எங்கிருந்தும் எந்நேரமும் எல்லோரும் அணுகக் கூடியவை என்பதால் எண்ணிம நூலகங்கள் கல்விச் செயற்பாடுகளுக்கும் சமூக முன்னேற்றத்துக்கும் மிகுந்த பயன்பாடுடையவை. அத்தகைய எண்ணிம நூலகமொன்றை அக்கறையுள்ள அனைவரும் இணைந்து தன்னளவில் முழுமையானதொன்றாக விரைவாக வளர்த்தெடுப்பது காலத்தின் கட்டாய தேவையாகும்.
அவ்வகையில் இலங்கைத் தமிழரின் மிகப் பெரும் எண்ணிம நூலகமான www.noolaham.org ஆனது நூலக நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுகிறது. நூலக நிறுவனம் இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட ஓர் இலாபநோக்கமற்ற அமைப்பு ஆகும். நூலக வலைத்தளம் மட்டுமன்றி அதனுடன் தொடர்புடைய பல செயற்றிட்டங்களையும் விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகளையும் நூலக நிறுவனம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.
இலங்கையின் பல பகுதிகளிலும் உலகெங்கும் பரந்து வாழும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களின் முயற்சியில் இச்செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அவர்களில் பலர் நிறுவனத்துக்கு நிதியுதவிகளையும் அளித்து வருகின்றனர்.
கூட்டுச் செயற்பாட்டில் முன்னெடுக்கப்படும் நிறுவனமொன்று அதன் செயற்பாடுகள் தொடர்பிலும் நிதிப் பயன்பாடு தொடர்பிலும் வெளிப்படையானதாகவும் நம்பகமானதாகவும் இருக்க வேண்டும். அவ்வகையில் 2010 க்கான நிதிப் பயன்பாட்டு அறிக்கை வெளியாகிறது.
மாதாந்த முதன்மை நிதிப் பங்களிப்பாளர்கள்
2010 க்கு முன்னரான காலங்களில் நிதிப் பயன்பாடு தொடர்பில் முன்கூட்டிய திட்டமிடல்கள் சாத்தியமாகவில்லை. நன்கொடைகள் கிடைப்பதைப் பொறுத்தும் கிடைத்த பின்னருமே செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சில செயற்றிட்டங்கள் மிக அதிக காலம் எடுத்தமைக்கு அது காரணமாக அமைந்ததோடு நிறுவனச் செயற்பாடுகளைச் சீராக முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையும் காணப்பட்டது.
இது மிகவும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியமை இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து 2009 இறுதியில் நிதித் திட்டமிடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அவ்வகையில் செயற்பாடுகளைச் சீராக முன்னெடுக்கக் குறைந்தது ரூ. 100,000.00 மாதாந்தம் தேவை என்பதும் இனங்காணப்பட்டது. நிறுவனங்கள் சார்ந்தும் செயற்பாட்டாளர்கள் சார்ந்தும் 12 நன்கொடையாளர்களும் இனங்காணப்பட்டனர்.
நிதித் திட்டமிடலையும் மாதாந்த முதன்மை நிதிப் பங்களிப்பாளர்களை இனங்கண்டு ஒருங்கிணைக்கும் பணிகளையும் நூலகத்தின் முதன்மை நிறைவேற்றுப் பணிப்பாளரான க.சசீவன் மேற்கொண்டிருந்தார்.
அவ்வகையில் மாதாந்த முதன்மை நிதிப் பங்களிப்பாளர்களாகப் பங்களிக்க முன்வந்த பன்னிருவரில் மூவரால் பல்வேறு காரணங்களால் அப்பங்களிப்பினைச் செய்ய முடியவில்லை. அவ்வகையில் கிடைக்காத மூன்று மாதங்களில் ஒன்றுக்கு மட்டும் இன்னொரு பங்களிப்பினைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. அவ்வகையில் இந்நிதித் திட்டமிடலின் பெறுபேறு 83% ஆகும்.
