு காலத்திற்குப் பிறகு பாதுகாப்பின்றி அழியத் தொடங்கின. அவ்வாறு அழிந்ததற்கான காரணங்களை இரண்டு வகைகளில் அடக்கலாம். அவை, 1. இயற்கை அழிவு, 2. செயற்கை அழிவு என்பனவாகும்.

இயற்கை அழிவு

சுவடிகளுக்கு இயற்கையாக நிகழ்ந்த அழிவுகளை இயற்கை அழிவு எனக் கூறலாம். பொதுவாக ஓலைச் சுவடிகள் குறைந்த வாழ்நாள் கொண்டவை. கறையான், இராமபாணம், ஈரப்பதம், புகை, நெருப்பு ஆகியவற்றால் விரைவில் பாதிக்கக்கூடியவை. காற்று, மழை, வெயில், தீ ஆகிய இயற்கைச் சீற்றத்தில் சிக்கி அழியக்கூடிய தன்மை கொண்டவை.

சுவடிகள் கடல்கோளாலும் தீயாலும் பெரும்பான்மை அழிந்தன என்பதை, “தமிழுக்குக் காலாந்தரத்தில் இரண்டு பெரும் பூதங்களால் இரண்டு பெரிய இடையூறுகள் நிகழ்ந்தன. குமரியாறும் அதன் தெற்கின்கணுள்ள நாடுகளுஞ் சமுத்திரத்தின் வாய்ப்பட்டமிழ்ந்திய போது… கபாடபுரம் அதன்கண் இருந்த எண்ணாயிரத் தொரு நூற்று நாற்பத்தொன்பது கிரந்தங்களோடு வருணபகவானுக்கு ஆகமனமாயிற்று.  மறுபடியுந் தமிழ் தலையெடுத்தபோது நாடு முகமதியர் கைப்பட அவர்கள் கொறானுக்கு மாறாகவும் வீறாவதோ கிரந்தங்கள் மண்மேல் என்ற மத வைராக்கியங்கொண்டு அந்தோ! நமது நூற்சாலைகள் அனைத்தும் நீராக அக்கினி பகவானுக்குத் தத்தஞ் செய்தனர்’’ (தாமோதரம், ப.45) என்னும் சான்றோர் கூற்றினால் இயற்கைச் சீற்றத்தினாலும், மதத்தினரிடையே ஏற்பட்ட வைராக்கியத்தினாலும் சுவடிகள் அழிந்தன என்பதை அறியமுடிகிறது.

இவ்வாறு நீரினாலும் தீயினாலும் அழிவு ஏற்பட்டதோடு மட்டுமன்றிச் சுவடிகள் நாள்பட மட்கியும், பூச்சிகளால் அரிக்கப்பட்டும் அழிந்தன என்பதை, “நீரும் தீயும் வெளிப்பட நின்றழிப்பன, இவற்றைப் புறப்பகை எனலாம். இனி அகப்பகை இரண்டுண்டு, அஞ்சத்தக்கபகை அவையே எனினும் சாலும்.  கறையான் முதலிய பூச்சுகளின் அரிப்பும், துளைப்பும், ஒருபகை, ஏடுகள் நாட்பட நாட்பட மட்கி மடிந்து ஒழிவது மற்றொரு பகை’’ (சுவடிப் பதிப்பியல் வரலாறு, ப.34) என்று இரா. இளங்குமரன் குறிப்பிடுகிறார்.

சுவடிகள் கடல் கோளாலும், தீயினாலும், பூச்சிகளாலும், தானாக மட்கி அழிந்தனவற்றுள் சிலவே நமக்குத் தெரிகின்றன. பலகோடி சுவடிகள் அழிந்தவிதம் நமக்குத் தெரியாமலே போய்விட்டன. இவ்வாறு இயற்கைக்கேடுகள் ஒருபுறம் சுவடிகளை அழித்துக் கொண்டிருக்க மற்றொரு புறம் மனிதர்கள் அறியாமையால் சுவடிகளை அழித்ததைப் பற்றி இனி காண்போம்.

