எண்ணிம ஆவணப்படுத்தல் மற்றும் இலத்திரனியல் பள்ளிக்கூடம் நோக்கி மலையகம்

Published on Author Noolaham Foundation

‘இந்த காலத்தில் எல்லாமே கொம்பியூட்டர்தான்’ என்பதே இப்போது பலரும் உச்சரிக்கும் வசனங்களாகிப் போகுமளவுக்கு கொம்பியூட்டர் எனப்படும் கணிணியும் அதனோடு இணைந்த இணைய (இன்டர்நெட்) பாவணையும் வந்துவிட்டது. விரும்பியோ விரும்பாமலோ அந்த தொழிநுட்பம் சார்ந்து நமக்கான தெரிவுகளைச் செய்யத் தூண்டப்படுகிறோம். வீட்டுக்கு ஒரு கணிணியும் ஆளுக்கொரு தொலைபேசியும் இப்போது அத்தியாவசியமாகிவிட்டது. இணையப் பாவனை பரவலாக்கப்பட்டு கைப்பேசியிலேயேகூட இணைய வசதியைப் பெறும் நிலைமை இன்று உள்ளது.

இந்த வளர்ச்சி காலகட்டத்திற்குள் நாம் எவ்வாறு நமது முன்னோக்கிய பயணத்திற்கு இந்த கணிணி மற்றும் இணையப்பாவனையைப் பயன்படுத்திக்கொள்ளப் போகிறோம் என்பதில்தான் வெற்றி தங்கியுள்ளது. பொதுவாக கணிணிகளும் கைப்பேசிகளும் ‘கேம்கள்’ விளையாடும் பொருளாகவும் வீடியோ மற்றும் புகைப்படக் கருவிகளாகவும், சேமிப்பான்களாகவும், முகநூல் (Facebook), Twitter போன்ற சமூக வலைத்தளங்களைப் பாவிக்கவும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இலத்திரனியில் நூலகம் (E- Library), மற்றும் இலத்திரனியல் பள்ளிக்கூடம் (E- Pallikkoodam) ஆகிய கணிணிசார் ஆவணப்படுத்தல் மற்றும் கற்றல் நடவடிக்கைகள் பற்றிய சிறு அறிமுகத்தை அடுத்துப்பார்க்கலாம்.

இலத்திரனியல் நுலகம் (E- Library)

நூலகம் ஒன்றின் முக்கியத்துவம் குறித்து அனைவரும் அறிவோம். தற்போது பயன்பாட்டில் உள்ள நமது நூலகப்பாவனைப் பழக்கம் என்பது பாடசாலை அல்லது பொது நூலகங்களில் இரவல் பெற்றும் (Lending) உசாத்துணை (Reference) செய்வதுமாகவுள்ளது. ஆனால் இந்த நடைமுறையை எத்தனைபேர் வெற்றிகரமாகவும் தொடர்ச்சியாகவும் செய்து வருகிறோம் என்பது நம் முன்னே உள்ள கேள்வி. இந்த நடைமுறை பல்வேறு சிக்கல்கள் நிறைந்தது. குறித்த நூலகத்தில் அங்கத்துவம் பெறுவதில் இருந்து கிடைத்தற்கரிய நூலை நமது தேவைக்காகப் பெற்றுக்கொள்வது வரை பல்வேறு சிரமங்கள்  உண்டு.

இதற்கு தீர்வாக அமைவதுதான் இந்த இலத்திரனியல் நூலகம். இலங்கையிலிருந்து வெளிவந்த தமிழ்மொழிசார்ந்த இலக்கிய படைப்புகளை இணையத்தினூடாகப் பெற்றுக்கொள்வதே இந்த நூலகத்திட்டத்தின் நோக்கம். இது ஒரு வகையில் ஆவணப்படுத்தலாகவும் அமைகிறது. இது ‘எண்ணிம ஆவனப்படுத்தல்’ (Digital Documentation) எனப்படுகின்றது. இந்த முறை மூலம் புத்தகங்கள் ஸ்கேன் (Scan) செய்யப்பட்டு இந்த தளத்தில் தரவேற்றப்படுகின்றன. இயற்கை மற்றும் திட்டமிட்ட அழிவுக்கு உள்ளாகாமல் புத்தகங்களை எண்ணிம வடிவில் பாதுகாக்கும் முயற்சியாகவம் அமைகிறது இந்த முறைமை.

பத்தாண்டுகளுக்கு முன்பு இரண்டு இளைஞர்களின் சிந்தனையில் உருவான இந்த திட்டம் தற்போது ஒரு நிறுவனமாக வளர்ச்சிப் பெற்றுள்ளது. www.noolaham.org எனும் இணையத்தளத்தின் ஊடாக இந்த சேவையை உலகளாவிய ரீதியல் யாரும் இலவசமாக சேவையைப் பெற்றுக்கொள்ளலாம். இதுவரை பதின்மூன்றாயிரத்துக்கு மேற்பட்ட தமிழ்பேசும் இலங்கை எழுத்தாளர்களின் நூல்கள் இங்கே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. எழுத்தாளர் பெயர்வாரியாகவோ அல்லது நூல்தலைப்புவாரியாகவோ பிற வகைப்படுத்தல்கள் ஊடாகவோ இந்தத் தளத்தில் இருந்து புத்தகங்களை வாசிக்கவோ அல்லது தரவிரக்கம் செய்யவோ முடியும்.