மாதாந்த முதன்மைப் பங்களிப்பாளர்களதும் அவர்களது பங்களிப்பினதும் விபரம் வருமாறு:
1. யனவரி – கவிஞர் மஹாகவி நினைவாக அவரது குடும்பத்தினர். (112,050)
2. பெப்ரவரி – லண்டன் என்ஃபீல்ட் நாகபூஷணி அம்மன் கோவில் (89,500)
3. மார்ச் – மார்ச் – 8 பெண்கள் நாளை முன்னிட்டு பெண்ணியம், தலித்தியம் இணையச் சஞ்சிகைகள். (100,000)
4. ஏப்ரல் – கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞானபீட தமிழ் பழைய மாணவர்கள். (70,000)
5. மே – தொழிலாளர் தினத்தை முன்னிட்டு புகலிட சிந்தனை மையம். (145,133)6. யூன் – ஏதிலிகள் அமைப்புடன் இணைந்து கனடா வாழ் நூலக அன்பர்கள். (108,500)
7. யூலை – சஞ்சீவன் நினைவாக யாழ் இந்துக் கல்லூரி 2001 உயர்தரப்பிரிவு மாணவர்கள். (142,581)
8. ஓகஸ்ற் – கிடைக்கவில்லை
9. செப்ரெம்பர் – தர்மதேவி சபாரத்தினம் அவர்கள் ஞாபகமாக சபாரத்தினம் அவர்கள். (100,000)
10. ஒக்ரோபர் – அமரர் சு. வேலுப்பிள்ளை நினைவாக நாவற்குழி மகாவித்தியாலய பழைய மாணவர்கள். (107,365)
11. நவம்பர் – தென் கலிபோர்னியா வாழ் நூலக அன்பர்கள். (188,193)
12. டிசம்பர் – கிடைக்கவில்லை
மாதாந்த நிதிப் பங்களிப்புக்களில் மிகக் கூடிய தொகை தென்கலிபோர்னியாவிலிருந்து கிடைத்தது. அச்செயற்பாட்டை ப.பிரதீபன் மேற்கொண்டிருந்தார்.
இதுதவிர சமுத்திரா எனும் அன்பர் மாதாந்தம் ரூ. 10,000 வீதம் பத்து மாதங்கள் பங்களித்து வந்தார் என்பதும் குறிப்பிட வேண்டியதாகும்.
இந்த நிதிப் பங்களிப்புக்கள் கிடைத்தமையானது 2010 இல் நிறுவனச் செயற்பாடுகளைத் திறம்பட ஒருங்கிணைப்பதைச் சாத்தியமாக்கியது. அவ்வகையில் அவற்றை திட்டமிட்ட, ஒருங்கிணைத்த, சேகரித்த, பங்களித்த, சாத்தியமாக்கிய அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நிதிப் பங்களிப்புக்கள் 2010
2010 இல் சுமார் 136 நன்கொடையாளர்கள் ஏறத்தாழ 1.6 மில்லியன் இலங்கை ரூபாக்களை நூலக நிறுவனத்துக்கு வழங்கினர். 2009 உடன் ஒப்பிடுகையில் நன்கொடையாளர் எண்ணிக்கை ஏறத்தாழ இருமடங்காகி உள்ளதுடன் நன்கொடைத் தொகை 55% ஆல் அதிகரித்துள்ளது. பங்களித்த அனைவரது பெயர், பங்களிப்பு விபரங்களையும் நிறுவன வலைத்தளத்தில் பார்வையிடலாம். அத்துடன் நிறுவனத்தின் 2010 ஆண்டறிக்கையிலும் அவ்விபரங்கள் வெளியிடப்படும். சில பங்களிப்பாளரின் பெயர் விபரங்கள் தெரியாததால் அவை நலன்விரும்பி என்பது போன்ற பெயர்களில் உள்ளன.
2010 டிசம்பரில் 2011 க்கான இரு நன்கொடைகள் கிடைத்தன. அவை 2010 வரவுசெலவுக்குள் சேர்க்கப்படவில்லை. அவற்றின் விபரம் இவ்வறிக்கையில் கீழே உள்ளது.