செயற்கை அழிவு

தமிழ்ச் சுவடிகள் இயற்கை அழிவுகளைவிடச் செயற்கை அழிவுகளாலேயே மிகுதியாக அழிந்தன என்று கூறலாம். இவ்வழிவுக்கு மன்னரிடையே நிகழ்ந்த போர், அரசியல் மாற்றம், மக்களின் குடிப்பெயர்ச்சி, வெளிநாட்டினருக்கு விற்றல், தீயிலிடுதல், நீரில் எறிதல், கவனமின்மை, பராமரிப்பின்மை போன்றவை காரணங்களாக அமைகின்றன.  இப்பகுதியில் நெருப்பிலும் நீரிலும் இடுதல், குதிரைக்கு வெந்நீர் போடுதல், காணாமல் போனவை,  அந்நியர்களால் ஏற்பட்ட அழிவுகள், மூடநம்பிக்கையால் ஏற்பட்ட அழிவுகள் ஆகியவற்றை  ஆராய்வோம்.

நெருப்பிலும் நீரிலும் இடுதல்

முற்காலத்தில் சமயங்களுக்கிடையே ஏற்பட்ட போட்டி, சமய மோதல்களின் காரணமாக என்னுடைய சமயம் உயர்ந்தது, உன்னுடைய சமயம் தாழ்ந்தது என்று கூறி வாக்குவாதம் ஏற்பட்டபோது சமயந் தொடர்பான நூல்களை எரியும் நெருப்பிலும், ஓடும் நீரிலும் போட்டுப் பரிசோதித்தனர். இதற்கு அனல்வாதம், புனல்வாதம் என்று பெயர். இருமதத்தினர்க்கிடையே ஏற்பட்ட சண்டை, பொறாமையின் காரணமாகப் பல சுவடிகள் நெருப்பிலும் நீரிலும் அழிக்கப்பட்டன. நாலடியார் என்ற நூலின் பாடல்களை எண்ணாயிரம் புலவர்கள் பாடியதாகவும் அவற்றை ஆற்றில் போட்டபோது நானூறு பாடல்கள் மட்டும் நீரின்போக்கிற்கு எதிராக வந்ததாகவும் அப்பாடல்களின் தொகுப்பே நாலடியர் என்றும் பேச்சு வழக்குக் கதை ஒன்று கூறுகிறது. இதுபோன்று அழிந்த பாடல்கள் எத்தனை எத்தனை ஆயிரங்களோ தெரியவில்லை.

குதிரைக்கு வெந்நீர் போடல்

சுவடிகளின் அருமை தெரியாத சிலர் குதிரைக்கு வெந்நீர் வைக்க அடுப்பெரிக்கும் பொருளாகச் சுவடிகளைப் பயன்படுத்தி அழித்துள்ளனர் என்பதை, “மதுரை மாநாட்டுக்குத் தலைவராய்ப் போந்திருந்த வேற்று நாட்டவர் ஒருவர் தேடித் தொகுத்திருந்த பழைய தமிழ் ஓலையேட்டுச் சுவடிகள், இருநூறு நாட்கள் குதிரைக்கு வெந்நீர் காய்ச்சுதற்குப் பயன்பட்டன என்பர்’’ (மதுரைக் குமரன், பக்.9-10) என்ற சு. துரைசாமிப் பிள்ளையின் கூற்றுவழி அறியமுடிகிறது.

காணாமற்போனவை

ஒரு இடத்தில் பார்த்தசுவடி, படித்த சுவடி சில நாட்கள் கழித்து அங்குச் சென்று பார்க்கும்போது அச்சுவடி அங்கு இருப்பதில்லை.  அது எங்கு, எப்படி காணாமற் போனது, என்ன ஆனது என்பது பற்றி யாருக்கும் தெரியாத நிலையில் பல சுவடிகள் அழிந்தன என்பதற்கு, “உ.வே.சா. அவர்கள் படித்த காலத்தில் திருவாவடுதுறை மடத்துப் புத்த சாலையில் ‘வளையாபதி’ என்னும் சுவடியைப் பார்த்திருக்கிறார். ஆனால் அவர் சுவடிப்பதிப்பில் ஈடுபட்ட போது அச்சுவடி கிடைக்கவில்லை. சி.வை.தாமோதரம் பிள்ளையவர்களுக்குச் சிறுவயதில் அவருடைய தந்தையார் சில நூல்களைக் கற்பித்தார். அவற்றைப் பிள்ளையவர்கள் பதிப்பிக்க எண்ணியபோது தமிழ் நாடெங்கும் தேடியும் அச்சுவடிகள் அவருக்குக் கிடைக்கவில்லை’’ (சுவடியியல், ப.60) என்ற வரிகளே சான்றாக அமைந்துள்ளன.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனச் சுவடிக் காப்பகத்தில் 1550 குறள்களைக்கொண்ட திருக்குறள் சுவடி இருப்பதாக அந்நிறுவனச் சுவடி விளக்க அட்டவணை குறிப்பிடுகிறது. ஆனால் தற்போது அச்சுவடி அங்கு இல்லை. அச்சுவடி எப்படி, யாரால் காணாமற்போனது என்று அறிய முடியவில்லை.