இதுவரை பதின்மூன்றாயிரத்துக்கும் மேற்ப்பட்ட நூல்கள் இந்தத் தளத்தில் இருந்தும் மலையகம் சார்ந்த நூல்கள் ஐம்பத்தேழு நூல்களே அதில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது என வகைபிரித்தலில் அறிய முடிகின்றது. ‘மலையகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது’ என சில ஜாம்பவான்கள் புறப்பட்டுவிடக்கூடும். அவர்களுக்காக ஒரு தகவல்: இதில் ஐம்பது நூல்கள்தானும் செர்க்கப்பட்டுள்ளமைக்கு அதன் இணைப்பாளர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். பிறகு அந்த நூல்வரிசையை அதிகப்படுத்தவும் அந்த நூலக சேவையில் இருந்து பயன்பெறவும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதுவே நமது பொறுப்பு.

அண்மையில் நூலக நிறுவனமும் பாக்யா பதிப்பகமும் ஒரு புரிந்தணர்வுத்திட்டத்தில் இணைந்து கொண்டன. மலையகம்சார்ந்த நூல்களை இதில் பதிவேற்றுவதற்கு ‘பாக்யா’ இணைப்பாளராக செயற்பட இணங்கியுள்ளது. இத்திட்டத்தின் ஆலோசனைக்குழுவில் மூத்த எழுத்தாளர்களான தெளிவத்தை ஜோசப், அல் அஸுமத், ஆகியோருடன் லெனின் மதிவானம், மல்லியப்புசந்தி திலகர், சிவலிங்கம் சிவகுமாரன், ஆவணகாப்பகரும் எழுத்தாளருமான சுப்பையா இராஜசேகரன் ஆகியோர் அங்கத்துவம் பெறுகின்றர். இவர்களை தொடர்பு கொள்வதன் மூலம் இந்ததிட்டத்திற்கு பங்களிப்பு செய்யவோ பயன்பெறவோ முடியும்.

இலத்திரனியல் பள்ளிக்கூடம் (E- Pallikoodam)

இந்தத்திட்டம் இலங்கைப்பல்கலைக்கழகங்களில் கல்விகற்கும் தமிழ் மாணவர்களின் முயற்சியினால் உருவாக்கப்பட்டது. இது பாடசாலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்துவற்கான முயற்சி. கணிணி மற்றும் இணையப்பாவனை ஊடாக தரம் 6 முதல் தரம் 13 வரையுள்ள தமிழ்மொழிமூல அத்தனைப் பாடநெறிகளுக்குமான மாதிரி மற்றும் கடந்த கால வினாத்தாளகள் ஆசியரியர் கைநூல் போன்றவற்றைப் பெற்றுக்கொள்ள இவ்விணையத்தில் முடியும். இதன் மூலம் மாணவர்கள் வீட்டில் இருந்தவாறே பல மாதிரி வினாத் தேர்வுகளை பயிற்சிக்காகப் பெற்றுக்கொள்ள முடியும். எதிர்வரும் காலங்களில் புள்ளித்திட்ட அடிப்படையில் (Marking Scheme) விடைகளை படிமுறை அடிப்படையில் ஒவ்வொரு வினாத்தாளுக்குமாக இடவும், இரசாயணவியல் போன்ற பாடங்களுக்கு செயன்முறை விளக்கமளித்து காணொளிகளை பதிவிடவும் (வீடியோ) திட்டத்தை முன்னெடுக்கும் பல்கலைக்கழக மாணவர்கள்களின் முயற்சி பாராட்டுக்குரியது. நூலகம் இணையத்தளத்தினூடாகவோ Epallikoodam எனும் சுட்டியை அழுத்தி இந்த சேவையினை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும். மாணவர்கள் இந்த சேவையினை சாதாரணமாக இணையத்தில் சென்று பார்வையிடவும் மின்னஞ்சல் ஊடாக பதிவு செய்து முழுமையர்க பயனைப் பெறவும் முடியும். எவ்விதக் கட்டணங்களும் இதற்காக அறவிடப்படமாட்டாது.

