இலங்கைத் தமிழர்களினதும் தமிழ் நிலத்தினதும் ஆவணங்களை பேணிப்பயன்படுத்தும் எண்ணிம நூலகத் திட்டம்

Published on Author Noolaham Foundation

By பேராசிரியர் இரா சிவசந்திரன்

நூலக நிறுவனம் (www,noolahamfoundation.org) மின்நூல் உருவாக்கத்தினைப் பரவலாக்கும் பணிகளை யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் தொடங்கியுள்ளது. இப் பணியை மேற்கொள்வதற்கான வளவாளர் பயிற்சி வகுப்புகள் 15.02.2011 செவ்வாய் முதல் மூன்று நாட்களுக்கு வண்ணார்பண்ணை இரத்தினம் வீதியில் அமைந்துள்ள சிந்தனைக்கூட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நூலக நிறுவனத்தின் யாழ்ப்பாணப் பிரதேச இணைப்பாளராகப் பணியாற்றும் பேராசிரியர் இரா சிவசந்திரன் தமிழர் எண்ணிம நூலகத்தின் தேவை, வலைத்தளத்தின் வரலாறும் செயற்பாடும், அதன் பயன்கள், எழுத்தாளர்களும் ஆர்வலர்களும் இப் பாரிய பணிக்கு எவ்வகையில் பங்களிக்க முடியும் என்பன பற்றி பயிற்சியின் ஆரம்ப உரையாற்றுகையில் விபரமாக எடுத்துரைத்தார்.

தகவல் வளங்களை எண்ணிம (Digital) வடிவத்தில் கொண்டுள்ள நூற்றொகுதியை எண்ணிம நூலகம் என வழங்குகின்றோம். எமது நூலகத்தின் இணைய முகவரி www.noolaham.org என்பதாகும்.

இன்று உலகம் அறிவை அடிப்படையாகக் கொண்ட அறிவு மைய உலகமாக மாறி வருகின்றது. தரவுகள் ஒழுங்கமைக்கப்பட்டுத் தகவலாக மாறி அறிவுக்கான அடித்தளத்தை உருவாக்குகின்றன. அறிவின் ஓர் உயர்ந்த நிலையே ஞானமாகும். இதுவே அறிவின் பரிணாமமாகும். இன்று அறிவுசார் பொருளாதாரம், அறிவுசார் ஊழியம் என்பதாக ஓர் அறிவுப் புரட்சி யுகம் உருவாகி வருகின்றது. சமூக வரலாறு காட்டும் விவசாயபுரட்சி, கைத்தொழில் புரட்சி போல் அறிவுப்புரட்சி மூலமாகவே எமது சமூக பொருளாதார கலாசாரத்தை வலுவுள்ளதாகக் கட்டியெழுப்ப முடியும். இந்நிலையை எய்துவதற்கு எமது தமிழ் மக்களுக்குப் பணியாற்றவே எண்ணிம நூலகத் திட்டத்தைத் துரிதமாக வளர்த்தெடுக்க வேண்டிய தேவை உள்ளது.

தமிழில் சமகால அறிவு பகிரப்படும் மிக முக்கிய வலைத்தளங்களில் ஒன்றாக நூலக இணையத்தளம் விளங்குகின்றது. எதுவித இலாபநோக்கம் அற்ற கூட்டுமுயற்சியான இது 2005 தைப்பொங்கல் தினத்தன்று திரு மு.மயூரன், திரு.தி.கோபிநாத் போன்றவர்களின் ஆர்வத்தால் உருவாக்கப்பட்டது. மாணவர்களாக இருந்த இவர்களின் இவ் ஆக்கபூர்வமான சிந்தனையும் செயற்பாடும் பெருமளவு தன்னார்வலர்களின் இணைவினால் விரிவடைந்து பின்னர் க. சசீவனின் முயற்சியால் ஒழுங்கமைக்கப்பட்ட நூலக நிறுவனமாக மாற்றப்பட்டு திரு பத்மநாப ஜயர் அவர்களைத் தலைவராகக் கொண்டு, சர்வதேச கிளைகளையும் உருவாக்கி இயங்கி வருகிறது. 2011 சனவரி வரை இந்நூலக வலைத்தளத்தில் 8,300 வரையான இலங்கைத் தமிழ் எழுத்தாவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1700க்கு மேற்பட்ட எழுத்தாளரது நூல் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், சிறு பிரசுரங்கள், ஆய்வேடுகள், நினைவு மலர்கள், விழா மலர்கள், ஆய்விதழ்கள், பாடசாலை மலர்கள், உள்ளிட்ட எமது மண்ணிற்குரிய சகலவிதமான எழுத்தாவணங்களும் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. மாதம் தோறும் 200 – 300 புதிய மின் நூல்கள் பற்றிய விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இந் நூல்களை எழுத்தாளர் பெயர் கொண்டும், ஆண்டு ரீதியாகவும், வெளியிட்ட பதிப்பாளர் விபரங்களைக் கொண்டும், மற்றும் நூல்வகை ரீதியாகவும் தேடிப் பெறலாம். தமிழ், ஆங்கிலம், ஆகிய இரு மொழிகளிலும் தேடவும் உலாவவும் இயலும்.