அந்நியர்களால் ஏற்பட்ட அழிவு

வெளிநாட்டினர் ஆய்விற்காகவும், வேறுசிலகாரணங்களுக்காகவும் நம் நாட்டிற்கு வந்து செல்லும்போது இங்குள்ள செல்வங்களைக் கொண்டு சென்றதுடன் பல ஓலைச் சுவடிகளையும் தம்மோடு கொண்டு சென்றனர்.  அச் சுவடிகளைப் பணத்திற்காக நம் நாட்டவர்களே அவர்களிடம் விற்றுள்ளனர் என்பதை,  “ஆராய்ச்சி செய்யும் மேலைநாட்டு அறிஞர்கள் இந்தியாவுக்கு வந்து களனாய்வுப் பணி செய்வது பெருவழக்காகி வருகிறது… சாதனப் பொருள்களைத் தேடுவதே இவர் களுடைய தலையாய நோக்கமாகும் … நகல்களுக்குப் பதிலாக அசல் நூல்களையே பெறமுயலுகின்றனர்… மேலும் இந்த முயற்சியில் அவர்களுடைய எண்ணம் ஈடேற நம் நாட்டுச் சூழ்நிலையும் ஓரளவு வாய்ப்பளித்து விடுகிறது. அவர்கள் தேவையறிந்து ஒத்துழைப்பதற்கென்றே ஆங்காங்கு வியாபாரிகளும் தரகர்களும் காத்திருக்கிறார்கள்.  இவர்களுக்குப் பொருளே குறிக்கோளாதலின்… அரிய பதிப்புகளையும் சுவடிகளையும் சேகரித்து அவர்களிடம் இரகசியமாக விற்று விடுகின்றனர்’’ (சுவடியியல், பக்.60-61) என்பர் அ. தாமோதரன் அவர்கள்.  தமிழரின் அறியாமை மட்டுமின்றி ஏழ்மை காரணமாகவும் சுவடிகள் அந்நியர்களுக்கு விற்கப்பட்டுள்ளன என்பதை இதன்மூலம் அறியமுடிகிறது.

மேலும், “இந்தியா வந்த வெளிநாட்டு யாத்திரிகர்கள் பலர் பல நூல்களைத் தங்கள் நாட்டிற்குக் கடத்திச் சென்றுள்ளனர்.  கி.பி.629-645இல் இந்தியா வந்த யுவான்சுவாங் மட்டும் 520 பெட்டிகளில் 657 வகையான நூல்களை எடுத்துச் சென்றதாகக் குறிப்புகள் கூறுகின்றன. கி.பி.964-976இல் சீனாவிலிருந்து இந்தியா வந்த 300 துறவிகள் ஏராளமான சமயச் சுவடிகளைக் கொடையாகப் பெற்றுச் சென்றதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. சென்ற நூல்கள் அனைத்தும் பாதுகாக்கப் பெற்றனவா என்றும் அறியக் கூடவில்லை’’ (சுவடிப் பதிப்பியல், பக்.275-276) என்ற குறிப்பிலிருந்து வெளிநாட்டவர்கள் இங்கிருந்து கொண்டு சென்ற நூல்கள் என்னவாயிற்று என்பதை அறியமுடியவில்லை. இவ்வாறு அந்நியர்களால் பல நூல்கள் அழிந்துள்ளன என்பது தெரியவருகிறது.