மலையகத்தைப் பொறுத்தவரைக் கூட இப்போது கணிணிப்பாவனை அதிகளவில் வந்தவிட்டதை அவதானிக்கலாம். பெரும்பாலான பாடசாலைகளிலும் வீடுகளிலும் கணிணி வசதிகள் உள்ளன. இந்தக் கணிணிகளை எவ்வாறு நமது அன்றாட அறிவுப்பாவனைக்கு கையாளலாம் என்பதற்கான முயற்சிகளே இப்போது நமக்குத் தேவையாக உள்ளது. அத்தகையதொரு முன்மாதிரி நிகழ்ச்சி அண்மையில் பதுளை மாவட்டத்தில் நடைபெற்றது. மேற்படி இரண்டுத் திட்டங்களினதும் அறிமுகக் கருத்த்தரங்குகளை ‘நூலகம்’ நிறுவனமும் ‘பாக்யா பதிப்பக’மும் இணைந்து பதுளை ‘குறிஞ்சிப்பேரவை’ மற்றும் ‘பதுளை கலை இலக்கிய மன்றம்’ என்பவற்றுடன் இணைந்து அண்மையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

எல்ல, நிவ்பேர்க் தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் அந்தப் பாடசாலையின் அதிபரும் ‘குறிஞ்சிப்பேரவையின்’ தலைவருமான சு.இராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாயின. தலைமையுரையில், மாறிவரும் தொழிநுட்ப சூழலில் கைபேசிகளில் கூட இணைய வசதியைப்பெறும் மாணவர்கள் இந்தத் திட்டத்தினை நன்றாக விளங்கிக்கொள்வதன் மூலம் இலவசமாகப் பயன்பெறமுடியும் என சுட்டிக்காட்டினார். பாக்யா பதிப்பக நிறுவுனரும் எழுத்தாளருமான மல்லியப்புசந்தி திலகர் தொடக்கவுரையாற்றினார். நூலக நிறுவன நண்பர்கள் யாரையும் நான் தனிப்பட்ட ரீதியில் அறியேன். எனது இலக்கிய, எழுத்துச் செயற்பாடுகளை இணையத்தில் அவதானித்த ‘நூலகம்’ நிறுவனத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான நண்பர் சசீவன் என்னுடன் முகநூல் வழியாக தொடர்பு கொண்டு ‘நூலகத்தில்’ மலையக நூல்களை தரவேற்றம் செய்ய உதவமுடியுமா எனக் கேட்டார். ‘கரும்பு தின்ன கூலியா’ அந்த இனிப்பான பணியை ஆரம்பித்து வைத்துள்ளேன். இதில் பயன்பெற்றுக் கொள்ளவேண்டியது மாணவர்களினதும் சமூக ஆர்வலர்களினதும் பொறுப்பு நமது சமூகததிற்குரியது என மல்லியப்பு சந்தி திலகர் தனதுரையில் தெரிவித்தார்.

நூலக நிறுவனத்தைச் சேர்ந்த சேரன் மற்றும் சண்முகப்பிரியன் ஆகியோர் இலத்திரனியல் நூலகம் மற்றும் ஆவணப்படுத்தல் தொடர்பாகவும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவன் நந்தகுமார் இலத்திரனியல் பள்ளிக்கூடம் தொடர்பிலும் விளக்கமளித்தனர். தமிழ் ஆவண மாநாட்டு கட்டுரைத் தொகுப்பு நூல் பாடசாலை அதிபருக்கும், பாக்யா நிறுவன அதிபருக்கும் வழங்கிவைக்கப்பட்டன. மேலதிகமாக ஒரு இறுவட்டு (CD) மூலம் மலையக எழுத்தாளர்களின் எழுபது நூல்கள் பதிவு செய்யப்பட்டு பாடசாலைகளுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டன. சிறப்பு விருந்தினராக பண்டாரவளை கல்விவலயத்தின் ஆரம்பப்பிரிவுக்கான கல்விப் பணிப்பாளர் திரு.சித்தார்த்தன் கலந்துகொண்டு இந்தத்திட்டங்கள் பரவலாக்கப்படவேண்டியதன் அவசியம் குறித்து கருத்து தெரிவத்தார்.

மாலையில் பதுளையில் நடைபெற்ற சந்திப்பினை பதுளை மாவட்ட கலை இலக்கிய மன்றத்தின் செயலாளரும் ஆசிரியரும் ஊடகவியலாளருமான ஆ.புவியரசன் ஏற்பாடு செய்திருந்தார். சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் தமிழ் ஆவண மாநாட்டு கட்டுரைத் தொகுப்பு நூல் ஒன்றையும் மலையக எழுத்தாளர்களின் எழுபது நூல்கள் பதிவு செய்த இறுவட்டுக்களையும் பதுளை மாவட்ட கலை இலக்கிய மன்றத்துக்கு நூலக நிறுவனத்தினர் அன்பளிப்பு செய்தனர்.

பச்சைப்புரட்சி (விவசாயம்), நீலப்புரட்சி (மீன்பிடி), சிவப்புப் புரட்சி (சமவுடமை), கைத்தொழில் புரட்சி, தொழிநுட்பப் புரட்சி, இலத்திரனியல் புரட்சி என மாற்றம் கண்டுவந்த உலக ஒழுங்கு தற்போது ‘தகவல் புரட்சி’ (Information Age) யுகத்தில் உள்ளது. அதற்கேற்ப நம்மை உலக ஒழுங்குடன் இணைந்து பயன்பெற்றுக் கொள்ளவேண்டியது மலையக சமூகத்தின் கடப்பாடாகிறது.

1797452_10203455467652784_1124171154_n