2010 நிதி வரவின் சுருக்கம் வருமாறு
31.12.2009 மீதி 7,360.56
நன்கொடைகள் 1,645,524.00
வங்கி வருமானம் 1,797.44
மொத்தம் 1,654,682.00
2010 இல் இரு தன்னார்வலர்களின் பெயரிலான வங்கிக் கணக்கொன்றே பயன்படுத்தப்பட்டது. அது சேமிப்புக் கணக்கு என்பதால் சிறுதொகை வட்டி கிடைத்தது. அதிலிருந்து வங்கிச் செலவுகள் போக எஞ்சியதொகையே வங்கி வருமானம் எனக் குறிப்பிடப்படுகிறது. ஆண்டு இறுத்யில் துண்டுவிழுந்த தொகையான 8,481 நன்கொடையாளரொருவரால் மீள்நிரப்பப்பட்டது.
நிதிப் பங்களிப்புக்களாக மேலே குறிப்பிடப்பட்டவை அனைத்துமே காசாகப் பெறப்பட்டவை அல்ல என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். வழங்கிச் செலவுகள், சில பயணச் செலவுகள், வெளிவன்தட்டுக்கள் போன்றவை அன்பளிப்புச் செய்யப்பட்டவை அல்லது பங்களிப்பாளர்களால் நேரடியாக வழங்கப்பட்டவை ஆகும். எமக்குச் சரியாகத் தெரிந்த தொகைகளை மட்டுமே இங்கு சேர்த்துள்ளோம். தெரியாத தபாற்செலவுகள் உள்ளிட்ட சில தொகைகள் சேர்க்கப்படவில்லை.
மேலும் தன்னார்வலர்களின் நேரம், உழைப்பினையும் நிதி அறிக்கையில் சேர்ப்பது சாத்தியமில்லை. நிதியாகக் கிடைத்ததை விட இத்தகைய உழைப்பாகக் கிடைத்தது அதிகம் என்றே நம்புகிறோம்.
செலவுகள் 2010
2010 இன் நூலக நிறுவனச் செலவுகளின் விபரம் வருமாறு
இணைய இணைப்பு 52417
தொலைபேசி 9990
போக்குவரவு 30407
கணினி, உபகரணங்கள் 71900
நிர்வாகச் செலவுகள் 167995
செயற்றிட்ட அலுவலர் 214000
காகிதாதிகள் 3345
சட்டச் செலவுகள் 52500
வழங்கி, ஆட்களப்பெயர் 15700
செய்திமடல் மாதிரி 25000
நூலகத் திட்டம் 562532
ஆய்வகம் 4500
கீற்று 79200
நிறுவனச் செயற்றிட்டங்கள் 268846
அச்சிடல் 22350
இந்திய நிகழ்வுகள் 74000
மொத்தம் 1654682
செலவுகளில் பெரும் பகுதி நூலகத் திட்டம் மின்னூலாக்கம் செய்வதற்கான நிதியுதவி ஆகும். செயற்றிட்ட அலுவலரது முதன்மைப் பணி நூலக வலைத்தளத்தை இற்றைப்படுத்துவதாக இருந்தது.
அத்துடன் நிறுவனம் சார்பாக வாசிகசாலை 2010 எனும் மின்பிரதியாக்கச் செயற்றிட்டத்தையும் மேற்கொண்டிருந்தோம். அச்செயற்றிட்டம் மூலம் ஆயிரத்துக்கும் அதிகமான பத்திரிகைகள் எண்ணிம வடிவமாக்கப்பட்டதுடன் நூலகத் திட்ட தொடரிலக்கத்திலேயே வெளியிடப்பட்டன.
எட்டு அறிமுக நிகழ்வுகளும் இரு செயற்பாட்டளர் சந்திப்பும் ஓர் எண்ணிமமாக்கப் பயிற்சிப் பட்டறையும் 2010 இல் இடம்பெற்றன. இதுதவிர எண்ணற்ற சந்திப்புக்களும் இடம்பெற்றன. ஆண்டிறுதியில் நூலகப் பணிப்பாளர் செயற்பாட்டு விரிவாக்கம், மேம்பாடு தொடர்பில் தமிழகத்துக்கு ஒருபயணத்தையும் மேற்கொண்டிருந்தார். செய்திமடல் ஒன்றை வெளியிடுவதற்கான முன்னோடிச் செயற்றிட்டம் ஒன்றும் செயற்படுத்தப்பட்டது.