மூடப்பழக்கத்தினால் ஏற்பட்ட அழிவு

தமிழர்களின் மூடப்பழக்கத்தினால் நீரிலும் நெருப்பிலும் பல சுவடிகள் அழிந்தன என்பதை இரா. இளங்குமரன் குறிப்பிடுவதாவது: “நாட்பட்ட ஏடுகள் நொறுங்கியும் முறிந்தும் சிதைந்தும் போதல் இயற்கை ஆதலின், அத்தகைய ஏடுகளைப் படி எடுத்துக் கொண்டு ஆற்று வெள்ளத்தில் விடுவதும், நெய்யில் தோய்த்து நெருப்பில் இடுவதும் நம் நாட்டில் வழக்கமாக இருந்தது.  எந்த ஏடு ஆயினும் படி எடுக்காமல் நீரிலும் நெருப்பிலும் போடுவது இல்லை. ஆனால் இவ்வழக்கம் காலம் செல்லச் செல்ல, ஆண்டுதோறும்  ஆடித்திங்கள் 18ஆம்நாள் வெள்ளப்பெருக்கில் ஏட்டைவிடுவது ‘புண்ணியச் செயல்’ போலக் கருதப்பெற்றது.  தீயில் ஏட்டைப் போடுவது தெய்வத்திற்கு ‘ஆகுதி’ செய்வது போலத் தீர்மானிக்கப் பெற்றது.  ஆதலால், வழிவழிப் புலமையாளர் இல்லங்களில் தோன்றிய மடவர்கள்  தம் இல்லங்களில் இருந்த ஏடுகளை எடுத்துப் பார்க்கவும் அறிவில்லாராய், அதன் அருமை உணர்ந்தாரிடம் கொடுக்கவும் மனமில்லாராய்ப் பதினெட்டாம் பெருக்குக்கு இரையாக்கினர். தீக்குத் தீனி யாக்கினர்’’ (சுவடிப் பதிப்பியல் வரலாறு, பக்.39-40),

“பழைய ஏடுகளைக் கண்ட கண்ட இடங்களிலே போடக் கூடாதாம் அவற்றை நெய்யில் தோய்த்து ஹோமம் செய்து விடவேண்டுமாம். இங்கே  அப்படித்தான் செய்தார்கள்’’   (என் சரித்திரம், ப.928) என்று கரிவலம் வந்த நல்லூர் தேவஸ்தானத்தில் ஒருவர் கூறியதையும்,

“எங்கள் வீட்டில் ஊர்க்காட்டு வாத்தியார் புத்தகங்கள் வண்டிக் கணக்காக இருந்தன… அவற்றில் என்ன இருக்கிறதென்று பார்ப்பதற்கோ எனக்குத் திறமை இல்லை  …  ஆடிப் பதினெட்டில் சுவடிகளைத் தேர்போலக் கட்டிவிடுவது சம்பிரதாய மென்றும் சில முதிய பெண்கள் சொன்னார்கள்.  நான் அப்படியே எல்லா ஏடுகளையும் ஓர் ஆடிமாதம் பதினெட்டாந் தேதி வாய்க்காலில் விட்டு விட்டேன்’’ (என் சரித்திரம், ப.938) என்று திருநெல்வேலி, தெற்குப் புதுத்தெரு, வக்கீல் சுப்பையாபிள்ளையின் கூற்றையும் சான்றுகளாக உ.வே.சா. குறிப்பிட்டுள்ளார்.

சுவடி பாதுகாத்தல்

சுவடிகளைப் பாதுகாக்கும் பணியைச் சுவடிகளை எழுதிய காலத்திலிருந்து தொடங்கியுள்ளனர்.  அன்று முதல் இன்றுவரை சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தற்போது பாதுகாக்கப்பட்டு வருகின்ற பாதுகாப்பு முறைகளை இரண்டு வகைகளாகப் பகுக்கலாம். அவை 1. பழங்காலப் பாதுகாப்பு முறை, 2. தற்காலப் பாதுகாப்பு முறை என்பனவாகும். இனி இவற்றைப் பற்றி விரிவாக ஆராய்வோம்.