இந்த மின் நூலகத்தின் பயன்கள் அளப்பரியன. எமது வரலாறு, இலக்கியம், பண்பாடு, சமயங்கள், கலைகள், நாட்டார் வழக்காற்றியல் உள்ளிட்ட அனைத்தும் ஆவணப்படுத்தப்படுகின்றன. அழியும் நிலையிலுள்ள எழுத்தாவணங்கள் அடுத்த தலைமுறைக்குக் கிடைக்கும் வண்ணம் பேணிப் பாதுகாக்கப் படுகின்றன. ஆய்வாளர்களுக்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் நூலகம் ஓர் அறையினுள் ஒளிர்ந்து அளப்பரிய கல்விச் சேவையை ஆற்றுகின்றது. உலகில் எந்த இடத்தில் வாழ்வோரும் எத்தொகையினரும் ஒரே நேரத்தில், எந் நேரமும் பெற்றுப் பயன்பெற முடிகின்றது.

இணையத்தள வருகைக் கணிப்பான் மூலம் தினமும் 450 க்கும் அதிகமானோர் இந் நூலகத்தைப் பயன்படுத்துவது தெரிய வருகின்றது. இந்தியா, இலங்கை வாசகர்கள் பெருந்தொகையாகவும் ஜக்கிய அமெரிக்கா, ஜக்கிய ராச்சியம், கனடா, அவுஸ்ரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து கணிசமான தொகையினரும் பார்வையிடுவது தெரிகின்றது. எண்ணிம நூலகத்திலே எமக்குத் தேவையான தகவல்களை இலகுவாகவும், வேகமாகவும், எந்நேரமும், எந்நாட்டில் இருந்தும் பயன்படுத்த முடியும்.

எனவே எமது தமிழ் சமூகத்தின் மேம்பாட்டிற்கு இன்றியமையாத மின் நூலகத்தின் வளர்ச்சிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து நூலகங்களும், தனிப்பட்ட முறையில் நூல்களை சேகரித்து வைத்திருப்போரும் நூல்களைத் தந்து உதவமுடியும். மின்பிரதியாக்கப்பட்ட பின்னர் அந்நூல் பிரதிகள் அவர்களிடம் திரும்பவும் ஒப்படைக்கப்படும். எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், இதழாசிரியர்கள், அவர்களது வெளியீடுகளை எண்ணிமமாக்கும் அனுமதியுடன் அனுப்பி உதவ முடியும். நூலக வலைத்தளத்தை மாணவர் முதல் ஆர்வலர்கள் அனைவரும் பரவலாக அறிமுகப்படுத்தி அதன் பயன்பாடு அனைவருக்கும் கிடைக்க உதவி செய்யலாம். நிதி மிகுந்தவர் நூலக நிறுவன செயற்பாடுகளுக்கு நிதியுதவி வழங்கி ஊக்குவிக்கலாம்.

எதிர் காலத்தில் இந்த நூலகத்தில் எமது கல்வி, பண்பாட்டு அம்சங்களை ஒளி, ஒலி வடிவிலும் ஆவணப்படுத்தும் திட்டம் உண்டு. இலங்கைத் தமிழரின் பூரணமான எக்காலத்தேயும் அழிக்க முடியாத நூலகமாக இதனை உருவாக்குவதற்கு மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

பேராசிரியர் இரா. சிவசந்திரனின் அறிமுக உரையைத் தொடர்ந்து, நூலக நிறுவனத்தின் தலைவர் திரு பத்மநாப ஜயரினதும் முதன்மை நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு கணேசானந்தன் சசீவன் அவர்களதும் உரைகள் ஜக்கிய ராச்சியத்திலிருந்து “ஸ்கைப்” மூலம் அஞ்சல் செய்யப்பட்டு ஒளிபரப்பப் பட்டமையும் குறிப்பிடத்தக்கது.