2010 இல் இரு இணைய இணைப்புக்கள் பயன்படுத்தப்பட்டன. அச்சிடல் செலவுகளில் பெரும்பகுதி ஆண்டறிக்கைக்குரியதாகும். நூலகத் திட்டம் தவிர கீற்று வலைத்தளம், ஆய்வகம் (IIRAA) ஆகியவற்றுக்கும் நிதியுதவிகள் வழங்கியிருந்தோம்.
நிர்வாகச் செலவுகள் என்பதில் 2010 முதல் 5 மாதங்களுக்கான முகாமையாளர் சம்பளத்துடன் மென்பொருட் செலவுகள், எதிர்பாராத செலவுகள், அறிமுக நிகழ்வு-சந்திப்புச் செலவுகளில் ஒருபகுதி, தபாற் செலவுகள் ஆகியன அடங்குகின்றன. முகாமைத்துவப் பணி மேற்கொண்டோர் செய்த செலவுகளின் மீளளிப்புத் தொகைகளே அவையாகும்.
2010 மேயில் நிறுவனத்தை இலங்கையில் சட்டரீதியாகப் பதிவுசெய்து கொண்டோம். அதற்கு ஏற்பட்ட செலவுகள் சட்டச் செலவுகளாகக் குறிப்பிடப்படுகின்றன.
செலவுகளை வசதிகருதிச் சுருக்கமாகப் பின்வருமாறு பார்க்கலாம்.
தொலைபேசி, இணையம், வழங்கிச் செலவுகள் 78107
கணினி, உபகரணச் செலவுகள் 71900
நிதியளிப்புக்கள் 381995
நன்கொடைகள் 646232
செயற்றிட்டங்கள் 293846
நிறுவனச் செலவுகள் 78195
பயணச் செலவுகள் 104407
மொத்தம் 1,654,682
கடந்தகால நிறுவன நிதிப் பயன்பாடும் பங்களிப்பாளர்களும்
ஆண்டுரீதியாக நூலகச் செலவுவிபரம் வருமாறு
2005-06 61,958.25
2007 371,343.00
2008 269,660.75
2009 1,050,506.00
2010 1,654,682.00
2010 வரை மிக அதிகம் பங்களித்தோரின் விபரம் வருமாறு
இ. பத்மநாப ஐயர் 497,830.00
இ. நற்கீரன் 162,165.00
தில்லை ஜெகநாதன் 100,000.00
சமுத்திரா 100,000.00
ஆ. சபாரத்தினம் 100,000.00
பேர்த் இலங்கைத் தமிழ்ச் சங்கம் 90,840.82
என்பீல்ட் நாகபூசணி அம்மன் கோயில் 89,500.00
ப. பிரதீபன் 77,292.75
ஆழியாள் 75,930.00
2011 க்கான பங்களிப்புக்கள்
2010 டிசம்பரில் 2011 க்கான இரு நன்கொடைகள் கிடைத்தன. அவற்றின் விபரம் வருமாறு
இ. பத்மநாப ஐயர் 50,000.00
சிவயோகம் ரூற்றிங் அம்மன் கோயில் 347,200.00
மொத்தம் 397,200.00
இந்தத் தொகைகள் 2011 நிதியறிக்கையில் சேர்க்கப்படுகின்றன.
மேலும் 2011 இலிருந்து நிறுவனத்தின் பெயரில் தொடங்கப்பட்ட கணக்கிலக்கமே நிதிக் கொடுக்கல் வாங்கலில் பயன்படுகிறது. நூலக நிறுவனத்துக்கு நன்கொடை செலுத்த விரும்புவோருக்காக அவ்விபரம் இங்கே தரப்படுகிறது.
Account Name : Noolaham Foundation
Account Number : 1100063121
Bank : Commercial Bank (Wellawatte Branch), Colombo, Sri Lanka
தொடர்ச்சியாக நன்கொடை அளித்துவரும் அனைவருக்கும் எமது நன்றிகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ச்சியான, அதிகரித்த பங்களிப்பே திட்டமிட்ட நிலையில் செயற்படுத்த முடியாமல் இருக்கும் பல செயற்றிட்டங்களையும் சாத்தியமாக்க வல்லது என்பதையும் உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறோம்.
நன்றி