பழங்காலப் பாதுகாப்பு முறை

பழங்காலப் பாதுகாப்பு முறை என்பது அறிவியல் கண்டுபிடிப்பிற்கு முன்பே இயற்கையாகக் கிடைக்கக்கூடிய பொருள்களைக் கொண்டு காலங்காலமாகப் பாதுகாத்து வந்த முறையாகும்.  இம்முறையில் மஞ்சள், வேப்ப எண்ணெய்ப் பூச்சுமுறை, கோவையிலைச்சாறு, மை கொண்டு பாதுகாத்தல், மணப்பொருள் முடுச்சு வைப்புமுறை போன்ற பாதுகாப்பு முறைகள்  கையாளப்பட்டுள்ளன.

மஞ்சள், வேப்ப எண்ணெய்ப் பூச்சுமுறை

மஞ்சள் பூச்சுமுறை :  இம்முறையில் மஞ்சளை அரைத்து  நன்றாக குழம்பாக்கிக் கொண்டு சுவடியின் மேற்புறமும், அடிப்புறமும் தடவவேண்டும். அவ்வாறு தடவுவதால் சுவடிகளை அழிக்கக்கூடிய கரையான், அந்துப்பூச்சி போன்றவை அழிக்கப்பட்டுச் சுவடிக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும். மஞ்சள் பூச்சிகளைக் கொல்லும் தன்மை கொண்டது என்பதைப் பழங்காலம் முதல் தமிழர்கள் அறிந்திருந்தனர்.

வேப்ப எண்ணெய்ப் பூச்சுமுறை : இம்முறையில் வேப்ப எண்ணெயைத் தூரிகை(பிரஷ்)யின் உதவியால் சுவடியின் மேற்புறமும், அடிப்புறமும் தடவினால் மேற்குறிப்பிட்டுள்ளது போல் சுவடிக்குக் கேடு விளைவிக்கும் பூச்சிகள் அழிக்கப்பட்டு சுவடி நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்கப்படும்.

கோவையிலைச் சாறு, மைகொண்டு பாதுகாத்தல்

கோவையிலைச் சாறில் அடுப்புக்கரி, வசம்புக்கரி, கொட்டாங் குச்சிக்கரி இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொண்டு அதனுடன் விளக்கெண்ணெயில் புகையைச் சேர்த்து, கோவையிலைச் சாற்றுமை தயாரிக்க வேண்டும்.  இம்மையைச் சுவடியின் மேற்புறமும் அடிப்புறமும் தடவி சுவடிகளைப் பாதுகாக்கலாம்.

மணப்பொருள்  முடிச்சு முறை

இம்முறையில் வசம்பு, கருஞ்சீரகம், ஓமம், கிராம்பு, மிளகு, இலவங்கப்பட்டை ஆகிய பொருட்களை ஒரே அளவாக எடுத்து நன்கு உலர்த்தி பொடிசெய்து இரண்டு பங்கு கற்பூரத்தையும் சேர்க்க வேண்டும்.  இவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருளைச் சிறு சிறு முடுச்சிகளாகக் கட்டி சுவடிக் கட்டுகளுக்கு அடியில் வைக்கவேண்டும். வேப்பிலை, புதினா இலை, மஞ்சள் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.  இம்முறையில் பூச்சிகள் அழிக்கப்பட்டுச் சுவடி பாதுகாக்கப்படும். ஓலைகளைத் தனித்தனியே

பட்டு அல்லது பருத்தித் துணியில் நன்கு சுற்றி வைக்கலாம். கற்பூரம் பூசப்பட்ட துணியாயின் மிகுந்த பாதுகாப்பாகும். இத்துணிகள் மஞ்சள் அல்லது சிவப்பு அல்லது காவி நிறத்தில் இருந்தால் நல்ல பலனைத் தரும்.

மேற்கூறப்பட்ட பழங்காலப் பாதுகாப்பு முறைகளில் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களை மிகுதியாகப்  பயன்படுத்துவதால் எந்த பக்கவிளைவும் இல்லாமல் சுவடிகள் நீண்ட நாட்கள் பாதுகாக்கப் படுகின்றன.

தற்காலப் பாதுகாப்பு முறை

தற்காலப் பாதுகாப்புமுறை என்பது அறிவியல் வளர்ச்சியின் காரணமாகத் தயாரிக்கப்பட்ட இரசாயனப் பொருட்கள், அறிவியல் கண்டுபிடிப்புகளால் உருவான கருவிகள் போன்றவற்றைக் கொண்டு  பாதுகாப்பதாகும். இம்முறையில் இரசாயனப் பொருட்களைக் கொண்டு பாதுகாத்தல், குளிர்சாதன அறையில் வைத்துப் பாதுகாத்தல், அறிவியல் கருவிகளைக் கொண்டு பாதுகாத்தல் போன்ற பாதுகாப்பு முறைகள் கையாளப்படுகின்றன.

இரசாயனப் பொருள்களைக் கொண்டு பாதுகாத்தல்

இம்முறையில் ஓலைச் சுவடிகளைப் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க நுண்கிருமி நீக்கப் பேழையில் பூச்சிக் கொல்லி மருந்துகளை வைத்து அதன் ஆவியின்மூலம் பூச்சிகளை  அழிக்கின்றனர்.  பூச்சிக் கொல்லிகளாக Para-Di-Chlorapenzeen, Mercuric chloride, Gemaxin Powder, Polyethylene clycol, Napthaline Balls போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இம்மருந்துப் பொருட்கள் மனிதனுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. இவை மட்டுமல்லாமல் தாவர எண்ணெய்களான தர்ப்பைப்புல் எண்ணெய், சாவா சிட்ரோ நெல்லா எண்ணெய், டி.டி.டீ. எண்ணெய் போன்றவையும் பயன்படுத்தப்படுகின்றன.

மேற்கூறப்பட்ட இராசயனப்பொருள்களைக் கொண்டு பாதுகாத்தல் முறையில் பழைய ஓலைச்சுவடிகள் எளிதில் நைந்து அழிகின்றன என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. இவற்றைப் பயன்படுத்து பவர்களும் ஒவ்வாமை, தோல் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

குளிர்சாதன அறையில் வைத்துப் பாதுகாத்தல்

இம்முறையில் சுவடி வைக்கப்படும் அறை முழுவதும் குளிர்சாதனம் கொண்டு குளிர்விக்கப்படவேண்டும்.  இவ்வாறு பாதுகாக்கப்படுவதால் சுவடிகள் தூசிகளிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.  ஆனால் நாள் முழுவதும் ஒரேமாதிரியான குளிர்நிலை நிலவவேண்டும்; மாற்றம் ஏற்படக்கூடாது.

அறிவியல் கருவிகளைக் கொண்டு பாதுகாத்தல்

அறிவியல் கருவிகளைப் பயன்படுத்திச் சுவடிகளைப் பாதுகாத்து வருகின்றனர்.  இம்முறையில் நகலெடுக்கும் இயந்திரம் (photo capier), நுண்படச் சுருள் இயந்திரம் (Micro film), அச்சு இயந்திரம் (Press), கணிப்பொறி (Computer) போன்ற கருவிகளைப் பயன்படுத்திச் சுவடிகளைப் பாதுகாத்து வருகின்றனர்.

சுவடிகளை நகலெடுத்தல், நுண்படச் சுருள் எடுத்தல், கணினியில் உள்ளீடு செய்தல் ஆகியவற்றின்மூலம் சுவடியில் உள்ள செய்திகள் (எழுத்து) பாதுகாக்கப்படுமே  தவிர சுவடிகளைப் பாதுகாக்க இயலாது.  எனினும் கணினியில் உள்ளீடு செய்து பாதுகாக்கும் முறை சிறந்த முறையாகும்.  இதன்மூலம் பல படிகளை உருவாக்கி, பதிப்பாசிரியர்களுக்கு வழங்கவும், பல ஆய்வாளர்களுக்கு வழங்கவும் செய்யலாம்.

சுவடிகள் பாதுகாப்பில் பழங்காலப் பாதுகாப்பு முறை, தற்காலப் பாதுகாப்பு முறை ஆகிய இரண்டு வகைகளில், தற்கால பாதுகாப்பு முறை எளிமையானதாக இருக்கின்றது.  ஆனால் பக்கவிளைவுகளை உண்டாக்கக் கூடியது சுவடிகளை விரைவில் அழியும் நிலைக்குக் கொண்டு செல்லக் கூடியது. ஆனால் பழங்காலப்பாதுகாப்புமுறை சற்று கடினமானதாக இருப்பினும் சுவடிகளை நீண்ட நாட்கள் பாதுகாப்பதுடன் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. எனவே  சுவடிகளை அழியாமல் பாதுகாக்கப் பயன் படும் பழங்காலப் பாதுகாப்பு முறையே சிறந்த பாதுகாப்புமுறையாகும்.

சுவடிகளைப் பாதுகாத்து உதவியவர்கள்

தமிழரின் இலக்கியப் புதையல்களாகத் திகழ்ந்த சுவடிகளைத் தொகுத்தும் பாதுகாத்தும் வைத்திருந்த வள்ளல்கள் பலராவர்.  அவர்களுள் சிலர் தம் இல்லங்களில் சுவடிகளை நிரப்பி சுவடி நூலகங்களாக மாற்றிப் பாதுகாத்தனர். அரசு நூலகங்களும், நிறுவனங்களும் செய்த பணியைத் தனி மனிதராக இருந்து செய்தவர்கள் பலர். அவர்களுள் பதிப்பாசிரியர்களால் குறிப்பிடப்படும் சிலரின் பெயர்ப்பட்டியலை இங்குக் காண்போம்.

திருநெல்வேலி அம்பலவாணக் கவிராயர், கவிராச நெல்லையப்பப் பிள்ளை, கவிராச ஈசுவரமூர்த்தி பிள்ளை, திருவம்பலத் தின்னமுதம் பிள்ளை, திருப்பாற்கடனாதன் கவிராயர், மிதிலைப்பட்டி அழகிய சிற்றம்பலக் கவிராயர், திருமயிலை சண்முகம்பிள்ளை, மயிலாப்பூர் திரு அண்ணாசாமி உபாத்தியாயர், ஆழ்வார் திருநகரி திரு தே. இலட்சுமணகவிராயர், திரு தேவர் பிரான்கவிராயர், திரு பெரிய திருவடிக்கவிராயர், திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, அட்டாவதானம் திரு சபாபதி முதலியார், திரு கா.ரா. நமச்சிவாய முதலியார், திரு மழவை மகாலிங்கையர், திரு முத்துக்குமாரசாமி முதலியார், வ.உ. சிதம்பரம்பிள்ளை, திரு தொழுவூர் வேலாயுத முதலியார், யாழ்ப்பாணம் திரு ம.வி. கனகசபைப் பிள்ளை, திரு குமாரசாமி செட்டியார், திரு நல்லூர் கைலாசம் பிள்ளை, திரு சுவாமிநாத பண்டிதர், திரிசிரபுரம் திரு அண்ணாசாமிப்பிள்ளை, திரு தியாகராச செட்டியார், சேலம் திரு இராமசாமி முதலியார், திருத்தணிகை சரவணப்பெருமாளையர், தேரழூந்தூர் சக்கரவர்த்தி இராசகோபாலச்சாரியார், களக்காடு திரு சாமிநாத தேசிகர் போன்ற சுவடி வள்ளல்கள் பலர் சுவடிகளைத் தொகுத்து, பாதுகாத்துப் பதிப்பாசிரியர்களுக்கு வழங்கி உதவியுள்ளனர்.  இவர்களின்  இப்பணி போற்றுதற்கும் வணங்குதற்கும் உரியதாகும்.

தமிழகத்தில் சுவடிகள் உள்ள இடங்கள்

தமிழகத்தில் சுமார் 40 இடங்களில் பழஞ்சுவடிகளைத் தொகுத்துப் பாதுகாக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது.  இப்பணியில் நூலகம், நிறுவனம், பல்கலைக்கழகம், ஆதீன-மடம், தமிழ்ச் சங்கம் போன்றவை ஈடுபட்டுள்ளன. அவற்றின் பெயர்களை இங்குக்காண்போம்.

சென்னை அரசினர்க் கீழ்த்திசைச் சுவடி நூலகம், ஆசியவியல் ஆய்வு நிறுவனம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், டாக்டர் உ.வே.சா. நூலகம், அடையாறு நூலகம் (பிரமஞானசபை), மைய இந்திய மருத்துவ ஆய்வு மையம், இந்திய மருத்துவ இயக்குநரகம், தொல்லியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் – சிதம்பரம், காமராசர் பல்கலைக்கழகம் – மதுரை, தமிழ்ப் பல்கலைக்கழகம் – தஞ்சை, சரசுவதி மகால் நூலகம் – தஞ்சை,  சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரி – பேரூர், தமிழ்ச்சங்க நூலகம் – மதுரை, அரசு அருங்காட்சியகம் – ஈரோடு, கலைமகள் கல்வி நிலையம் – ஈரோடு, அம்பலத்தடியார் மடம் – சிதம்பரம், ஈசானிய மடம் – சிதம்பரம், மௌன சுவாமிகள் மடம் – சிதம்பரம், சித்தாமூர் மடம் – சித்தாமூர், குமாரதேவர் மடம் – துறையூர், குமாரதேவர் மடம் -விருத்தாசலம், பொம்மபுர ஆதீன மடம் – மயிலம், போரூர் மடம் – திருப்போரூர், சங்கராச்சாரியார் மடம் – காஞ்சீபுரம், தொண்டை மண்டல ஆதீனமடம் – காஞ்சீபுரம், சங்கராச்சாரியார் மடம் – கும்பகோணம், தருமபுர ஆதீன மடம் – தருமபுரம், திருவாவடுதுறை ஆதீனமடம் – திருவாவடுதுறை, சிரவையாதீனம் – கோவை, பிரெஞ்சிந்தியக் கல்விக் கழகம் – புதுச்சேரி போன்றவை சுவடிகளைத் தொகுத்துப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

வெளிநாடுகளில் தமிழ்ச் சுவடிகள்

தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்ற பல சுவடிகள் பல இடங்களில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பதற்குப் பாரிசிலுள்ள தேசிய நூலகம், இலண்டனிலுள்ள இந்திய ஆபீஸ் லைபரரி, வெல்கம் மருத்துவ ஆய்வு நிறுவனம், பிரிட்டன் அருங்காட்சியகம், ராயல் அசியாடிக் சொசைட்டி நூலகம், ஸ்காட்லாந்திலுள்ள எடின்பரோ பல்கலைக்கழக நூலகம்,  தேசிய நூலகம், கிளஸ்கோ பல்கலைக்கழக நூலகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நூலகம், ஆக்ஸ் போர்டிலுள்ள பாட்லியன் நூலகம், ரோம் நகரிலுள்ள நூலகம், டென்மார்க்கிலுள்ள கோபன்ஹேகன் நூலகம்,  அருங்காட்சியகம், கிழக்கு ஜெர்மனியில் ஆலேயிலுள்ள பிரான்க்ஸ், ஆவணக்காப்பகம், மார்டின் லூதர் பல்கலைக்கழக நூலகம், லிப்சிக்கிலுள்ள அருங்காட்சியகம், ஹம்பார்க்கிலுள்ள பல்கலைக்கழக நூலகம், ஸ்வீடனிலுள்ள  அப்சாலா பல்கலைக்கழக நூலகம், ஸ்டாக்ஹோமிலுள்ள அருங்காட்சியகம், சோவியத் யூனியனில் மாஸ்கோவிலுள்ள லெனின் நூலகம், லெனின் கிராட் பல்கலைக்கழக நூலகம், ஆர்மேனிய அறிவியல் கழகம் (சுவடிப் பதிப்பியல், ப.213) போன்ற இடங்களில் உள்ள சுவடிகளே சான்றுகளாக உள்ளன.

இப்பகுதி சுவடிச் சொற்பொருள் விளக்கம், சுவடி தயாரித்தல், சட்டங்கள் அமைத்தல், சுவடிக் கட்டின் அமைப்பு, எழுத்தாணிகளின் வகைகள், சுவடி எழுதும்முறை, சுவடியின் எழுத்துமுறை, சுவடிகளில் ஓவியம், சுவடிகளின் வடிவமைப்பு, சுவடி அழிவு, சுவடிப் பாதுகாப்பு, சுவடிகளைப் பாதுகாத்து உதவியவர்கள், தமிழகத்தில் சுவடிகள் உள்ள இடங்கள், வெளிநாடுகளில் தமிழ்ச் சுவடிகள் உள்ள இடங்கள் போன்றவற்றை விளக்கிக்கூறியுள்ளது.

 

நன்றிகாற்றுவெளி (லண்டன்)